Published : 24 Dec 2014 01:20 PM
Last Updated : 24 Dec 2014 01:20 PM
மறைந்த கே.பாலசந்தர் நினைவாக சினிமாவுக்கான கல்விக்கூடம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று இயக்குநர் செல்வராகவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
'இயக்குநர் சிகரம்' என்று அழைக்கப்படும் கே.பாலசந்தரின் உடலுக்கு தலைவர்கள், திரைக்கலைஞர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கே.பாலசந்தர் மறைவு தன்னை எவ்வாறு பாதித்து இருக்கிறது என்பதை இயக்குநர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
"இயக்குநர் கே. பாலசந்தரின் மரணம் என்னை கடுமையாக பாதித்துள்ளது. இந்தத் துயரத்தை, சோகத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. எனது சினிமா பயணத்தை அவருடன் உதவி இயக்குநராக ஆரம்பித்தேன்.
ஒவ்வொரு தருணத்தையும் என்னால் நினைவுகூரமுடிகிறது. முதல் நாள் என்ன செய்வது என்று தெரியாமல் நின்றுகொண்டிருந்த போது, என்னருகில் வந்து மெல்லிய குரலில் 'வெல்கம்' என்று சொல்லி நகர்ந்து போனார். அந்த நொடியை என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துக் கொள்வேன். அவர் எப்போதும் எனக்கு விசேஷமான நபர். நான் எனது பைக்கில் ரேஸ் சென்ற போது, எனது காலரைப் பிடித்து, இனி அப்படி போக மாட்டேன் என சத்தியம் வாங்கிக் கொண்டார். எனது முதல் படத்தை பார்த்த பின் நீண்ட கடிதம் ஒன்றை அனுப்பினார். அதை எப்போதும் கொண்டாடுவேன். என்னை தன் மகனைப் போல பாவித்தார். இதை எழுதும் போதே என் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.
கே.பி சார், உங்கள் இழப்பை, யாராலும் ஈடு செய்ய முடியாது. உங்கள் ஆன்மா சாந்தியடையட்டும். அவரது நினைவாக, சினிமாவுக்கான கல்விக்கூடம் ஒன்றை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்." என்று செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT