Published : 16 Dec 2014 02:23 PM
Last Updated : 16 Dec 2014 02:23 PM

நீதிமன்றத்தில் ரூ.7 கோடி செலுத்தினார் ‘லிங்கா’ தயாரிப்பாளர்

‘லிங்கா’ திரைப்படத்தை வெளியிட உயர் நீதிமன்றம் விதித்த நிபந்தனையின்படி, படத்தின் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் உயர் நீதிமன்றத்தில் ரூ.7 கோடியை நேற்று செலுத்தினார்.

மதுரையைச் சேர்ந்தவர் ரவிரத்தினம். இவர் தனது முல்லைவனம் 999 படத்தின் கதையை யு டியூப்பில் இருந்து திருடி, லிங்கா படத்தை தயாரித்திருப்பதாகவும், அதற்காக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ரவிரத்தினம், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை முதல் அமர்வு, கதை திருட்டு தொடர்பாக சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும், லிங்கா படத்தை வெளியிட தயாரிப்பாளர் ரூ.10 கோடியை உயர் நீதிமன்ற வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும். அதில், ரூ.3 கோடி ரொக்கத்தை உடனடியாக செலுத்தி படத்தை வெளியிடவும், எஞ்சிய ரூ.7 கோடியில் ரூ.2 கோடி மற்றும் ரூ.5 கோடிக்கு வங்கி உத்தரவாதத்தை டிச. 15-ல் உயர் நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் எனவும் டிச. 11-ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து தயாரிப்பாளர் ராக்லைன் வெங்க டேஷ், டிச. 11-ம் தேதி மாலை ரூ.3 கோடியை ஆன்லைன் பணபரிவர்த்தனையில் உயர் நீதிமன்ற கிளை கணக்கில் செலுத்தினார். இந்நிலையில் எஞ்சிய ரூ.7 கோடியில் ரூ.2 கோடியை வரைவு காசோலை, ரூ.5 கோடிக்கான வங்கி உத்தரவாத ஆவணமும் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் நேற்று வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x