Last Updated : 12 Dec, 2014 10:53 AM

 

Published : 12 Dec 2014 10:53 AM
Last Updated : 12 Dec 2014 10:53 AM

லிங்கா - முதல் காட்சி முதல் பார்வை

திரையில் சென்சார் போர்டு சர்டிஃபிகெட் வந்தபோது காதுகளை ஜவ்விடவைத்த விசில் சத்தம், 'சூப்பர் ஸ்டார் ரஜினி' என்ற எழுத்துகள் தோன்றி மறைவது வரை நீடித்தது... அதான் ரஜினி!

ஆரம்ப காட்சிகளுக்குப் பின், "அவரோட பேரன் ஒருத்தர் இருக்கிறார். அவரை நாம தேடி கண்டுபிடிக்கணும். எங்கே இருக்கிறாரோ" என்று கே.விஸ்வநாத் சொன்னதுதான் தாமதம்... ஏ.ஆர்.ரஹ்மானின் ஆர்.ஆர்.-ஐ மிஞ்சிய ரசிகர்களின் ஆரவாரத்துக்கிடையே திரையில் தோன்றுகிறார் ரஜினி. 'இடையில் நிழல் வடிவில் கோச்சடையானில் கண்டாலும், நிஜத் தோற்றத்தில் ரஜினியைக் காண 4 வருடங்கள் காத்திருந்ததன் பலன் கிடைத்துவிட்டது' என்று அந்த ஆரவாரத்தை அர்த்தப்படுத்திக் கொள்ளலாம்.

ஓபனிங் சாங். ரஜினியின் துடிப்பான அசைவுகளை அங்குலம் அங்குலமாக விசிலடித்து வியப்பை வெளிப்படுத்துகிறார்கள் ரசிகர்கள். திரையில் தோன்றிய முதல் காட்சியில் இருந்தே, இப்படத்தில் தனக்கு இருக்கும் மிகப் பெரிய சவாலை ரஜினி சமாளிக்கத் தொடங்கிவிட்டார் என்பது தெளிவானது. முகத்தில் ஒப்பனைகளால் முழுமையாக மறைக்க முடியாத முதுமை மீது ரசிகர்கள் கவனம் குவியக் கூடாது என்பதற்காக, உடல்மொழிகளில் வித்தியாசங்களைக் காட்டுகிறார். ரசிகர்களின் கவனம் தனது அசைவுகள், நடவடிக்கைகள் மீது மட்டுமே இருக்கும்படி பார்த்துக்கொள்வதற்காக ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் ரஜினி.

இந்தியா சுந்திரம் அடைவதற்கு முன்பு சோலையூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் வறட்சியைப் போக்குவதற்காக, தனது சொந்த முயற்சியாலும், சொத்துகளாலும் மக்களை வைத்தே ஓர் அணையைக் கட்டுகிறார் ராஜா லிங்கேஸ்வரன். அந்த அணையைக் கட்டுவதற்கு அவர் எதிர்கொள்ளும் சவால்கள்... ஃப்ளாஷ்பேக்கில் வரும் இந்தக் கதைதான் படத்தின் மையமும் மேஜர் போர்ஷனுமாகும். அதே அணைக்கு தற்போது வரும் ஆபத்தும், அதைக் களைவதற்கு களமிறங்க வேண்டிய நிலைக்கு ஆளாகும் பேரன் லிங்கேஸ்வரனின் முயற்சியும்தான் எஞ்சிய திரைக்கதை.

சந்தானம், கருணாகரன் உள்ளிட்ட நண்பர்களுடன் ரஜினி அடிக்கும் 'லூட்'களும், இவர்களைச் சுற்றி வளைக்க வரும் அனுஷ்காவின் என்ட்ரிக்குப் பிறகு துவங்கும் லூட்டிகளும் ரசிகர்களை அவ்வப்போது கலகலப்பூட்டின. பல ஜோக்குகளுக்கு ரசிகர்கள் மவுனம் காத்தாலும், இடையிடையே ரஜினி உதிர்க்கும் தத்துவ பஞ்ச்-களால் அரங்கில் நான்கு புறமும் பறக்கிறது விசில்.

