Published : 11 Jan 2015 03:38 PM
Last Updated : 11 Jan 2015 03:38 PM
ஜனவரி 15ல் C2H படங்கள் வெளியிடுவதாக இருந்த முயற்சி ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் சேரன் அறிவித்துள்ளார்.
ஜனவரி 15ம் தேதி சேரன் இயக்கி தயாரித்திருக்கும் 'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' திரைப்படத்தின் டி.வி.டிக்களை C2H நிறுவனம் மூலமாக நேரடியாக வீடுகளுக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது அந்த முயற்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் சேரன் தெரிவித்திருக்கிறார். இது குறித்து சேரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"திரைப்படத்துறையின் நலன் கருதி, சிறு தயாரிப்பாளர்களின் நலன் கருதி திரைப்படங்களை நல்ல நோக்கத்தோடு மக்களிடம் கொண்டு சேர்க்க தொடங்கப்பட்டதே C2H நிறுவனம். திரையரங்கங்கள் அல்லாமல் பிற வழிகளிலும் திரைத்துறைக்கும் வரும் வருமானத்தை ஒன்று சேர்த்து தயாரிப்பாளர்கள் நலம் பெறும் எண்ணத்தோடு கடந்த ஒரு வருட காலமாக உழைத்து தமிழகம் முழுவதும் 156 டிஸ்ட்ரிப்யூட்டர்களையும், 5000 டீலர்களையும் உருவாக்கியுள்ளோம். இவர்களின் ஒத்துழைப்போடு தமிழகம் முழுவதும் தலை விரித்தாடும் PIRACY MARKET திருட்டு DVD வியாபாரத்தை தடுக்க திரைக்கு வரும் புதிய திரைப்படங்களை வெளியாகும் அதே நாளில் ரூ.50 விலையில் மக்களிடம் நேரடியாக கொண்டு சேர்த்து தயாரிப்பாளர்களின் முதலீட்டை மீட்டெடுக்க வழி செய்வது தான் இந்நிறுவந்த்தின் நோக்கம்.
அதே நேரம் ஆரம்பத்தில் இருந்து திரையரங்கங்களிலும் கண்டிப்பாக C2Hன் திரைப்படங்கள் வெளியிடப்படும் என சொல்லி வந்தோம். அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டோம். தற்போது திரைப்படத்துறையின் சூழலை புரிந்து கொண்ட திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும் தயாரிப்பாளர்களுக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு பேசி முடிவெடுக்க முன் வந்திருக்கிறார்கள். அவர்களின் கருத்துகளை ஏற்று, அனைவரது நன்மைகளையும் கருதி அவர்களோடு பேசி முடிவெடுத்த பின் C2H தங்களின் முதல் திரைப்படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறது. ஜனவரி 15ம் தேதி வெளியிடுவதாக இருந்த முயற்சியை ஒத்தி வைத்து திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் முடிவுக்கு பின் தமிழகம் முழுவதும் திரையரங்குகளிலும், மற்ற முறைகளிலும் வெளியிடலாம் என C2H நிறுவனம் முடிவு செய்திருப்பதால் தற்போதைய ஜனவரி 15 வெளியீடு என்ற நிலை மாற்றப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கிறோம். " என்று விளக்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT