Published : 27 Dec 2014 03:28 PM
Last Updated : 27 Dec 2014 03:28 PM
அவ்வப்போது சர்ச்சையான கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு கவனம் ஈர்க்கும் இயக்குநர் ராம் கோபால் வர்மா, இயக்குநர் ஷங்கரையும் நடிகர் ரஜினிகாந்தையும் ஒப்பிட்டு பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியிருக்கிறது.
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், ஏமி ஜாக்சன் நடித்திருக்கும் ''ஐ'' படத்தின் தெலுங்கு ட்ரெய்லரைப் பார்த்துவிட்டு தனது ட்விட்டர் தளத்தில் அவர் சில கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவையும் ரஜினிகாந்தையும்விட இயக்குநர் ஷங்கர்தான் பெரிய ஆள் என்கிற ரீதியில் அவர் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ஷங்கர் குறித்து ராம் கோபால் வர்மா தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்திருப்பது:
"இப்போதுதான் ''ஐ'' படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தேன். இந்த சங்கராந்தி கண்டிப்பாக சங்கரின் ராத்திரியாக மாறும். 'ஐ' படத்துக்கு போட்டியாக எந்தப் படத்தை வெளியிட்டாலும் மடத்தனமே.
இந்திய இயக்குநர்கள் ஒவ்வொரும் ஏன் நம் எல்லைகளை நாம் இன்னும் விரிவுபடுத்தவில்லை என யோசிக்க வைக்கும் திரைப்படமாக 'ஐ' இருக்கும்.
இந்தியப் படங்களை ஹாலிவுட் கவனிக்க 'ஐ' ஒரு காரணமாக இருக்கும். நம் கவனத்தைக் கவரும், மின்சாரம் பாய்ந்ததைப் போல உற்சாகமூட்டும் வகையில், ரஜினிகாந்தைவிட ஷங்கர் உயர்ந்து நிற்கிறார். ஷங்கர் அடுத்து ஆமிர் கானுடன் இணையும் திரைப்படம், இந்தியாவின் 'அவதார்' ஆக இருக்கும்.
'ஐ' படத்தின் முதல் நாள் வசூல், லிங்காவின் வசூலை முந்தும் என்பது என் கணிப்பு. அதனால் தான் ரஜினியை விட ஷங்கர் பெரிய ஆளாகத் தகிழ்கிறார் என்று சொல்கிறேன்.
பெரிய பெரிய இயக்குநர்கள் எல்லாம் ஷாரூக், சல்மா, ஆமிர் போன்ற நட்சத்திரங்களை நம்பி இருக்கையில், ஷங்கர் அந்த நட்சத்திர அந்தஸ்தை உடைத்தெறிந்துள்ளார். அதுதான் அவரது சக்தி.
ஷங்கர், எனக்கு உங்கள் ட்விட்டர் முகவரி தெரியாது, ஆனால் உங்களிடம் ஒன்று சொல்ல நினைக்கிறேன். தற்போது ஒட்டு மொத்த இந்தியத் திரையுலகில் இருக்கும் ஒரே ஒரு முன்னோடி நீங்கள்தான். ஆகச் சிறந்த கற்பனை, அடர்த்தி, அசலான பார்வை என்ற வகையில் 'ஐ' ஒரு முன்மாதிரியாக இருக்கும்.
'ஐ' ட்ரெய்லரை பார்த்த பின் பொதுமக்களில் ஒருவனாக எனக்கு தோன்றுவது, தமிழகத்தில் ஜெயலலிதா, ரஜினிகாந்தைவிட ஷங்கர்தான் பெரிய ஆள் என்பதே" என்று ராம் கோபால் வர்மா கூறியிருக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT