Last Updated : 23 Jan, 2015 02:34 PM

 

Published : 23 Jan 2015 02:34 PM
Last Updated : 23 Jan 2015 02:34 PM

லிங்கா இழப்பு விவகாரம்: தகவல் திரட்டுகிறார் ரஜினி!

லிங்கா' இழப்பீடு விவகாரம் தொடர்பாக, திருப்பூர் விநியோகஸ்தரான சுப்பிரமணியத்திடம் தகவல்களை சேகரிக்க கூறியிருக்கிறார் ரஜினி.

'பாபா', 'குசேலன்' ஆகிய படங்கள் விநியோகஸ்தர்களுக்கு இழப்பு ஏற்பட்டபோது ரஜினிகாந்த், பணத்தை திருப்பிக் கொடுத்தார். இதனை முன்னின்று ஏற்பாடு செய்து எவ்வளவு வசூல், எவ்வளவு இழப்பு என அனைத்தையும் ரஜினிக்கு சேகரித்து கொடுத்தவர் திருப்பூர் சுப்பிரமணியம்.

தற்போது 'லிங்கா' படமும் நஷ்மடைந்துவிட்டது. ஆகையால் ரஜினி முன்வந்து எங்களுக்கு நஷ்டமடைந்த பணத்துக்கு ஆவண செய்ய வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், படக்குழுவினர் யாரும் செவிசாய்க்காத காரணத்தால் விநியோகஸ்தர்கள் தரப்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

திரையரங்கு உரிமையாளர்கள் தங்களிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுக்கிறார்கள் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போலீஸ் தரப்பில் அனுமதி கோரப்பட்டது.

இந்நிலையில், தற்போது திருப்பூர் சுப்பிரமணியத்தை அழைத்து பேசியிருக்கிறார் ரஜினி. 'லிங்கா' எவ்வளவு பணம் கொடுத்து வாங்கினார்கள், எவ்வளவு வசூல் என்ற முழு விவரத்தையும் சேகரித்துவிட்டு தன்னை சந்திக்குமாறு கூறியிருக்கிறார்.

'லிங்கா' படத்தை வாங்கி நஷ்டமடைந்த விநியோகஸ்தர்களுக்கு போன் செய்து, கொடுத்த பணம் எவ்வளவு, வசூல் என்ன என அனைத்து விவரங்களையும் தயார் செய்து தருமாறு கேட்டிருக்கிறார்.

இதனால், ரஜினி தலையிட்டு இருப்பதால் நஷ்டமடைந்த விநியோகஸ்தர்கள் தற்போது சந்தோஷத்தில் இருக்கிறார்கள். 'லிங்கா' தொடர்பான அனைத்து விவரங்களையும் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ரஜினி தலையீடால் 'லிங்கா' பிரச்சினைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x