Published : 05 Feb 2015 03:36 PM
Last Updated : 05 Feb 2015 03:36 PM
அஜித் ரசிகர்களின் தன்னை மறந்த உற்சாகக் கொண்டாட்டங்களுடன் வெள்ளித் திரையில் தோன்றி மறைந்தது 'என்னை அறிந்தால்' என்ற படத் தலைப்பு. அந்த ஆரவாரத்தின் சொச்சம், திரையில் தோன்றிய நடிகை அனுஷ்காவுக்கும் கிடைத்தது.
'தெறி மாஸ் என்ட்ரி'யாக இருக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் சீட்டில் இருந்து எழுந்த 'தல' ரசிகர்களுக்கு, ஆர்ப்பாட்டமில்லாமல் அழகியலுடன் அஜித்தைக் காட்டியதிலேயே, கெளதம் வாசுதேவ் மேனன் குறிப்பால் சொல்லிவிட்டார், இது 'இந்த' இயக்குநரின் படைப்பு என்று.
புத்தம் புது தோற்றத்துடனும் தோரணையுடனும் சத்யதேவ் எனும் கதாபாத்திரத்தில் அஜித் நடந்து வருவதைக் கண்டதும், ஹாரிஸின் பின்னணி இசையை விழுங்கிவிட்டன விசில் சத்தங்கள். அடுத்த சில காட்சிகளிலேயே நடிகர் விவேக், நடிகர் அருண் விஜய் ஆகியோரை ரசிகர்கள் அமர்க்களமாக வரவேற்க, திரையில் விரிகிறது கதையும் கதைக் களமும்.
காவல் துறை உலகம், நிழல் உலகம் மற்றும் இவ்விரு உலகைச் சேர்ந்தவர்களின் அக உணர்வுகளுடனான கதை கொண்ட திரைக்கதைப் பயணிக்கிறது.
அஜித் ரசிகர்கள் தங்கள் ஆரவாரத்தை மூட்டை கட்டிவிட்டு, கெளதம் வாசுதேவ் மேனனின் படத்தைப் பார்க்கத் தொடங்குகின்றனர். அதாவது, திரையரங்கில் அமைதி நிலவத் தொடங்குகிறது.
'காக்க காக்க', 'வேட்டையாடு விளையாடு' படங்களின் மேம்பட்ட பதிப்பில், அதிரடி போலீஸாக வலம் வருவதைக் கொண்டாடிய ரசிகர்கள், 'வாரணம் ஆயிரம்' உணர்வுபூர்வ காட்சியமைப்புகளையும், 'விண்ணைத்தாண்டி வருவாயா' பாணியிலான காதல் உரையாடல்களையும் அஜித் அலட்சியமாகக் காட்டியதை அமைதியாகப் பார்த்து வியக்கத் தவறவில்லை.
நடிகை த்ரிஷாவின் பங்களிப்பு கச்சிதமாக இருந்தது. தேவையற்ற கவன ஈர்ப்பு தரவில்லை என்பதால், அவர் மீதான ரசிகர்களின் ஈடுபாடு குறைவாகவே இருந்ததைக் காண முடிந்தது.
விக்டர் எனும் கதாபாத்திரத்தில் அருண் விஜய் தோன்றியதில் இருந்து, அவருடன் சம்பந்தப்பட்ட ஃப்ளாஷ்பேக் விரிந்தது வரையில் அவரது கதாபாத்திரம் ஓரளவு கவனத்தை ஈர்த்தது.
சில பல பரபரப்புகளுக்குப் பின் 'இதான் டாக்டர் நடந்தது' என்று ஃப்ளாஷ்பேக் முடிந்த பிறகு, அடுத்த 'ஆட்டம்' தொடங்குவதற்கான அச்சாரத்துடன் இடைவேளை விடப்பட்டது. முதல் காட்சிக்கு வந்தவர்களின் பெரும்பான்மையானோர் அஜித் ரசிகர்கள் என்பதால், அவர்களது 'தல'யைத் திரையில் காண முடியாத ஏமாற்றம் அவர்களிடம் இருந்தது. எனினும், இது அவர்களுக்கு வேறு விதத்தில் புது அனுபவத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் புரிந்துகொள்ள முடிந்தது.
காபி குடித்தபடி நின்றுகொண்டிருந்த ரசிகர் ஒருவரிடம் பேச்சுகொடுத்தபோது, "'தல' படம் மாதிரி 'மாஸ் மேட்டர்' இல்லை... பட், ஓகே படம் இன்ட்ரஸ்டிங்கா போகுது" என்ற நிலைத்தகவலை நேரடியாகச் சொன்னார்.
இடைவேளைக்குப் பின், இது கெளதம் வாசுதேவ் மேனன் படம்தான் என்று ஒருமனதாக ஏற்றுக்கொண்டு ரசிகர்கள் பார்க்க ஆரம்பித்தனர். அவர் உருவாக்கிய கதாபாத்திரமான சத்யதேவ் மூலம் அஜித் வெளிப்படுத்தும் உடல்மொழிகளுக்கும், வசன உச்சரிப்புகளுக்கும், மிடுக்கான செய்கைகளுக்கும், தோற்றப் போலிவை காட்டிய விதத்துக்கும் கூட அவ்வப்போது விசிலடிக்க ஆரம்பித்தனர்.
