Published : 13 Apr 2014 10:23 AM
Last Updated : 13 Apr 2014 10:23 AM

நான் சிகப்பு மனிதன்: திரை விமர்சனம் - இந்து டாக்கீஸ் குழு

கண்ணீருக்கும் தண்ணீருக்கும் இடையே துளிர்க்கும் காதலைச் சிதைக்கும் துரோகத்தை எதிர்கொள்ளும் ரௌத்திரம்தான் நான் சிகப்பு மனிதன்.

இந்திரனும் (விஷால்) அவன் நண்பர்களும் துப்பாக்கி ஒன்றை வாங்கிக்கொண்டு யாரையோ பழி தீர்க்கப் புறப்படும் புள்ளியில் படம் தொடங்குகிறது. துப்பாக்கிக்கு உடனடியாக வேலை கொடுக்காமல் இந்திரன் தன்னைப் பற்றிச் சொல்ல ஆரம்பிக்கிறான்.

இந்திரனுக்கு நார்கோலெப்ஸி (Narcolepsy) என்னும் தூக்கக் கோளாறு இருக்கிறது. அதீதமான மகிழ்ச்சி, வருத்தம், பதற்றம், அதிர்ச்சி, பெரிய சத்தத்தைக் கேட்பது இப்படி எது நடந்தாலும் அவனுக்குச் சட்டென்று தூக்கம் வந்துவிடும். இதனால் அவனுக்கு வேலை கிடைப்பதில் பிரச்சினை. பாலுறவிலும் அவனால் ஈடுபட முடியாது என்பதால் கல்யாணமாவதிலும் பிரச்சினை. அரிதான இந்த நோய்க்கு சிகிச்சையே இல்லை.

பணக்காரப் பெண்ணான மீராவின் (லக்ஷ்மி மேனன்) உதவி யால் இந்த நோயை வெல்லும் வழியைக் கற்றுக்கொள்கிறான். அவர்களுக்குள் மலரும் காதல் திருமணமாகப் பரிணமிக்கும் தருணத்தில் பேரதிர்ச்சி ஒன்று தாக்குகிறது. அதற்குப் பழிவாங்க நாயகன் போராடுகிறான்

வழக்கமான காதல், வழக்க மான அதிர்ச்சி, வழக்க மான பழிவாங்கல். ஆனால் நார்கோ லெப்ஸியால் பாதிக்கப்பட்ட இளைஞன் அதை மீறி எப்படிக் காதலிக்கிறான், எப்படிப் போராடி வெல்கிறான் என்பதுதான் வித்தியாசம். அதைப் பெருமளவில் நம்பகத்தன்மையுடன் சொல்லியிருக்கிறார் இயக்குநர் திரு. தூங்குபவனைப் பிணமாகக் காட்டிக் காசு வசூலிப்பது, தண்ணீருக்குள் அமிழ்ந்து உறவு கொள்வது போன்ற அபத்தங்களை விட்டுவிட்டால் நார்கோ லெப்ஸியைக் கையாண்ட விதத்துக்கு சபாஷ் போடலாம். திரைக்கதையைப் பெருமளவில் கச்சிதமாகக் கட்டமைத்ததற்காகவும் பாராட்டலாம்.

இந்திரனால் இயல்பான வாழ்க்கை வாழ இயலாது என்று தெரிந்தும் மீராவுக்கு அவன் மேல் வரும் காதல், அதைக் கண்டு அவன் அம்மாவுக்கு வரும் சந் தோஷம் ஆகியவை நன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. தூக்கக் கோளாறைச் சமாளிக்கும் வழி கண்டுபிடித்த உடனேயே காதலர்கள் குழந்தை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் இறங்குவதும் உடனே நாயகி இரண்டு மாத கர்ப்பமாக ஆவதும் சினிமாத்தனம்.

தூக்கக் கோளாறிலிருந்து விடுபடுவதற்கான நாயகனின் போராட்டம் நம்பும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஜகனின் துணுக்குகள், இயல்பான காதல் காட்சிகள், அம்மாவின் அப்பாவித்தனம் ஆகியவற்றுடன் ஒரு கிரைம் கதையைப் பெருமளவுக்கு விறுவிறுப்புடன் தந்திருக்கிறார் திரு.

அண்மையில் வந்த பல படங்களில் நண்பனின் துரோகம் இடம்பெற்றாலும் அந்த துரோகத்துக்குச் சொல்லப்படும் காரணம் புதிதாக இருக்கிறது. கருணா - அரவிந்த் கவிதா துணைக்கதையில் வரும் திருப்பங்கள் விறுவிறுப்பைக் கூட்டுகின்றன. ஆனால் நண்பன் அவ்வளவு பெரிய தவறைச் செய்வதற்காகச் சொல்லப்படும் காரணம் வலுவானதாக இல்லை.

முதல் பாதி கலகலப்பும் காதலுமாக நகர்கிறது. இரண்டாம் பாதி தீவிரமாகிறது. கிளை மாக்ஸை நோக்கிய காட்சிகள் நீண்டுகொண்டேபோகும்போது படம் சற்றுத் தொய்வடைகிறது. பரவலாக அரங்கேறும் தவறுகளைச் சுட்டிக்காட்டும் வகையில் கள்ள உறவு படமாக்கப்பட்டாலும் அதை இவ்வளவு அப்பட்டமாகக் காட்டியிருக்க வேண்டுமா என்னும் கேள்வி எழுகிறது.

இயலாமையின் ஆற்றாமை, தயக்கத்துடன் கூடிய காதல், வஞ்சிக்கப்பட்டதன் குமுறல், பழிவாங்கும் ஆவேசம் ஆகியவற்றை விஷால் நன்றாகச் சித்தரித்திருக்கிறார். நடனத்தில் மெருகு கூடியிருக்கிறது.

லக்ஷ்மி மேனன் முதல் பாதி முழுவதிலும் தன் துள்ளலான நடிப்பினால் கவர்கிறார். வன்முறைக்கு உள்ளாகும்போது உணர்ச்சியைக் காட்டுவதில் மனதைத் தொடுகிறார்.

சரண்யா, ஜெயப்பிரகாஷ், வ.ஐ.ச. ஜெயபாலன் ஆகியோரின் பங்கும் நடிப்பும் நன்றாக அமைந் திருக்கின்றன. சுந்தர் ராமுவின் நடிப்பு மனதில் நிற்கிறது. சிறிய, வலுவான வேடத்தில் அழுத்தமாகத் தடம் பதிக்கிறார் இனியா.

ஜி.வி. பிரகாஷ் இசையில் ஒரு மெலடி யும் குத்துப் பாடலும் பரவாயில்லை. பின்னணி இசை பல இடங்களில் பொருத்தமாக உள்ளது. சில இடங்களில் ஒட்டாமல் ஒலிக்கிறது.

பாடல்களைப் பார்வையாளர்களின் மனதில் நிற்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் ரிச்சர்டு எம். நாதன். நேர்த்தியாக எடிட்டிங் செய்திருக்கும் ஆன்டனி எல். ரூபனையும் பாராட்ட வேண்டும்.

சில உறுத்தல்கள், இரண்டாம் பாதியின் தொய்வு ஆகியவற்றைத் தவிர்த்திருந்தால் ‘நான் சிகப்பு மனிதன்’ இன்னும் ஜொலித்திருப்பான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x