Published : 25 Feb 2015 12:43 PM
Last Updated : 25 Feb 2015 12:43 PM
பழம்பெரும் திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான ஏ. வின்சென்ட் (86) உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை சேத்துப் பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்ட வின்சென்ட் புதன் கிழமை காலையில் உயிரிழந்தார்.
‘எங்க வீட்டுப் பிள்ளை’ ‘அமர தீபம்’, ‘வசந்தமாளிகை’, ‘உத்தமபுத்திரன்’, ‘கல்யாண பரிசு’, ‘கௌரவம்’, ‘சவாலே சமாளி’, உள்ளிட்ட ஏராளமான படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் வின்சென்ட்.
தமிழில் இவர் இயக்கிய ‘திருமாங்கல்யம்’ நாயகியை முன்னிலைப்படுத்திய திரைப்படம். இந்தப்படத்தில் ஜெயலலிதா நடித்திருந்தார். எம்ஜிஆர், சிவாஜிகணேசன் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் பணியாற்றிய வின்சென்ட் கருப்பு வெள்ளை படங்களில் தொடங்கி வண்ணப் படங்கள் வரைக்கும் தனது ஒளிப்பதிவில் தனி அடையாளத்தை பதித்தவர்.
ஒளிப்பதிவாளர் வின் சென்ட்டின் தந்தை ஜார்ஜ், கேரளாவில் பிரபலமான புகைப்பட கலைஞராக இருந்தவர். அவரது பாதிப்பிலேயே ஒளிப்பதிவில் கவனம் செலுத்த தொடங் கியுள்ளார் வின்சென்ட். கல்லூரி படிப்பை முடித்ததும் முழு நேர சினிமாவில் இறங்கியுள்ளார். மலையாளத்தில் இவர் இயக்கிய ‘துலாபாரம்’ படம் தேசிய விருதை பெற்றது. இந்தப் படத்துக்காக மலையாள நடிகை சாரதா, தனது திரையுலகின் முதல் விருதான மத்திய அரசின் ‘ஊர்வசி’ விருதை பெற்றார். இந்தப்படம் தமிழ், தெலுங்கு இரண்டிலும் பின்னாளில் வெளிவந்தது.
இயக்குநர் ஸ்ரீதரின் நெருக்கமான நண்பரான வின்சென்ட் அவருடன் இணைந்து ‘காதலிக்க நேரமில்லை’, ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ உள்ளிட்ட படங்களில் பணிபுரிந்திருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்ததுடன், 25க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியவர்.
சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள அவரது வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 3 மணிக்கு நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி அருகே உள்ள சர்ச்சில் இறுதி சடங்குகள் நடக்கவிருக் கிறது.
வின்சென்ட் மனைவி மார்கரட். இவர்களுக்கு ஜெயனன், அஜயன் ஆகிய இரண்டு மகன்கன். இருவரும் ஒளிப்பதிவு துறையில் பணி யாற்றுகின்றனர். ஸ்நேகலதா, சுமித்ரா இரண்டு மகள்கள் உள்ளனர். ஸ்நேகலதா பிரபல கலை இயக்குநர் சாபுசிரிலின் மனைவி ஆவார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT