Published : 24 Dec 2014 01:12 PM
Last Updated : 24 Dec 2014 01:12 PM
கே.பாலசந்தரின் உடலுக்கு தலைவர்கள், திரைக்கலைஞர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கே.பாலசந்தர் மறைவைத் தொடர்ந்து முதல் ஆளாக மருத்துவமனைக்கு சென்று அஞ்சலி செலுத்தியவர் தி.மு.க தலைவர் கருணாநிதி.
அதனைத் தொடர்ந்து கே.பி-யின் மறைவிற்கு விடுத்துள்ள இரங்கல் செய்தியில்:
"இந்த துயரச் சம்பவம் யாரும் எதிர்பாராத வகையில் நிகழ்ந்து விட்டது என்பதை சொல்லவே நெஞ்சம் குமுறுகிறது. ‘இயக்குனர் சிகரம்’ என்று தமிழ்நாட்டில் இவருக்கு சிறப்புப் பெயர் உண்டு.
என்னருமை நண்பர் கே.பி. மறைந்தார் என்பது கண்ணீரோடு நிற்கக் கூடிய துயரச் சம்பவம் அல்ல. கலைத்துறையில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திய கே.பாலசந்தர் அவர்களின் இழப்பை எண்ணி எண்ணி அழுகின்ற துயரச் சம்பவமாகும். அவர் மறைந்து விட்டாலும் அவரால் உருவாக்கப்பட்ட கலையுலக சிறப்புக்களும், என் போன்ற நண்பர்களிடம் காட்டிய பேரன்பும், என்றைக்கும் யாராலும் மறக்க முடியாதவை . கலையுலகம் உள்ளவரை அவர் புகழ் மேலும், மேலும் வளரும்.
1941 – 42 ஆம் ஆண்டுகளில் அறிஞர் அண்ணா அவர்கள் நடத்திய ‘திராவிட நாடு’ வார இதழில் `நன்னிலம் நண்பர்’ என்ற தலைப்பில் வாரம் தோறும் ஒரு கட்டுரை வெளிவரும். அந்த நன்னிலம் நண்பர் யாரென்றால், நமது தஞ்சை மாவட்டத்தில் உள்ள நன்னிலம் என்ற ஊரில் பள்ளி மாணவராய் இருந்து படித்து பகுத்தறிவு இயக்கத்தின் கொள்கைகளில் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை எல்லாம் விளக்கமாக புரிந்து கொள்வதற்காக, அண்ணா, `திராவிட நாடு’ இதழில் எழுதிய கட்டுரைகள் குறித்து கேள்விக்கணைகள் தொடுத்தவர் இந்த பாலசந்தர்தான்! அதன் மூலம் நான் பாலசந்தர் அவர்களை தெரிந்து கொண்டு, அந்த 41-42 ஆண்டுகளிலேயே எனக்கும் அவருக்கும் நட்பும் நல்ல பழக்கமும் ஏற்பட்டது. அந்த சம்பவங்களை அவரும் நானும் அண்மைக் காலத்திலே கூட மறவாமல் ஒவ்வொரு உரையாடலிலும் பதியவைத்திருக்கிறோம்." என்று தெரிவித்திருக்கிறார் கருணாநிதி.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT