Last Updated : 01 Jul, 2019 08:11 PM

 

Published : 01 Jul 2019 08:11 PM
Last Updated : 01 Jul 2019 08:11 PM

நெட்டிசன்கள் விமர்சனம்: ட்வீட்டை நீக்கி செளந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்

நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்து, தனது ட்வீட்டை நீக்கிவிட்டு விளக்கம் அளித்துள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த்.

தமிழகத்தில் தண்ணீர்  பஞ்சம் அதிகமாக உள்ளது. பல கிராமங்களில் தண்ணீரின்றி பல கிலோ மீட்டர் பயணித்து தண்ணீர் பிடித்து வருகிறார்கள். சென்னையிலும் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் இல்லாமல், லாரி மூலமாக தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

தண்ணீர்  பிரச்சினை அதிகமாக இருக்கும் சூழலில் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பதிவில், “இளம் வயதில் சொல்லிக்கொடுங்கள். அவர்களாகவே ஜொலிக்கக் கற்றுக் கொண்டுவிடுவார்கள். நீச்சல் ஒரு தேவையான பயிற்சி” என்று தெரிவித்தார். இந்த ட்வீட்டுடன் தன் மகனுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தையும், தனுஷ் மகனுடன் தன் மகன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டார்.

தண்ணீர் கிடைப்பதே அரிதாகி வரும் சூழலில் நீச்சல் குளம் புகைப்படம் எப்படி, அதில் தண்ணீருக்கு என்ன செய்கிறீர்கள் என்று நெட்டிசன்களின் கடும் விமர்சனத்துக்கு சௌந்தர்யா ஆளானார். இதனைத் தொடர்ந்து தனது ட்வீட்டை அவர் நீக்கிவிட்டார்.

தனது நீச்சல் பயிற்சி குறித்த ட்வீட்டுக்கு, “நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் தண்ணீர் பிரச்சினையை மனதில் வைத்து எனது பயணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படப் பகிர்வை நீக்கிவிட்டேன். அந்தப் புகைப்படங்கள், இளம் வயதிலேயே தேவையான பயிற்சிகளை குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதன் அவசியத்தை உணர்த்தவே. தண்ணீரைக் காப்பாற்றுவோம்” என்று விளக்கம் அளித்துள்ளார் செளந்தர்யா ரஜினிகாந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x