Last Updated : 03 Jul, 2019 03:19 PM

 

Published : 03 Jul 2019 03:19 PM
Last Updated : 03 Jul 2019 03:19 PM

கர்மாவை புத்திசாலித்தனத்தால் வெல்ல முடியாது: ஜீவி நாயகன் வெற்றி

கர்மாவை புத்திசாலித்தனத்தால் வெல்ல முடியாது என்பதை உறுதியாக நம்புபவன் நான் என்று 'ஜீவி' நாயகன் வெற்றி தெரிவித்துள்ளார்.

ஜூன் 28-ம் தேதி வெளியான படங்களில் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற படம் 'ஜீவி'. வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் வெற்றி, கருணாகரன், மைம் கோபி, மோனிகா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக கிடைத்த வரவேற்பால், தற்போது வசூலும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

'8 தோட்டாக்கள்' படத்துக்குப் பிறகு வெற்றி நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'ஜீவி'. இதற்குக் கிடைத்த வரவேற்பு தொடர்பாக 'தி இந்து' ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் “'8 தோட்டாக்கள்' குறைந்தபட்ச உத்தரவாதம் என்று சொல்லப்படும் பணத்தைக் கூட வசூலிக்கவில்லை. படத்தில் நட்சத்திரங்கள் இல்லாததால் திரையரங்குகளிலிருந்து விரைவில் நீக்கப்பட்டது. எப்படி இருந்தாலும் அது எனக்கு முக்கியமான படம் தான். படம் பார்த்துவிட்டு ரஜினி சார் என்னை தொலைபேசியில் ஆழைத்து, என்னையும் படக்குழுவையும் பாராட்டினார்.

'8 தோட்டாக்கள்' படத்தில் எனது கதாபாத்திரம் ஏன் அப்படி இருந்தது என்பதை வெகுசிலர் தான் புரிந்துகொண்டனர். நாயகி வந்த பிறகு நான் சிரிக்கக் கூட இல்லை என்று ஒரு விமர்சனம் வந்தது. நானும் இயக்குநரும் அந்தக் கதாபாத்திரத்தை அணுகிய விதம் வேறுமாதிரியானது. விமர்சனங்களை நான் ஒப்புக்கொள்ளவில்லை என்று சொல்லமுடியாது. ஆனால் ’8 தோட்டாக்கள்’ நான் கற்பதற்கான ஒரு அனுபவம்.

தற்போது அதை விட இந்தப் படத்தில் நான் தேறியிருப்பதாக பலர் கவனித்துச் சொல்லியிருக்கிறார்கள். 'ஜீவி'க்குப் பிறகு பலரும் எனது அடுத்த படம் குறித்து ஆர்வத்துடன் இருக்கிறார்கள். எனவே அடுத்து ஒரு நல்ல கதையுடன் வரும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.

'ஜீவி' தற்போது பி மற்றும் சி சென்டர்களில் கூட நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு படத்தின் வெற்றி பல்வேறு விஷயங்களைச் சார்ந்தது. நகரங்களில் நன்றாக ஓடினால் மட்டுமே படம் ஹிட் என்று அர்த்தமாகாது. 'ஜீவி' போன்ற ஒரு சிறிய படம் கிராமப்புறங்களிலும் கூட நன்றாக ஓடுவது மனதுக்கு திருப்தியாக இருக்கிறது.

'ஜீவி' படத்துக்கு முன் 50 கதைகளைக் கேட்டேன். 'ஜீவி'யில் தொடர்பியல் என்று சொல்லப்பட்ட விஷயம் தான் எனக்குப் பிடித்தது. எங்க கதாசிரியர் புத்திசாலி. நிறைய நல்ல யோசனைகளை வைத்திருப்பவர். கர்மாவை புத்திசாலித்தனத்தால் வெல்ல முடியாது என்பதை உறுதியாக நம்புபவன் நான். 'ஜீவி' படத்தின் நாயகன் புத்திசாலியாக இருக்கலாம். ஆனால், அவனைப் பற்றிய சம்பவங்கள் தொடர்ந்து ஒரு வட்டத்துக்குள் நடந்து கொண்டே இருக்கும்” என்று தெரிவித்துள்ளார் வெற்றி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x