Published : 03 Jan 2015 10:44 AM
Last Updated : 03 Jan 2015 10:44 AM

லிங்கா பட நஷ்டம்: ஜன-10.ல் விநியோகஸ்தர்கள் உண்ணாவிரதம்

"லிங்கா படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. அதனால் பல கோடிகள் நஷ்டம். திரையரங்கு உரிமையாளர்கள் எங்களுக்கு நெருக்கடி தருகின்றனர். எனவே, நஷ்டமான தொகையை திருப்பிக்கொடுக்க வேண்டும்" என்று விநியோகஸ்தர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தனர்.

இந்நிலையில், 'லிங்கா' படத்தால் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஒரு பதில் சொல்லுங்கள் என்று விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் ஜனவரி 10-ல் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர். இதை ’லிங்கா’ திரைப்படத்தின் திருச்சி, தஞ்சாவூர் விநியோகஸ்தர் சிங்காரவேலன் தெரிவித்தார்.

இது குறித்து வெளியாகியுள்ள ஆடியோ பதிவில் அவர் கூறியிருப்பது:

'லிங்கா' திரைப்படத்தில் நஷ்டம் ஏற்பட்டது என்று ஏற்கெனவே பேசியிருந்தேன். அப்போது லிங்கா இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரும். வேந்தர் மூவீஸ் சார்பாக அம்மா கிரியேஷன்ஸ் சிவாவும் அறிக்கை விட்டனர். 'இந்தப் படம் நிச்சயம் நல்லா ஓடும். மக்கள் கூட்டம் கூட்டமா வர ஆரம்பிச்சிட்டாங்க. விநியோகஸ்தர்கள் கொஞ்சம் அமைதி காக்கணும்' என்று பேட்டியும் கொடுத்தனர்.

ஆனால், விடுமுறை முடிந்து பள்ளி, கல்லூரிகள் எல்லாம் துவக்கப்பட்ட நிலையில் 'லிங்கா' வசூலில் எந்த முன்னேற்றமும் இல்லை.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப்போல முதல் வார கலெக்‌ஷனில் நாங்க கொடுத்த பெரிய தொகையை இந்த வசூல் கவர் பண்ணாது என சொல்லியிருந்தோம். 'லிங்கா' ரிலீஸ் ஆன 22 நாளில் நாங்கள் கொடுத்த தொகையில், 30 சதவிகிதம் மட்டுமே திரும்பப் பெற்றிருக்கிறோம்.

மக்களிடம் இருந்து பாசிடிவ் ரெஸ்பான்ஸ் கிடைக்காததால், ரஜினியை சந்தித்து உண்மை நிலவரத்தை சொல்லவேண்டும் என்று நினைத்தோம். டிசம்பர் 22ல் சென்னை ராகவேர்திரா மண்டபத்தில் அகில உலக ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்ய நாராயணாவிடம் ரஜினியை சந்திக்க வேண்டும் என்று அனைத்து விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் இணைந்து மனு கொடுத்தோம். வேந்தர் மூவிஸ், ஈராஸ் நிறுவனங்களுக்கும் மனு கொடுத்தோம். அவர்களிடம் இருந்து எந்த வித பதிலும் வரவில்லை.

வேந்தர் மூவிஸ் நிறுவனம் ஈராஸ் நிறுவனத்தைக் கேளுங்கள் என்கிறார்கள். ஈராஸ் நிறுவனத்தினர் தயாரிப்பாளரைக் கேளுங்கள் என சொல்கின்றனர்.

45 கோடியில் தயாரிக்கப்பட்ட 'லிங்கா' படத்தை 220 கோடிக்கு வியாபாரம் செய்திருக்கிறார்கள். ஆனால், விநியோகஸ்தர்களுக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை. இதைக் கண்டித்தும், எங்கள் நஷ்டத்தை சரிசெய்ய ஒரு பதில் சொல்லுங்கள் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி ஜனவரி 10-ல் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்க முடிவெடுத்துள்ளோம்.

'லிங்கா' படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள், திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் இந்த உண்ணாவிரத்ததில் கலந்துகொள்கிறார்கள் என தெரிவித்து இருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x