Last Updated : 03 Jul, 2019 02:26 PM

 

Published : 03 Jul 2019 02:26 PM
Last Updated : 03 Jul 2019 02:26 PM

பெரிய நடிகர்களின் படத் தயாரிப்பாளர்கள் லாபம் பார்ப்பது அரிதே: ட்விட்டரில் கேள்வி எழுப்பியவருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி

பெரிய நடிகர்களின் படத் தயாரிப்பாளர்கள் லாபம் பார்ப்பது அரிதே என்று ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பிய ரசிகருக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் பதிலடி கொடுத்துள்ளார்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான படம் 'ஹவுஸ் ஓனர்'. ஜூன் 28-ம் தேதி வெளியான இந்தப் படத்தில் கிஷோர், ஸ்ரீரஞ்சனி, 'பசங்க' கிஷோர் மற்றும் லவ்லின் ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டது.

'சிந்துபாத்', 'தர்மபிரபு' ஆகிய பெரிய படங்களுடன் வெளியானதால், 'ஹவுஸ் ஓனர்' படத்துக்கு குறைவான திரையரங்குகளே கிடைத்தது. விமர்சன ரீதியாக இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் 'ஹவுஸ் ஓனர்' படத்தைப் பார்த்துவிட்டு, ஏஜிஎஸ் நிறுவனத்தைச் சேர்ந்த கல்பாத்தி அகோரம் வாழ்த்து தெரிவித்தார் என்று லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக 'ஹவுஸ் ஓனர்' படத்துக்கு விமர்சன ரீதியாக கிடைத்த வரவேற்பையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். அந்தப் பதிவுக்கு அவரது ட்விட்டர் பக்கத்தைப் பின் தொடரும் ரசிகர் ஒருவர், “தயாரிப்பாளருக்கு படத்திலிருந்து என்ன ஆதாயம் கிடைத்தது? எப்படியும் கடைசியில் தயாரிப்பாளர் தொடர்ந்து வாழ வியாபாரம் முக்கியம். நான் அந்த அடிப்படையில் தான் பேசுகிறேன். நான் உங்கள் படைப்பாற்றல் திறனை மதிக்கிறேன். ஆனால் அது ஒரு தயாரிப்பாளர் பணம் இழப்பதால் இருக்கக்கூடாது” என்று தெரிவித்தார்.

அவருக்குப் பதிலளிக்கும் விதமாக லட்சுமி ராமகிருஷ்ணன், ''ஆம், ஆனால் எந்த தயாரிப்பாளர் பணம் சம்பாதிக்கிறார் என்று உங்களால் சொல்ல முடியுமா? பெரிய நட்சத்திரமாக இருந்தாலும், அதிக வசூல் செய்தாலும், தயாரிப்பாளர்கள் லாபம் பார்ப்பது அரிதே. கசப்பான உண்மை. எனது படங்கள் வருவாய் வரும் முறையில், கட்டுப்படுத்தப்பட்ட பட்ஜெட்டில் உருவாகிறது. எந்தப் பெரிய தயாரிப்பாளரை விடவும் எனது தயாரிப்பாளர் பாதுகாப்பாக இருக்கிறார்.

மாற்று சினிமாவை ஊக்குவிப்பது மிக முக்கியம். 'இருட்டறை' முதல் '90 எம்.எல்' வரை பல படங்கள் பொழுதுபோக்க இருக்கிறது. நமது சிந்தனை ஓட்டத்தைத் தூண்டிவிட படங்கள் வேண்டும். எங்கள் படம் மோசமானதாக இருந்தால் கண்டிப்பாக சிறந்த விமர்சனங்களைப் பெற்றிருக்க மாட்டோம். இது போன்ற படங்களுக்கு எதிராக ரசிகர்களின் ரசனை பழக்கப்படுத்தப்படுகிறது'' என்று தெரிவித்துள்ளார் லட்சுமி ராமகிருஷ்ணன்.

இந்தப் பதிலுக்கு ட்விட்டர் பக்கத்தில் உள்ள பலரும் 'உண்மைதான்' என்று கூறி, லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

'பிக் பாஸ்' வீட்டுக்குள் போலீஸ்: கைதாவாரா வனிதா விஜயகுமார்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x