Published : 02 Jul 2019 05:10 PM
Last Updated : 02 Jul 2019 05:10 PM
'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' படத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன என்று சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.
'கனா' படத்தைத் தொடர்ந்து, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான படம் 'நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா'. கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ரியோ, ஷெரில், நாஞ்சில் சம்பத், ராதாரவி, ஆர்.ஜே.விக்னேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஜூன் 14-ம் தேதி வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் பேசப்படவில்லை. ஆனால், வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.
அச்சந்திப்பில் சிவகார்த்திகேயனோடு இணைந்து ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் கலந்து கொண்டார்கள். அதில் சிவகார்த்திகேயன் பேசும் போது, “இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு முன் பயத்தை விட நம்பிக்கையே அதிகமாக இருந்தது. இந்த டீமை மிகவும் பிடிக்கும். இவர்களால் இது முடியும் என்று நம்பினோம். முதலில் ஸ்கிரிப்ட்டைப் படிக்கும்போது நிறைய ஸ்பூஃப் விஷயங்கள் இதில் உள்ளன. இதைக் குறைத்து விடுமாறு அவர்களிடம் வேண்டுகோள் வைத்தேன்.
அவர்கள் கிளைமாக்ஸ் காட்சியை எழுதியிருந்த விதம்தான் நாங்கள் இந்தப் படத்தை எடுக்கக் காரணமாக அமைந்தது. நான் படித்ததை விட, படத்தில் இரட்டிப்பாக இருந்தது. அந்த கிளைமாக்ஸ் தான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம்.
இந்த விழாவுக்கு வரும்போது ஏர்போர்ட்டில் ஒரு அம்மா என்னிடம் ”ரொம்ப நல்ல படம் எடுத்திருக்கீங்க.. உங்களைப் பாராட்டி கடிதம் எழுதணும்னு என்று நினைத்தேன். ஆனா இப்ப நேர்லயே சொல்லிட்டேன்” என்று கூறினார். இதுதான் இந்தப் படத்தின் வெற்றி என்று நான் நம்புகிறேன். தயாரிப்பு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதே என் நண்பர்களுக்காகத்தான்.
இந்தப் படம் ஆரம்பிக்கும்போது சிலர் என்னிடம் வந்து இந்தப் படம் பண்ண வேண்டுமா? யூ-டியூப் டீமை நம்பி இவ்வளவு பணம் போடவேண்டுமா? என்றெல்லாம் கேட்டார்கள். அதன் பிறகுதான் கண்டிப்பாக இந்த டீமுடன் படம் செய்ய வேண்டும் என்று உறுதியாக நம்பினேன். ஏனெனில் என்னை இயக்குநர்கள், பத்திரிகையாளர்கள், தயாரிப்பாளர்கள், மக்கள் நம்பியிருக்காவிட்டால் நான் இந்த மேடையில் இப்போது நின்று கொண்டிருக்க மாட்டேன். நமக்கு எது நடக்க வேண்டும் என்று நினைக்கிறோமோ அது மற்றவர்களுக்கும் நடக்க வேண்டும்.
இந்த வெற்றியைக் கொடுத்த மக்களுக்கு நன்றி. படம் முடியும்போது உங்கள் பெயரைப் பார்த்ததும் மக்கள் பலமான கைத்தட்டல் தருவார்கள் என இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலிடம் சொல்லிக் கொண்டே இருந்தேன். அதே போல அனைவரும் கைத்தட்டி முடித்ததும் அவரைத் திரும்பிப் பார்த்தேன். அவரோ கதறி அழுது கொண்டிருந்தார். பிறகு அங்கிருந்து ஏர்போர்ட் செல்வதற்கு முன்பாக அவரது பெற்றோர்களைப் பார்த்துவிட்டுச் சென்றேன்.
அவரது அப்பா என் கையைப் பிடித்து அழத் தொடங்கி விட்டார். அப்போதே இந்தப் படம் ஜெயித்துவிட்டது, ஒரு தயாரிப்பாளராக நான் ஜெயித்து விட்டேன் என நினைத்தேன். போட்ட பணம் கிடைத்தது போன்ற சந்தோஷம் இருந்தது” என்று பேசினார் சிவகார்த்திகேயன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT