Published : 15 Dec 2014 01:12 PM
Last Updated : 15 Dec 2014 01:12 PM
‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் இசை வெளியீட்டுக்கு முன்பே, அப்படத்தின் பாடல்கள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளன.
இயக்குநர் சீனு ராமசாமியின் இயக்கத்தில், ‘இடம் பொருள் ஏவல்’ திரைப்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் முதன்முறையாக இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும் கவிஞர் வைரமுத்துவும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இப்படத்தின் பாடல்களை 18-ம் தேதி வெளியிட தீர்மானிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் பாடல்கள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியாகியுள்ளது.
இதுகுறித்து இயக்குநர் சீனுராமசாமி கூறியதாவது :-
‘இடம் பொருள் ஏவல்’ படத்தில் இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜாவும் கவிஞர் வைரமுத்துவும் முதல் முறையாக இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை டிசம்பர் 18ம் தேதி நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தோம்.
இந்நிலையில் படத்தின் பாடல்கள் இணையதளத்தில் திருட்டுத்தனமாக வெளியானதில் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். இதுபோன்று திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாகும் பாடலை சரியான தரத்தோடு கேட்க இயலாது. படத்தை உருவாக்கிய படைப்பாளி என்ற முறையில் அந்தப்பாடலை தரம் குறைவான நிலையில் கேட்கும்போது மனம் மிகவும் வேதனைப்படுகிறது. திரைத்துறையில் இருக்குமளவுக்கு வேறு எந்த துறையிலும் பாதுகாப்பற்ற தன்மை இருக்குமா என்று தெரியவில்லை.
‘உழுதவன் கணக்கு பார்த்தால் உழக்கு கூட மிஞ்சாது’ என்பார்கள். ஆனால் இங்கே எங்களுக்கு நிலம் கூட மிஞ்சாத நிலை உள்ளது. இதனை தடுப்பதற்கான வலிமையான முறைகளை விரைந்து உருவாக்க வேண்டும்.
இவ்வாறு சீனு ராமசாமி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT