Published : 28 Jan 2015 10:55 AM
Last Updated : 28 Jan 2015 10:55 AM

போலி இயக்குநர்கள் பெருகிவிட்டார்கள்: குமுறுகிறார் இயக்குநர் சரண்

‘ஆயிரத்தில் இருவர்’ படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் பரபரப்பாக இருந்த இயக்குநர் சரணை சந்தித்தோம்.

“இந்தப் படத்தில் முதல் 10 நிமிடத்தில் கதையை சொல்லிவிடுவேன். அதற்கு பிறகு எல்லாமே சம்பவங்கள்தான். முதல் 10 நிமிட கதையை அடிப்படையாக வைத்து நிகழும் நிகழ்வுகள்தான் மொத்த படமுமே” என்று ‘ஆயிரத்தில் இருவர்’ படத்தைப் பற்றிய விளக்கத்துடன் பேச ஆரம்பித்தார் சரண்.

‘செந்தட்டி காளை செவத்த காளை’ படத்தைத்தான் ‘ஆயிரத்தில் இருவர்’ படமாக மாற்றி இருக்கிறீர்களா?

‘செந்தட்டி காளை செவத்த காளை’ படமும் ‘ஆயிரத்தில் இருவர்’ படமும் வெவ்வேறு கதை. அந்தப் படம் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டது. அந்தப் படத்துக்காக நான் பேசி வைத்த நடிகர், நடிகைகள் அனைவருமே ‘ஆயிரத்தில் இருவர்’ கதைக்கு பொருத்தமாக இருந்தார் கள். ஆகையால் அவர்களை வைத்தே இதைப் படமாக்கி விட்டேன். மற்றபடி இரண்டு படங்களுக்கும் சம்பந்தம் இல்லை.

நீங்களும் அஜீத்தும் இணைந்து பல படங்களைக் கொடுத்திருக்கிறீர்கள். மீண்டும் அவருடன் இணையும் திட்டம் இருக்கிறதா?

அஜீத் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். ‘அசல்’ படத்துக்கு பிறகு இன்னொரு படத்தை இணைந்து செய்யலாம் என்று நானும், அவரும் பேசினோம். இதுபற்றி வேறொரு தயாரிப்பு நிறுவனத்திடம் பேசி யிருந்தோம். ஆனால் சில காரணங்களால் அப்படத்தை செய்ய முடியவில்லை. மீண்டும் இணைந்து படம் பண்ணுவதற்கான சூழ்நிலை வரும்போது கண்டிப்பாக பண்ணுவோம்.

எனக்கும் அவருக்குமான நட்பு எப்படி என்றால், நாங்கள் எப்போதுமே திடீரென்றுதான் இணைந்து படம் செய்ய முடிவெடுப்போம். அவர் கூப்பிட்டு பேசிய அடுத்த நாள் முதல் படத்துக்கான வேலைகளைத் தொடங்கிவிடுவோம். ‘அட்டகாசம்’, ‘அசல்’ எல்லாமே அப்படித்தான் நடந்தது. அந்த மாதிரியான வாய்ப்பு எப்போது வேண்டு மானாலும் வரலாம்.

‘காதல் மன்னன்’ படத்தில் அஜீத்தை சாக்லெட் பாயாக காட்டினீர்கள். ஆனால், தற்போது அவர் கமர்ஷியல் படங்களில் சிக்கிக் கொண்டாரே?

நான் ‘காதல் மன்னன்’ படம் பண்ணியதே ஒரு கமர்ஷியல் பார்வையில்தான். மறைந்த இயக்குநர் பாலசந்தர் அப்படத்தின் முதல் பிரதியைப் பார்த்துவிட்டு, “இந்த கதையை மூன்று விதமாக எடுக்கலாம். அந்த மூன்று விதங்களில் நீ கமர்ஷியலாக பண்ணி யிருக்கிறாய். நல்லாயிருக்கு” என்று பாராட்டினார்.

தற்போது ஒரு குறும்படம் இயக்கி வெற்றி பெற்றாலே சினிமா இயக்குநர் ஆகிவிடலாம் என்ற சூழ்நிலை உருவாகிவிட்டதே?

இது வரவேற்கத்தக்கதுதான். நல்ல படம் எடுக்கும் எல்லாருக்குமே இங்கு வாய்ப்பு இருக்கிறது. புதிதாக வருபவர்கள் இயக்குநர் களிடம் இருந்து கற்றுக்கொண்டும் வரலாம், கல்லூரியில் படித்து விட்டும் வரலாம். யாரிடமும் கற்றுக் கொள்ளாமல் இயக்குநர் மணிரத்னம் தனிமுத்திரை பதித்து இருக்கிறாரே.

அதேபோல குறும் படம் எடுத்து சினிமா உலகுக்குள் நுழைபவர்களாலும் தனி முத்திரை பதிக்க முடியும். ஆனால் அதே நேரத்தில் அவர்களை யாரும் விமர்சிக்கக் கூடாது, வரவேற்கும் விதமாகத்தான் பேச வேண்டும் என்று சொன்னால் அது தவறு.

குறும்படம் எடுத்து சினிமாவுக்கு வருபவர்களில் 5 சதவீதம்பேர் நல்ல சினிமாவைக் கொடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் வருகிறார்கள். மீதமுள்ள 95 சதவீதம் பேர் இயக்குநர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்பாக மட்டுமே குறும்படங்களை பயன் படுத்திக் கொள்கிறார்கள். பணம் இருப்பவர்களை ஈர்த்து ஒரு படத்துக்கு முதலீடு செய்ய வைக்கிறார்கள்.

இப்படி நிறையப் பேர் வருவதால் ‘போலி மருத்துவர்’ மாதிரி ‘போலி இயக்குநர்கள்’ பெருகிவிட்டார்கள். அவர்களுக்கான களம் இது அல்ல என்பதை மிகுந்த வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.

சரண்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x