Published : 23 Dec 2014 08:56 AM
Last Updated : 23 Dec 2014 08:56 AM

ருத்ரைய்யாவுக்கு நடிகர் கமல் உதவவில்லை: திரைப்பட உதவி இயக்குநர் குற்றச்சாட்டு

மறைந்த இயக்குநர் ருத்ரைய்யா வுக்கு நடிகர் கமல்ஹாசன் உதவவில்லை என்றார் அவரது உதவி இயக்குநர் எஸ்.அருண் மொழி.

பதியம் திரைப்பட இயக்ககம் சார்பில் திரைப்பட இயக்குநர் சி.ருத்ரைய்யாவுக்கான நினைவுக் கூட்டம் திருப்பூரில் நேற்று நடைபெற்றது.

இதில் பங்கேற்ற சி.ருத்ரைய் யாவின் உதவி இயக்குநர் எஸ்.அருண்மொழி பேசியது: ருத்ரைய்யாவிடம் இரண்டு படங்களில் பணிபுரிந்தது குருகுலம் போல் இருந்தது. திரைப்பட கல்லூரி மாணவர் களுக்கு, அவரது வீடு புகலிடமாக இருந்தது. ‘அவள் அப்படித்தான்’ படம் முழுவதும் பெண்ணியக் கூறுகள், பெண் களின் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தே பேசப்பட்டிருக்கும்.

கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த இந்தப் படம், 1978-ம் ஆண்டு, திருப்பூர் யுனிவர்சல் திரையரங்கில் திரையிடப் பட்டபோது, காலை மற்றும் மதியம் என இரு காட்சிகளுடன் நிறுத்தப்பட்டது. மாலை காட்சிக்கு நாடோடி மன்னன் திரையிடப்பட்டது.

அவள் அப்படித்தான், கிராமத்து அத்தியாயம் ஆகிய படங்களை முடித்துவிட்டு, கமல் ஹாசனை வைத்து ‘ராஜா என்னை மன்னித்துவிடு’ என்ற படத்தை தொடங்கினார் ருத்ரைய்யா. 15 நாட்களுடன் நின்றுவிட்ட இந்தப் படத்தின் பணிகளைத் தொடர்ந்து நடத்த, கமல்ஹாசனை நேரில் காண ஆண்டுக்கணக்கில் முயற்சித்துக் கொண்டிருந்தார்.

தமிழ் சினிமாவுக்கு நல்ல படம் வர வேண்டும் என்று நினைக்கும் கலைஞர் என கமல்ஹாசன் மீது அதிகமாக மதிப்பு வைத்திருந்தார். ஆனால், அவருக்கு ஏன் கமல்ஹாசன் உதவவில்லை. இந்தப் படம் தொடர்பாக இருவருக்கும் இடையே ஏதாவது மனக்கசப்பு ஏற்பட்டிருக்கலாம்.

கமல்ஹாசனுக்காக ‘ராஜா என்னை மன்னித்துவிடு’ படக் குழுவினர் 3 ஆண்டுகள் வேலை யின்றி காத்துக் கொண்டிருந்தோம். இந்த விஷயம், பி.சி.ராமுக்கும் தெரியும். இன்றைக்கு ருத்ரைய்யா என்ற மாபெரும் கலைஞன் இறந்த பிறகு ஒப்பாரி வைக்கிறோம் என்றார்.

வி.டி.சுப்பிரமணியன், சுப்ரபாரதிமணியன் ஆகியோர் பங்கேற்று, ருத்ரைய்யா குறித்த நினைவுகளைப் பகிர்ந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x