ஓடும் ரயிலில் அட்டகாச சண்டைக் காட்சிகளுடன் ஃப்ளாஷ்பேக் தொடங்கியபோது செம மிரட்டல். 'ரஜினிக்கு துணையாக கிராஃபிக்ஸ் இல்லை; கிராஃபிக்ஸுக்கு பக்க பலமாகவே ரஜினி' என்கிற ரீதியிலான அந்த ஸ்டைலிங் ஃபைட், ரஜினி ரசிகர்களுக்கு நிறைவான தீனி.

அதன்பின், இடைவேளை வரையில் மட்டுமின்றி, மிக நீண்ட ஃப்ளாஷ்பேக் முடியும் வரையில் திரையரங்கில் ரசிகர்களிடம் அமைதி நிலவியது, ‘நாம் ரஜினி படம்தான் பார்க்கிறோமா?’ என்கிற சந்தேகத்தை எழுப்பின. அதேவேளையில், ரஜினி பேசும் தத்துவ பஞ்ச்களும், வில்லன் கதாபாத்திரத்தை டீல் செய்யும் விதமும், மக்களிடம் பேசும்போது மிளிரும் உடல்மொழியும் அவ்வப்போது ரசிகர்களைத் தட்டி எழுப்பின.

அனுஷ்காவும் சோனாக்‌ஷியும் இப்படத்தில் ரஜினி பட நாயகிகளாகவே வருகின்றனர். துடிப்பில் அனுஷ்காவும், நடிப்பில் சோனாக்‌ஷியும் சிக்ஸர் விளாசினர். வழக்கம்போது ரசிகர்களின் கவனம் இவ்விருவர் மீதும் அல்லாமல் ரஜினி மீதே இருந்தது.

இயக்குநர் கே.எஸ்.ரவிகுமாரின் உழைப்பு பாராட்டத்தக்கது. 1939-ல் நடக்கும் அணை கட்டும் காட்சிகளில் நூற்றுக்கணக்கானோரிடம் வேலை வாங்கியிருக்கிறார். பீரியட் ஃபீலுக்கு துணை செய்திருக்கிறது ரத்னவேலுவின் ஒளிப்பதிவு. குறிப்பாக, அணையில் இருந்து முதன்முதலில் நீர் திறந்தோடும் காட்சியைக் காட்டிய விதமும், அப்போது உள்ளூர் இசை வாத்தியங்களால் ஒலித்த ரஹ்மானின் பின்னணி இசையும் பிரம்மிப்பூட்டும் அம்சங்கள்.

ஒரு வழியாக ஃப்ளாஷ்பேக் முடிந்து, நிகழ்காலத்துக்கு திரும்பியபோது லிங்கா விஸ்வரூபம் எடுப்பார் என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் நிமிர்ந்து அமர்ந்தனர். அதற்கான ஸ்கோப் திரைக்கதையில் ஓரளவுதான் இருந்ததால், கதைக்கு கடமையாற்றும் வேலையை மட்டுமே ரஜினியால் செய்ய முடிந்தது. எனினும், பைக்கில் பறந்து, பின்னர் நடுவானில் சாகச சண்டை புரிந்தது, ரஜினி ரசிகர்களின் ஏக்கத்தை ஓரளவு பூர்த்தி செய்ததாகவே அமைந்தது.

ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் எடிட்டருக்கு நிறைய வேலை கொடுத்திருந்தால், ஆரம்பம் முதல் இறுதி வரை ரஜினி படம் பார்த்திருக்கும் உணர்வு வந்திருக்குமோ எனத் தோன்றியது. பொதுவாக, ரஜினிக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் ஆடு புலி ஆட்டமும், அதில் தனது ஸ்டைலான சதுரங்க வேட்டையால் ரசிகர்களை வசீகரிப்பதும்தான் ரஜினி படங்களில் டெம்ப் கூட்டும் அம்சம்.