பின்னர், டாப் கியரில் பயணிக்கத் தொடங்கிய திரைக்கதை ரசிகர்களைக் கட்டிப்போட்டது. இதுதான் அடுத்தடுத்து நடக்கக் கூடும் என்ற கணிப்பதற்கான சாத்தியங்களை, தனது முந்தையப் படைப்புகள் மூலம் இயக்குநர் ஏற்படுத்தித் தந்திருந்தாலும், அதை எப்படி அஜித்தை வைத்து விறுவிறுப்பூட்டுகிறார் என்பதில் கவனம் சென்றது.
அதேநேரத்தில், சுமார் ஒன்றைரை மணி நேரம் அஜித்தின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்த ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும், தனது தோற்றத்தாலும், நடிப்பாற்றலாலும் ஈர்க்கத் தொடங்கினார் 'விக்டர்' அருண் விஜய். அவ்வப்போது அவருக்கும் விசில் பகிரப்பட்டது. ஒரு கட்டத்தில், கதையை நகர்த்துவதே அருண் விஜய்தான். அந்த அளவுக்கு வலுவான கதாபாத்திரத்தை நேர்த்தியாகச் செய்திருக்கிறார் அருண் விஜய்.
ஆனால், ரசிகர்கள் கவனம் ஈர்க்கும் விஷயத்தில் அனுஷ்காவும் த்ரிஷாவும் வாய்ப்பைத் தவறவிட்டனர் என்றே சொல்லலாம். ஏனெனில், அவர்கள் தோன்றும் காட்சிகளில் எல்லாம் ரசிகர்களின் கவனம் முழுவதுமே அஜித் மீதுதான் இருக்கும். அந்த அளவுக்கு அஜித் கதாபாத்திரத்தைச் செதுக்கியிருக்கிறார் இயக்குநர்.
அஜித், அருண் விஜய்க்கு அடுத்தாக, ரசிகர்களை 'அட' போட வைத்திருக்கிறார் பேபி அனிகா. கண்களால் பேசி கரகோஷத்தை வாங்கிச் சென்ற அவர், மலையாளத்தில் '5 சுந்தரிகள்' படம் மூலம் வெகுவாக பாராட்டைப் பெற்ற குழந்தை நட்சத்திரம்.
'பச்சைக்கிளி முத்துச்சரம்' ஜோதிகா கதாபாத்திரத்தை நினைவூட்டிடக் கூடாது என்பதற்காகவே அருண் விஜய்யுடன் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கரம் பிடித்த பார்வதி நாயரின் கதாபாத்திரத்தைப் பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் ரசிகர்கள் மனதில் பதியாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர்.
தேவையான அளவில் பின்னணி இசையையும், காட்சியமைப்புகளுக்கு ஏற்ற பாடல்களையும் தந்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ். அதாரு பாடலுக்கு தியேட்டர் ஆட்டம் கண்டது. அதேவேளையில், மெல்லிசைப் பாடல்களுக்கு இயக்குநர் அமைத்த உணர்வுபூர்வ காட்சிகளை ரம்மியமாக ரசித்தனர் ரசிகர்கள். ஒளிப்பதிவு உள்ளிட்ட உள் விவகாரங்களை இந்து டாக்கீஸ் விமர்சனக் குழு பார்த்துக்கொள்ளும்.
ஒட்டுமொத்தமாக, ரசிகர்களுடன் தியேட்டரில் அமர்ந்து படம் பார்த்தபோது, கெளதம் வாசுதேவ் மேனன் 'வாய்ஸ் ஓவர் விவரிப்பு' உள்ளிட்ட தனக்கே உரிய தனித்துவத்துடன் மிடுக்கான காவல் அதிகாரிகள், துடுக்கான தாதாக்கள், இவர்களின் இழப்பு, சோகம், காதல், பிரிவு, பழிவாங்கல், வன்மம், தோல்வி, வெற்றிக் கொண்டாட்டங்கள் அடங்கிய அக வாழ்க்கையை அஜித், அருண் விஜய் உள்ளிட்டோரின் யதார்த்த நடிப்பு என்ற பக்க பலத்துடன் 'என்னை அறிந்தால்' என்ற படத்தைத் தந்திருப்பதைக் காண முடிந்தது.
குறிப்பாக, துருத்தாத தூய தமிழில் உரையாடலை வசனமாக வடிவமைத்தது தனிச்சிறப்பு. வழக்கம்போல் ஆள்கடத்தல் விவகாரத்தைத் தொட்டிருந்தாலும், அதற்கான காரணமாக 'மருத்துவ' பின்னணியை காட்டியிருக்கும் விதம் ரசிகர்களுக்கு புதுத் தகவல். இரண்டாம் பாதியில் அஜித் - அருண் விஜய்க்கு இடையிலான பரமபத / ஆடுபுலியாட்டம் 'ஆரண்ய காண்டம்' பார்க்கத் தவறியவர்களுக்கு அருமை விருந்து.
அஜித் ரசிகர்களிடம் இடைவேளையில் இருந்த வெறுமை, படம் முடிந்த பிறகு காணவில்லை. " 'தல'யோட தாறுமாறு பெர்ஃபார்மன்ஸ்ல ஜி.வி.எம்.மின் பக்கா 'காப்' மூவி பாஸு..." என்றார் ஒரு ரசிகர். "ஃபர்ஸ் ஆஃப்ல 15 மினிட்ஸ், செகண்ட் ஆஃப்ல 10 மினிட்ஸ் ட்ரிம் பண்ணிட்டா படம் தெறி மாஸு" என்று வாய்மொழியில் எடிட்டிங்கில் ஈடுபட்டார் இன்னொரு ரசிகர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT