Published : 30 Dec 2014 12:54 PM
Last Updated : 30 Dec 2014 12:54 PM

ஜனவரி 25-ம் தேதி நடக்கும் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: தலைவர் பதவிக்கு 5 பேர் போட்டி

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தின் 2015-2017ம் ஆண்டுகளுக்கான தேர்தல் ஜனவரி 25-ம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் கலைப்புலி எஸ்.தாணு உட்பட ஐந்து பேர் போட்டியிடுகின்றனர்.

இந்தத் தேர்தலில் தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர், துணைத் தலைவர்கள், கௌரவச் செயலாளர்கள், கௌரவப் பொருளாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கான வேட்புமனு வாபஸ் தேதி நேற்றுடன் முடிவடைந்தது.

அதன் அடிப்படையில்,தலைவர் பதவிக்கு கலைப்புலி எஸ்.தாணு, ஏ.எல்.அழகப்பன், ஹென்றி, மன்சூர் அலிகான், கெப்பட் ராஜேந்திரன் ஆகிய 5 பேர் போட்டியிடுகின்றனர். 2 துணைத் தலைவர் பதவிகளுக்கு கே.ராஜன், கே.எஸ்.சீனிவாசன், பி.எல்.தேனப்பன், கதிரேசன் ஆகிய 4 பேர் போட்டியிடுகின்றனர்.

2 செயலாளர் பதவிகளுக்கு டி.சிவா மற்றும் ஆர். ராதாகிருஷ்ணன் இருவரும் மனுதாக்கல் செய்தனர். இவர்கள் தவிர வேறு யாரும் களத்தில் இல்லாததால், இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் டி.சிவா தயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளராகவும், ராதாகிருஷ்ணன் பொருளாளராகவும் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருளாளர் பதவிக்கு சத்ய ஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், வெங்கடேஷ் ஆகிய 2 பேர் போட்டியிடுகின்றனர். இதைத் தவிர 21 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் பதவிக்கு 70 பேர் போட்டியிடுகிறார்கள்.

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் ஜனவரி 25-ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 3 மணி வரை அண்ணாநகர் கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடக்கிறது. அன்று மாலை 4 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று மாலையே முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த், ஏ.வி.எம்.சரவணன், அர்ஜூன், விஷால், தங்கர்பச்சான், மோகன், ராமராஜன், இயக்குநர்கள் பாரதிராஜா, ஆர்.கே. செல்வமணி, சேரன் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் வாக்களிக்க உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x