அது, லிங்காவில் மிஸ்ஸாகி இருப்பது, தெரிந்தே செய்ததா அல்லது இயக்குநரின் தோல்வியா என்ற சந்தேகம் எழுகிறது. ஒருவேளை உள்நோக்கம் இருக்கலாம் என்றும் நம்பத் தோன்றுகிறது. ரஜினி இனி துடிப்பையும் ஸ்டைலையும் சற்றே விலக்கி, எமோஷனல் பெர்ஃபார்மன்ஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்ற முடிவுக்கான துவக்கம்தான் லிங்காவோ என்றும் யோசிக்கவைக்கிறது.

ஸ்டைலுக்கு இணையாகவும், சற்றே கூடுதலாகவும் எமோஷனல் காட்சிகளில் ரஜினி கவனம் செலுத்தியிருப்பது தெரிகிறது. அதேபோல், இளம் நாயகிகளுடான டூயட்களில் ஸ்டைலுக்கு கூடுதல் முக்கியத்துவம் தந்து, ரசிகர்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயற்சி செய்வது, ரசிகர்கள் மீதான ரஜினியின் அக்கறையை வெளிப்படுத்தியது.

நாட்டுப்பற்று, சாதி எதிர்ப்பு, குழந்தைக் கல்வி முதலான விஷயங்களை ஒரு சில காட்சிகளாலும், வசனங்களாலும் நிரப்பி இருப்பதும் ரஜினி படம் பார்க்கிறோம் என்ற உணர்வைத் தருகிறது.

சரி, அரசியல்...?

அது இல்லாமல் ரஜினி படமா? ஆங்காங்கே வசனங்கள் மூலம் அரசியல் அழைப்பு, அரசியல் பஞ்ச், அரசியல் நிலை(யில்லா)ப்பாடு முதலானவை திரையில் காட்டப்படும்போது, ரசிகர்கள் அடித்த விசில்களை எப்படி அர்த்தப்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை.

படத்தின் துவக்கத்தில், இப்படத்தின் கதை, மாந்தர்கள், சம்பவங்கள் எல்லாம் கற்பனையே என்று டிஸ்க்ளைமர் போட்டார்கள். ஆனால், தமிழ் சினிமா குறியீட்டு விமர்சகர்கள், லிங்கா படத்தை ஒட்டுமொத்தமாக அரசியல் படமாக கொத்து பரோட்டா போடவும் இடமளிக்கப்பட்டுள்ளது.

ஆம்... லிங்காவில், சுதந்திரத்துக்கு முன்பு அணை கட்டிய கதை - வரலாற்றையும், தற்போது அந்த அணைக்கு அரசியல்வாதியால் ஏற்பட்ட ஆபத்தையும், பென்னி குயிக் - முல்லைப் பெரியாறு மற்றும் கேரள அரசுடன் ஒப்பிட்டு குறியீட்டு ரீதியில் விவாதத்தைத் துவக்கலாம் என்றே தெரிகிறது.

ஒட்டுமொத்தமாக, லிங்காவையும், தியேட்டரில் முதல் காட்சி பார்த்த ரசிகர்களையும் கவனித்துப் பார்த்தபோது மனதில் பட்டது ஒன்றுதான். ‘ரஜினியிடம் இருந்து ரசிகர்கள் எதிர்பார்ப்பது 'ரஜினி' படத்தை மட்டும்தானோ?’ என்ற சந்தேகக் கேள்வியே அது.

என் அருகே ஒரு தீவிர ரசிகர்கள் குழு ஒன்று அமர்ந்து ரஜினியை ரசித்தது. படம் தொடங்கியபோது இருந்த உற்சாகம் அவர்களிடம் படம் முடிந்தபோது அவ்வளவாக இல்லை. தியேட்டரைவிட்டு நகரும்போது, அந்தக் குழுவில் ஒருவரிடம் பேச்சு கொடுத்தேன்...

'படம் எப்படிங்க?' என்றேன்

‘ம்... நல்லா இருக்கே’ என்று பூரிப்பை வரவழைத்துச் சொன்னார் அந்த ரஜினி ரசிகர்.

அதான் ரஜினி!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x