Published : 31 Dec 2014 12:20 PM
Last Updated : 31 Dec 2014 12:20 PM
2014-ம் ஆண்டைப் பொறுத்தவரை குறைந்த பட்ஜெட்டில், சிறுவர்கள் நடிக்க வைத்து ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்குநராக அறிமுகமான படம் 'கோலி சோடா'. ஜனவரி 24, 2014-ல் வெளியான இப்படம் தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர் என அனைவருக்கும் லாபம் ஈட்டிக் கொடுத்தது.
2015-ம் ஆண்டு விக்ரம், சமந்தா நடிக்கும் '10 எண்றதுக்குள்ள' படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் விஜய்மில்டன். 2014-ம் ஆண்டு தனது படத்திற்கு கிடைத்த வரவேற்பு குறித்து விஜய் மில்டன் கூறியிருப்பது:
"ஒளிப்பதிவாளராக இதுவரை 25 படங்கள் பணியாற்றியிருப்பேன். எல்லாப் படங்களிலும் இயக்குநருக்கான என் தேடல் இருந்து கொண்டேதான் இருந்தது. பெரும்பாலும் என் நண்பர்களே இயக்கியதால் மரியாதையுடன்தான் நடத்தினார்கள்.
ஒளிப்பதிவு செய்த போதே திரைக்கதைகள் எழுத ஆரம்பித்தேன். எனக்குள் அது ஒரு பக்கம் நடக்கும், ஒளிப்பதிவு வேலை ஒரு பக்கம் நடக்கும். அப்படி உருவான ஒரு கதைதான் ‘கோலிசோடா’. அக்கதை மூலம் நம் விருப்பப்படி நட்சத்திரங்கள் யாரையும் சாராது அதை உருவாக்க முடியும் என்கிற நம்பிக்கை வந்தது.
கோலி சோடா டீம் - தயாரிப்புச் செலவைக் கணக்கிட்டால் 14 மடங்கு லாபம் தந்த படம். சுமார் 140 திரையரங்குகளில் வெளியாகி கூடுதலாக 60 திரையரங்குகளிலும் வெளியானது. அந்த அளவுக்கு வரவேற்பு பெற்ற ஒரு படம் அது . அதில் எந்த நட்சத்திரமும் இல்லை. வெறும் 5டி கேமராவுடன் 10 பேருடன் கோயம்பேடு மார்க்கெட்டில் எடுத்த படம். என் படக்குழு மொத்தமே 20 பேர்தான் இருப்போம். எளிமையானவர்கள் வலிமையானவர்களாக மாறுவதும், தனக்கான அடையாளம் தேடும் கருத்தும் எல்லாரையும் கவர்ந்தது.
தேசிய விருதுக் குழுவினர் பாராட்டிய படம். ஆனால் மைனர் பசங்க, வன்முறை என்கிற விஷயத்தால் விருது கிடைக்கவில்லை என்று கேள்விப்பட்டேன், மகிழ்ச்சியாக இருந்தது. உதவி இயக்குநர்களிடமிருந்து பாராட்டி 1500 மேசேஜ்கள் வந்ததும் மறக்க முடியாதது.
நான் இப்போது இயக்கும் படம் ’10 எண்றதுக்குள்ள ‘. விக்ரம்தான் நாயகன். சமந்தா, ஜாக்கி ஷெராப், அபிமன்யு சிங், ‘முண்டாசுப்பட்டி’ முனிஷ் நடிக்கிறார்கள். 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. 2 பாடல்கள், க்ளைமாக்ஸ் மட்டும் பாக்கியுள்ளது. ‘கோலிசோடா’ தேடிக் கொடுத்த வாய்ப்புதான் இந்தப் படம். வேறு விதத்தில் சொல்ல வேண்டுமென்றால் ‘கோலி சோடா’வின் சம்பளம்தான் இந்தப்படம். ‘கோலி சோடா’ மூலம் அடைந்த பெரிய ஆதாயங்களில் இது ஒன்று.
முதலில் ‘10 எண்றதுக்குள்ளே’ படத்தில் விக்ரம் ஒப்பந்தமானதே சுவாரசியமானது. ‘கோலிசோடா’ படத்தை சத்யம் திரையரங்கில் பார்த்து விட்டுப் போன் செய்து பாராட்டினார். எனக்கு ஏதாவது கதை இருக்கிறதா என்றார். ஒன் லைன் சொன்னேன், உடனே கூப்பிட்டார். அப்போது இரவு 10 மணி, போய் கதை சொன்னேன், உடனே ஓகே செய்தார். அந்தப்படம்தான் ’10 எண்றதுக்குள்ள’. அவர் எவ்வளவு பெரிய நடிகர். ஆனால் எல்லாவற்றையும் மறந்து தன்னை ஒப்படைப்பவர். அவ்வளவு ஊக்கம், அர்ப்பணிப்பு உள்ளவர். முதல்படம் மாதிரி நினைத்து நடிப்பவர். 15 வயது பையன் போல இயங்குபவர். முருகதாஸ் சாரின் பாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரிக்கிறது.
வண்டி வாகனங்களில் போவோருக்குத்தான் ஒவ்வொரு வினாடியும் முக்கியம் என்பது தெரியும். 600 மைல் வேகத்தில் செல்லும் விமானிக்கு சில வினாடிகள்கூட முக்கியம்தான். தொலைவில் குறுக்கே ஏதாவது வரும்போது அந்த வினாடியில் அவர்கள் சிந்தனை, செயல்படும் வேகம் முக்கியம். லாரியில் காரில் 140கி.மீ வேகத்தில் போகும் போது சில வினாடிகள் கூட முக்கியம்தான். ’10 எண்றதுக்குள்ள’ என்கிற இந்த வார்த்தை பல இடங்களில், பல சூழல்களில் பிரபலம். எனவே வேகம், நேரம் இவற்றைக் குறிக்கும் வகையில் அதை தலைப்பாக வைத்தேன்" என்று தெரிவித்திருக்கிறார் இயக்குநர் விஜய் மில்டன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT