Published : 24 Dec 2014 10:49 AM
Last Updated : 24 Dec 2014 10:49 AM
தான் இயக்கிய திரைப்படங்களில் உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் புது வர்ணம் பூசி திரையுலகிற்கு புது இலக்கணம் வகுத்து தந்தவர் என்று கே.பாலசந்தருக்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
கே.பாலசந்தரின் மறைவையொட்டி, அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி:
"பழம்பெரும் திரைப்பட இயக்குநரும், ரசிகர் பெருமக்களால் 'இயக்குநர் சிகரம்' எனவும் அன்புடன் அழைக்கப்பட்ட கே.பாலசந்தர் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி தனது 84வது அகவையில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
அன்பும், அடக்கமும், எளிமையும் மிகுந்த கே.பாலசந்தர் அவர்களின் கலையுலக வாழ்வு திண்ணை நாடகங்கள் மூலம் தான் அரங்கேறியது. மத்திய அரசு அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டே அவர் நடத்திய 'மேஜர் சந்திரகாந்த்', 'எதிர் நீச்சல்', 'நாணல்', 'விநோத ஒப்பந்தம்' போன்றவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற பிரபல நாடகங்கள்.
கே.பாலசந்தர் 'நீர்குமிழி' திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகி பல வெற்றி படங்களை இயக்கினார். கே.பாலசந்தர் திரைப்படங்கள் பெண்களை மையமாக வைத்து சமூகத்தில் படும் துன்பங்களையும், துயரங்களையும் எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கும். தமிழ் திரைப்படங்கள் மட்டுமன்றி இந்தி, தெலுங்கு மற்றும் கன்னட திரையுலகிலும் தடம் பதித்து வெற்றிக் கொடியை நாட்டியவர்.
கே.பாலசந்தர் இயக்குநராக மட்டுமன்றி கதை, திரைக்கதை, வசனம் போன்ற துறைகளிலும் மிளிர்ந்தவர். அவர் தான் இயக்கிய திரைப்படங்களில் உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் புது வர்ணம் பூசி திரையுலகிற்கு புது இலக்கணம் வகுத்து தந்தவர். தொலைக்காட்சிகளில் வெளியாகும் இக்கால நெடுந்தொடர்களுக்கு இவர் தான் வித்திட்டவர்.
கே.பாலசந்தர் எண்ணற்ற தேசிய மற்றும் மாநில விருதுகளைப் பெற்று திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்திய சினிமாவிற்கு அவர் அளித்த ஈடு இணையற்ற பங்களிப்பிற்காக 'தாதா சாகேப் பால்கே' விருது அவருக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
கே.பாலசந்தர் மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். திரையுலகில் அவர் விட்டு சென்ற இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது.
கே.பாலசந்தர் இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலக நண்பர்களூக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திக்கிறேன்" என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT