Published : 23 Feb 2015 04:32 PM
Last Updated : 23 Feb 2015 04:32 PM

இயக்குநர் ஆர்.சி.சக்தி காலமானார்: ‘சிறை’, ‘தர்மயுத்தம்’ படங்களை இயக்கியவர்

பிரபல திரைப்பட இயக்குநர் ஆர்.சி.சக்தி, நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76.

‘ஸ்பரிசம்', ‘சிறை’, ‘வரம்’, ‘உண்மைகள்’,’கூட்டுப்புழுக்கள்’, ‘பத்தினிப் பெண்’, ‘தாலி தானம்’ உட்பட பல படங்களை இயக் கியவர் ஆர்.சி.சக்தி. ரஜினிகாந்த் நடித்த ‘தர்மயுத்தம்’, கமல்ஹாசன் நடித்த ‘உணர்ச்சிகள்’, ‘மனிதரில் இத்தனை நிறங்களா?’ விஜயகாந்த் நடித்த ‘மனக்கணக்கு’ ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். வித்தியாசமான கதை அமைப்பைக் கொண்ட ‘சிறை’ படம் ஆர்.சி.சக்திக்கு புகழை பெற்றுத் தந்தது.

நோய்த் தொற்று காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆர்.சி.சக்தி சமீபத்தில் சேர்க்கப்பட்டார். சிகிச்சையின்போது கொடுக்கப் பட்ட மாத்திரையை விழுங்கிய போது தொண்டையில் மாத்திரை சிக்கியது. இதனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. இந்நிலையில், தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி ஆர்.சி.சக்தி நேற்று மதியம் 1.55 மணியளவில் காலமானார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகில் உள்ள புழுதிக்குளத்தில் பிறந்தவர் ஆர்.சி.சக்தி. சிறுவயதில் படிப்பில் நாட்டம் இல்லாமல் நாடகத்தில் கவனம் செலுத்தினார். அதற்குப் பிறகு கதை, திரைக் கதையில் ஆர்வம் செலுத்தியவர் ‘உணர்ச்சிகள்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார். இதில் கமல்ஹாசன் நாயகனாக நடித்தார்.

கமல்ஹாசனுக்கு நெருக்க மானவர் ஆர்.சி.சக்தி. ‘என் நண்பர். என் குரு' என்று கமலால் அன்போடும் மரியாதையோடும் குறிப்பிடப்படுபவர்.

நடிகர் சிவக்குமார் கூறுகையில், “நல்ல இயக்குநர்களில் ஆர்.சி. சக்தி குறிப்பிடத்தக்கவர். நான் அவருடைய படங்களின் ரசிகன். அவரது படங்களில் வசனம் இயல்பாக அர்த்தமுள்ளதாக இருக்கும். சினிமாவை வித்தியாச மான கோணத்தில் அணுகிய படைப்பாளி. கமல்ஹாசனை ஒரு இயக்குநராக, திரைக்கதை ஆசிரியராக வெளிக்கொண்டு வந்ததில் ஆர்.சி.சக்தியின் பங்களிப்பு பெரிது” என்றார்.

மறைந்த ஆர்.சி.சக்திக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

நடிகை லட்சுமி கண்ணீர்

சிறை உட்பட ஆர்.சி.சக்தியின் பல படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை லட்சுமி கூறுகையில், ‘‘நடிகை, இயக்குநர் என்ற நிலையைத் தாண்டி என்னைத் தன் தங்கையாகவே கொண்டாடியவர் ஆர்.சி.சக்தி. பெண்களின் பார்வையை, அவர்களது மனதை, அவர்களது உள்ளக் கிடக்கையைத் தனது படைப்புகளில் முழுமையாக வெளிப்படுத்தியவர். சமரசம் செய்துகொள்ளாத நேர்மையான படைப்பாளி அவர். தனது கதாபாத்திரத்தை மிகையாக வெளிப்படுத்த ஒருபோதும் அனுமதிக்க மாட்டார். அவரது மறைவை ஈடு செய்யமுடியாத இந்த நேரத்தில் நான் அவரது படங்களின் கதாநாயகி என்பதைப் பெருமையுடன் எண்ணிப் பார்த்துக் கண்ணீர் வடிக்கிறேன்” என்றார்.

பெரும் இழப்பு: கமல் துயரம்

ஆர்.சி.சக்தியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் கமல்ஹாசன் கூறுகையில், ‘‘கலைஞனாக, நண்பனாக, உறவாக ஆர்.சி.சக்தியின் மறைவு எனக்கு பெரும் இழப்பு. நட்பில் துவங்கி உறவாக மாறியதைக் குறிப்பிட்டே ஆகவேண்டும். நல்ல நண்பன். ரசிகன். கடைசி வரை நல்ல நண்பராக இருந்தது எனக்கு மட்டுமல்ல பலருக்கும் அவர் அப்படித்தான். முக்கியமாக, முதல் தர ரசிகராக இருந்த சக்தி அண்ணனின் இழப்பை நான் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் புரிந்துகொள்ள வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x