Published : 05 Apr 2014 12:00 AM
Last Updated : 05 Apr 2014 12:00 AM
கோடம்பாக்கத்து படங்களில் இன்றைய ‘போக்கு’ என்ன என்று துழாவினால் கொஞ்சம் கோக்கு மாக்காகத்தான் இருக்கிறது. முழுநீள நகைச்சுவை படங்கள் என்ற போர்வையில், ரசிகர்களை கிச்சுகிச்சு மூட்ட முயற்சித்த பல படங்கள் கடந்த ஆண்டு பெட்டிக்குள் சுருண்டன. சில படங்கள் வெற்றிபெறவும் செய்தன. இந்த ஆண்டு நகைச்சுவை படங்கள் கொஞ்சம் சீரியஸ் வண்ணம் பூசிக்கொண்டு, ரசிகர்களை சிரிக்கவும் வைத்து, சிந்திக்கவும் வைக்கப் போகிறேன் என்று ரசிக மகா ஜனங்களைத் துரத்த ஆரம்பித்திருக்கின்றன.
உதாரணமாக நம்ம கவுண்டர் மீண்டும் ஹீரோவாக அரிதாரம் பூசியிருக்கும் ‘49 ஓ’ படம், தேர்தலைப் புறக்கணிக்கும் ஒரு கிராமத்தின் கதை. இதில் கவுண்டமணியைப் பார்த்து “நாட்டாமை தீர்ப்பை மாத்தி சொல்லு” என்று ஒரு காமெடி ஜூனியர் சொல்லும் அளவுக்கு கவுண்டமணியை வைத்து அரசியல் காமெடி விருந்து படைத்திருக்கிறாராம் அந்தப் படத்தின் இயக்குநர்.
அடுத்து வடிவேலு கிருஷ்ணதேவராயர் போன்ற சாயல்கொண்ட ராஜாவாகவும், அவரது அமைச்சரவையில் வந்து சேரும் தெனாலியாகவும் இரண்டு முக்கியமான வேடங்கள் தவிர, மேலும் மூன்று சஸ்பென்ஸ் தோற்றங்களில் வந்து சிரிக்கவும் சிந்திக்க வைக்கவும் இருக்கிறாராம். திமுகவுக்கு தேர்தல் பிரச்சாரம் செய்யப்போய் கோலிவுட்டால் புறக்கணிக்கப்பட்ட தன் வலிகளை காமெடியாக மாற்றி சில காட்சிகளை இந்தப் படத்தில் அமைத்திருக்கிறாராம்.
இந்த இரண்டு சீனியர்கள் ஒரு பக்கம் இருக்க, ஒரு நாளைக்கு 3 முதல் 5 லட்சம் ஊதியம் வாங்குவதாகச் சொல்லப்படும் சந்தானம், ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் தனது காமெடி புஜபலத்தை காட்ட வருகிறார். தெலுங்குப் பட உலகின் நம்பர் 1 காமெடியனாக இருக்கும் சுனில் சிக்ஸ்பேக் வைத்து நடித்த ‘மரியாத ராவண்ணா’ படத்தின் ரீமேக்கைத்தான் வல்லவனுக்கு புல்லும் ஆயுதமாகச் சுழற்ற இருக்கிறார். ஆனால் சுனிலைப்போல சிக்ஸ்பேக் வைத்து நடித்தால், முன்னணி ஹீரோக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டி வருமே (!) என்று, அதை மட்டும் அடக்கி வாசிக்கிறாராம் சந்தானம்.
அறிமுக நட்சத்திரங்கள் சிலர் நடித்தாலும் சூரி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சவுரிக்காடு’ ரகளையான காமெடிப் படமாக உருவாகி வருகிறதாம்.
காமெடியன்களின் அதிரடிகள் ஒருபக்கம் இருக்க, இப்போது ஹீரோக்களே ஏன் காமெடியை கொஞ்சம் கதையில் தூக்கலாகக் தூவிப் பரிமாறக்கூடாது என்று களத்தில் இறங்கிவிட்டார்கள். இவர்களில் அட்டகத்தி தினேஷ் நடிக்கும் ‘திருடன் போலீஸ்’, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மான் கராத்தே’, அருள்நிதி நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’, அடுத்து நடித்து வரும், ‘நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்’, விமல் – சூரி நடிக்கும் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’என்று இந்தப் பட்டியலும் நீள்கிறது.
இந்த காமெடி போக்கு ஒருபக்கம் இருக்க, சில உதிரிப்போக்குகளும் ரசிகர்களை கவர்ந்திழுக்கின்றன. அழிந்துவரும் கிராமியக்கலைகள் மீது நம்மவர்களுக்கு திடீர் பாசம் வந்துள்ளது. தெருக்கூத்து நாடகம், கட்டைக்கூத்து நாடகம், கரகாட்டம் போன்ற கலைகளை கதைக்களமாக்கி அதிரி புதிரி கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். வசந்தபாலன் இயக்கி வரும் ‘காவியத்தலைவன்’, பாலா இயக்கிவரும் ‘தாரை தப்பட்டை’, ரமேஷ் அரவிந்த் இயக்கிவரும் ‘உத்தம வில்லன்’, அறிமுக இயக்குநர் ஜே.வடிவேல் இயக்கி வரும் ‘கள்ளப்படம்’, குகன் சம்மந்தம் இயக்கிவரும் ‘தரணி’ உட்பட பல படங்கள் கோடம்பாக்கத்தை தெருக்கூத்து மேடையாக்கியிருப்பது ஆச்சர்யம்தான்.
விளையாட்டுக்களை மையமாக வைத்து வெளியான ‘எதிர்நீச்சல்’, ‘வல்லினம்’ படங்களுக்கு கிடைத்த வரவேற்பு ஒருபக்கம் இருக்க, குத்துச்சண்டையை மையப்படுத்தி ஜெயம்ரவி நடிப்பில் கல்யாண் கிருஷ்ணன் இயக்கியிருக்கும் ‘பூலோகம்’, ஓட்டப்பந்தய விரனின் வாழ்க்கையை மையப்படுத்தி, அதர்வா நடிப்பில் ரவி அரசு இயக்கி வரும் ‘ஈட்டி’, கிரிக்கெட்டை மையமாக வைத்து சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு நடிக்கும் படம் ‘ஜீவா’, ‘ஆடாம ஜெயிச்சோமடா’ ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து முடித்திருக்கும் ’ஐ’ என்று ஒரு பக்கம் விளையாட ஆரம்பித்திருக்கிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT