Published : 06 Jul 2019 06:21 PM
Last Updated : 06 Jul 2019 06:21 PM
'ஆடை' படத்தில் ஆடையின்றி நடித்த அனுபவத்தை பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்து கொண்டார் அமலாபால்.
ரத்னகுமார் இயக்கத்தில் அமலாபால், விவேக் பிரசன்னா, ஸ்ரீரஞ்சனி, ரம்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஆடை'. தணிக்கையில் 'ஏ' சான்றிதழ் பெற்றுள்ள இந்தப் படம் ஜுலை 19-ம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸர் மற்றும் இன்று (ஜூலை 6) வெளியிடப்பட்ட ட்ரெய்லருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் படக்குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது 'ஆடை' தொடங்கப்பட்ட விதம், உருவான விதம், ஆடையின்றி நடித்த அனுபவம் என பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார் அமலாபால்.
அதில் பேசும் போது, ''திரையுலகிலிருந்து விலகலாம் என்று இருக்கிறேன் என மேலாளரிடம் சொல்லிட்டு இருந்தேன். அவர் தினமும் சில கதைகள் அனுப்பிட்டு இருந்தார். ஆனால், அதில் நிறைய பொய்கள் கலந்திருந்தன. பெண் அதிகாரம், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீள்வது, கணவருக்கு உறுதுணையாக இருப்பது இப்படியான பல கதைகள் வந்துகொண்டே இருந்தன. ஆகையால், திரையுலகிலிருந்து விலகலாம் என்று இருக்கிறேன் எனத் தெரிவித்தேன்.
திரையுலகில் ஒரு இடம் கிடைத்திருக்கிறது. அந்த இடத்தை வீணடிக்க விரும்பவில்லை என்றேன். அப்போது தான் 'ஆடை' படத்தின் கதைச் சுருக்கம் வந்தது. ஒரு பக்கம் படித்துவிட்டு, மேலாளரிடம் இது தமிழ்ப் படமா, இந்திப் படமா, ஆங்கிலப் படமா என்று கேட்டேன். தமிழ்ப் படம் தான், ரத்னகுமார் என்ற இயக்குநர் எழுதியிருக்கார். தயாரிப்பாளரும் இருக்கிறார் என்று சொன்னார். இயக்குநரைச் சந்திக்க வேண்டும் என்றவுடன், டெல்லியில் என்னைச் சந்திக்க இயக்குநர் ரத்னகுமார் வந்தார்.
இரண்டு மணி நேரம் கதை கேட்டேன். உடனே, இது ஆங்கிலப் படத்தின் ரீமேக் இல்லையே என்றேன். இது என்னுடைய ஒரிஜினல் கதை மேடம் என்றார். தொடர்ச்சியாக இந்தப் படத்தின் தொடக்கத்திலிருந்து நிறைய பாசிட்டிவ் விஷயங்கள் நடந்து கொண்டிருந்தன.
தயாரிப்பாளரைச் சந்திக்க வேண்டும் என்றவுடன், அவரோ நெற்றியில் விபூதி, குங்குமம் எல்லாம் வைத்து வந்தார். கதையின் 2-ம் பாதியில் உங்களுக்கென்று பிரத்யேக உடைகள் வைத்து பண்ணலாம் என்றெல்லாம் பேசினார். உடனே "அதெல்லாம் கவலைப்பட வேண்டாம். கதை என்று வந்துவிட்டது. பண்ணலாம்" என்றேன்.
பிறகும் கூட இந்த டீம் மீது நம்பிக்கை வைத்தேன். கதையைப் பற்றி நிறைய விவாதித்தோம். இந்தப் படம் பண்ண வேண்டும் என்றால் இயக்குநர், ஒளிப்பதிவாளர், நடிகை என்று இருந்தால் பண்ண முடியாது என்றேன். ஆகையால் ஒரு குழுவாக இருந்தால் மட்டுமே பண்ண முடியும். நன்றாகவும் வரும் என்று கூறினேன். அவரும் சம்மதித்தார். ஒளிப்பதிவாளர் விஜய கார்த்திக் ஒப்பந்தமானவுடன், என்னை புகைப்படங்கள் எடுத்துக் காட்டினார். அதில் ஒரு உண்மை இருந்தது.
