Published : 08 Feb 2015 11:59 AM
Last Updated : 08 Feb 2015 11:59 AM
‘டார்லிங்’ படத்தில் தனது காமெடி நடிப்பின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த மகிழ்ச்சியில் உற்சாகமாக இருக்கிறார் பால சரவணன். தற்போது ‘வலியவன்’, ‘இடம் பொருள் ஏவல்', ‘வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்’ ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் அவரைச் சந்தித்தோம்.
நீங்கள் தொலைக்காட்சியில் இருந்து சினிமா உலகுக்கு வந்தவர். சின்னத்திரைக்கும் சினிமா துறைக்கும் இடையே என்ன வித்தியாசத்தை உணர்கிறீர்கள்?
‘கனா காணும் காலங்கள்’ தொடரில்தான் நான் அறிமுகம் ஆனேன். அதனால் எனக்கு தொலைக்காட்சி என்பது பள்ளி மாதிரி. அங்கிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். தொலைக்காட்சியைப் பொறுத்தவரை ஒரே நாளில் 7 காட்சிகள் வரை எடுப்பார்கள். அங்கு வேகம்தான் முக்கியம். ஆனால், சினிமாவில் ஒரே காட்சியை நாம் சரியாக நடிக்கும்வரை மீண்டும் மீண்டும் எடுப்பார்கள். மற்றபடி வேறு பெரிய வித்தியாசங்கள் ஏதும் இல்லை.
நகைச்சுவை நடிப்பில் உங்கள் குருநாதராக யாரைக் கருதுகிறீர்கள்?
எல்லோருமே எனக்கு குருநாதர்கள்தான். கவுண்ட மணி, வடிவேலு, விவேக், சூரி, சந்தானம் இப்படி எல்லோரிடம் இருந்தும் நடிப்பை கற்று வருகிறேன். அதேநேரத்தில் எனக்கென்று ஒரு தனி பாணியை உருவாக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
நீங்கள் நடிக்க வருவதற்கு உங்கள் குடும்பத்தினர் எந்த வகையில் உதவியாக இருந்தார்கள்?
என்னுடைய அப்பா ரங்கநாதன், அம்மா சாந்தி ஆகிய இருவரும் என் ஆசைகளுக்கு என்றும் தடை போட்டதில்லை. பொறியியல் படிப்பு படித்துக் கொண்டு இருக்கும்போது நான் கிரிக்கெட் விளை யாடுவேன். அப்போது நான் நிறைய காமெடி பண் ணிக்கொண்டு இருப்பேன். ஒரு நாள் எங்கள் கேப்டன், ‘‘டேய்.. நீதான் நல்லா காமெடி பண்றியே. ‘கனா காணும் காலங்கள்’ தொடருக்கு நடிக்க ஆள் எடுக்கறாங்களாம். முயற்சி பண்ணு” என்றார்.
தொடர்ச்சியாக 12 வாரம் அந்த தொடரைப் பார்த்து 12 கேள்விக்கு பதில் அனுப்பினால்தான் நடிப்புத் தேர்வில் கலந்துகொள்ள முடியும் என்று அறிவித்திருந்தார்கள். இதை நான் என் காதலியான ஹேமாவதியிடம் கூறினேன். அவர் எனக்காக அந்தத் தொடரைப் பார்த்து பதில் எழுதி அனுப்பினார். இதைத் தொடர்ந்து எனக்கு நடிப்புத் தேர்வில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. எனக்காக தொடரைப் பார்த்து பதில் எழுதி அனுப் பிய ஹேமாவதி, இப்போது என் மனைவி. நடிப்புத் தேர்வில் நான் தேர்வு பெற்றதும் என் பெற்றோர் என் விருப்பத்துக்கு தடை போடாமல் மகிழ்ச்சியாக அனுப்பிவைத்தனர். அவர்கள் மூவரும் இல்லாவிட் டால் நான் நடிக்க வந்திருக்க மாட்டேன்.
காமெடியனில் இருந்து ஹீரோவாகும் ஆசை உங்களுக்கு இல்லையா?
அந்த ஆசை எனக்கு இல்லை. நான் நிறைய குறும்படங்களில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளேன். அந்த அனுபவத்தை வைத்து நானே ஒரு கதை எழுதி தயார் செய்து வைத்திருக்கிறேன். காமெடியனாக நிறைய படங்களில் நடித்துவிட்டு, ஒரு படத்தையாவது இயக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
‘டார்லிங்’ படத்தைப் பார்த்து நடிகர் விஜய் உங்களைப் பாராட்டினாராமே?
ஆமாம். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அவர் போன் செய்து நீண்டநேரம் பேசினார். ‘டார்லிங்’ மூலமாக அடுத்த இடத்துக்கு சென்றிருக்கிறீர்கள். தொடர்ச்சியாக இதேபோல் காமெடி கதாபாத்திரங் களில் நடித்து பெரிய ஆளாக வளர வேண்டும் என் றார். அவரது பாராட்டு எனக்கு புதிய சக்தியைக் கொடுத்துள்ளது. அவரது நம்பிக்கையை அடுத்த படங்களிலும் காப்பாற்ற வேண்டும் என்பதே என் ஆசை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT