Last Updated : 24 Dec, 2014 08:39 AM

 

Published : 24 Dec 2014 08:39 AM
Last Updated : 24 Dec 2014 08:39 AM

எம்.ஜி.ஆரால் திரையுலகுக்கு வந்தவர் கே.பி

தனது தனித்துவம் மிக்க கதை, வசனம், இயக்கத்தால் தமிழ்த் திரையுலகில் புதுமையை ஏற்படுத்திய இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர், ஏராளமான படங்களை இயக்கியிருந்தாலும் அவர் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம்கூட இயக்கியதில்லை. ஆனால், எம்.ஜி.ஆரின் அழைப்பால் அவர் படத்தின் மூலம்தான் பாலசந்தர் திரை யுலகில் நுழைந்தார் என்பது பலருக்குத் தெரியாத செய்தி.

அக்கவுன்டன்ட் ஜெனரல் அலு வலகத்தில் வேலை பார்த்து வந்த பாலசந்தர், நாடகத்தில் ஆர்வம் மிகுந்த வர். திரையுலகுக்கு வருவதற்கு முன்பே அவரது மேஜர் சந்திரகாந்த், மெழுகுவர்த்தி நாடகங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. ஒருமுறை அவரது மெழுகுவர்த்தி நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். அப்போது, பாலசந்தரை பாராட்டிப் பேசிய எம்.ஜி.ஆர்., ‘இவரைப்போல திறமையான இளைஞர்கள் திரைத்துறைக்கு வரவேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார். அந்த அழைப்புக்கு பலன் கிடைத்தது. 1964-ம் ஆண்டு ஆர்.எம்.வீரப்பனின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்து எம்.ஜி.ஆர். நடித்த ‘தெய்வத்தாய்’ படத்தின் மூலம்தான் வசனகர்த்தாவாக திரையுலகுக்கு அறிமுகமானார் பாலசந்தர்.

ஆங்கிலப்புலமை மிக்க பாலசந்தர், அந்தப் படத்தில் எம்.ஜி.ஆருக்கு எழுதிய வசனங்களில் ஆங்கில தாக்கம் அதிகம் இருந்தது. அதைப் பார்த்த எம்.ஜி.ஆர்., ‘படம் பார்க்கும் சாதாரண மக்களுக்கும் வசனங்கள் சென்று சேரவேண்டும். எனவே, வசனத்தை தமிழில் எளிமையாக எழுத வேண்டும்’ என பாலசந்தருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதை ஏற்று என் வசனங்களில் ஜனரஞ்சகம் அதிகம் இருக்குமாறு பார்த்துக்கொண்டேன் என்று பலமுறை கூறியிருக்கிறார் பாலசந்தர். இன்று எம்.ஜி.ஆரின் நினைவு தினம். அதற்கு ஒரு நாள் முன்னதாக பாலசந்தர் மறைந்தாலும் எம்.ஜி.ஆர். அடக்கம் செய்யப்பட்ட அதே நாளில்தான், (டிசம்பர் 25) பாலசந்தரின் இறுதிச் சடங்கும் நடக்க உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x