படப்பிடிப்புத் தளத்தில் முதல் நாள் முதல் காட்சி எடுக்கும் போது, இயக்குநர் கட் சொல்லிவிட்டு என்னிடம் வந்தார். ஏன் இப்படி நடிக்கிறீர்கள்? என்னிடம் பேசும் போது, பழகும் போது எப்படி கேஷுவலாக இருந்தீர்களோ. அப்படியே இருங்கள். அது தான் காமினி என்றார். அதுவொரு நடிகைக்கு மிகப்பெரிய சுதந்திரம். ரத்னகுமார் ஒரு தைரியமான இயக்குநர்.
'ஆடை' படம் தான் ரத்னகுமாருடைய முதல் கதை. 'மேயாத மான்' மாதிரி ஒரு படம் பண்ணிவிட்டு, அடுத்ததாக இந்தப் படத்தை இயக்க ஒரு தைரியம் வேண்டும். ஏனென்றால் பலரும் என்னிடம், அவரெல்லாம் என்னோடு பணிபுரிய மாட்டாரா என்று கேட்டார்கள். இப்படி பல விஷயங்கள் கடந்து, இந்தப் படத்தை இயக்கியுள்ளதுக்கு காரணம் அவருடைய தைரியம் மட்டுமே.
எனக்கும் இந்தப் படத்துக்குப் பிறகு நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரங்கள் வரும். இந்தக் காட்சிகளைப் படமாக்கும் போதெல்லாம் செக்யூரிட்டி இருக்கணும், லாபத்தை ஷேர் பண்ணிக்கலாம் போன்ற பல விஷயங்கள் ஒப்பந்தத்தில் இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சுப்புவிடம் சொன்னேன். அவரும் பண்ணிக்கலாம் என்றார்.
அனுராக் காஷ்யப் சார், இந்தப் படத்தின் டீஸரைப் பார்த்துவிட்டு, அதிலிருக்கும் கடைசி ஷாட்டில் உங்கள் கண்ணில் இருக்கும் பயம் தெரிகிறது என்று பாராட்டினார். அதற்குக் காரணம் ஒளிப்பதிவாளர் விஜய் தான். பாடல்கள் வெற்றியடைவதற்கு ஒரு ஃபார்முலா இருக்கிறது. அதே பாணியில் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அதை எல்லாம் உடைத்து இதில் 'ஊர்கா' என்ற பாண்ட் பணிபுரிந்திருக்கிறார்கள். பாடல்கள் அருமையாக வந்துள்ளன.
இரண்டாம் பாதியில் உள்ள ஆடையில்லாக் காட்சிகளை படமாக்கும் முன்பு, கேரவனில் பயத்துடன் அமர்ந்திருந்தேன். அப்போது மேலாளரை அழைத்து செட்டில் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்றெல்லாம் கேட்டேன். முக்கியமான 15 பேரைத் தவிர மீதி அனைவரையும் அனுப்பிவிட்டார்கள். முதல் காட்சியை முடித்துவிட்டு, பாஞ்சாலிக்கு 5 கணவர்கள் தான் இருந்தார்கள். இங்கு 15 கணவர்கள் இருக்கிறார்கள் என்று சொன்னேன். அந்த அளவுக்கு இந்த டீமின் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். அந்த நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தால் கண்டிப்பாக பண்ணியிருக்க மாட்டேன்.
இந்தப் படம் ஓடலைன்னா என்ன பண்ணுவீர்கள்?, நீங்கள் அவ்வளவு தான். உங்க கேரியர் காலி என்று கமெண்ட்கள் பார்த்தேன். எனக்கென்ன கவலை.. இது தான் அவர்களுக்கான பதில். ஒவ்வொரு படத்துக்கும் ஒரு விதி இருக்கிறது. இந்தப் படம் அப்படித்தான் அமைந்தது. ஒரு படத்தைப் பார்க்கும் முன்பே அது இப்படித்தான் இருக்கும் என நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இதுவொரு நேர்மையான, உண்மையான படம். இந்தப் படத்தில் மூலம் கிடைத்த அனுபவங்கள் ரொம்பவே வலுவானது”.
இவ்வாறு அமலாபால் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT