Published : 25 Dec 2014 09:49 AM
Last Updated : 25 Dec 2014 09:49 AM
சினிமா எங்கிருந்து தோன்றியதோ? யார் தோற்றியதோ? அது கி.பி………… ………..ல் தோன்றியிருக்கலாம். என் சினிமா கே.பி-யில் இருந்துதான் தோன்றியது.
‘அ.ஒ.தொ’ படத்தைப் பத்து முறையும் அதன் போஸ்டரை ஆயிரம் முறையும் ரசித்தவன் நான். இன்னும் என் பட போஸ்டர்களில் உங்கள் சாயல் இருக்கும். கொஞ்சம் பின்நோக்கிக் கழுவிப் பார்த்தால் அதன் சாயம் வெளுக்கும்.
என் மூலம் சினிமாவில் எது நடந்திருந்தாலும் அதன் ‘மூலம்’ கே.பி அவர்களே!
உங்கள் ரசிகர்களில் ஒருவனாகத் தொடங்கி… உங்களைக் காதலித்தவர்களில் ஒருவனாக சுருங்கி… பின் நீங்கள் நேசித்தவர்களில் ஒருவனாக இருப்பதென் பாக்கியம்!
சார்… உங்கள் மகனை இழந்து நீங்கள் மயானமாய் அந்தப் பால்கனியில் அமர்ந்திருந்த வேளையில்… நான் உங்கள் காலருகில் அமர்ந்தேன். நீங்கள் என் கைகளைப் பிடித்துக்கொண்டு, ‘‘உன் படம் (கதை, திரைக்கதை, வசனம்) நல்லாருக்குன்னு கேள்விப்பட்டேன். இதோ… இவன் இப்படிப் போயிட்டானய்யா…’’ என்று, இரண்டாவது வரியில்தான் மரணம் சொன்னீர்கள். முதல் உரிமையைச் சினிமாவுக்கே தந்தீர்கள்.
உங்கள் உடலில் இருந்து உயிரைப் பிரிக்கலாம். ஆனால், உங்கள் உயிரில் இருந்து சினிமாவைப் பிரிக்கவே முடியாது. அஃதே என் உயிரில் இருந்தும் உங்கள் சினிமாவைப் பிரிக்க முடியாது!
இதோ… இப்படி எழுதுவதுகூட உங்களிடமிருந்து கற்றுக்கொண்டதுதான்.
‘தி இந்து’ தமிழ் நாளிதழில் இருந்து… கே.பி. சாரைப் பற்றி சில வரிகள் சொல்லுங்கள் என்றதும், வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக் கொட்டாமல்… ‘கொஞ்சம் டயம் கொடுங்க. நானே எழுதிட்டு உங்களைக் கூப்பிடுகிறேன்’ என்று, என் இழப்பில் ஒரு சதவீதத்தை எழுத்தில் கொண்டுவர முயற்சிக்கிறேன்.
நேற்று இரவு ஆஸ்பத்திரியில் எப்போதும் காட்சி தரும் வொயிட் அண்ட் வொயிட்டில் நீங்கள்.
நெற்றி மேட்டில் அந்த வெள்ளை வெளீர் திருநீறு இல்லாமல் உங்களைப் பார்த்ததில்லை நான்.
ஆனால், மூக்கு துவாரங்களில் வெள்ளையாய் பஞ்சடைத்துக் கிடந்தீர்களே. நெஞ்சடைத்துப் போனேன் நான். கண்களால் பாதம் தொட்டேன்.
ஆம்புலன்ஸில் உங்களைக் கிடத்தும்போது…
அதில் என் கைகளும் இருந்ததே…
அது போதும் எனக்கு!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT