Published : 20 Apr 2014 09:49 AM
Last Updated : 20 Apr 2014 09:49 AM
நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஒருவனுக்குத் தற்செயலாக ஐந்து கோடி கிடைத்தால் என்ன செய்வான்? அதைத் தொடர்ந்து வேறு சில சிக்கல்களும் சேர்ந்துகொண்டால் எப்படித் தப்பிப்பான்? என்பதை நகைச்சுவை கலந்த த்ரில்ல ராகச் சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீ.
ஒரு பக்கம் ஊரில் தங்கைக்குக் கல்யாண ஏற்பாடு. இன்னொரு பக்கம் காதலியைக் கைப்பிடிக்கும் நாளுக்கான காத்திருப்பு. நல்ல வேலையுடன் (வேறு எங்கே, ஐ.டி. துறையில்தான்!) வசதியான வாழ்க்கை. இப்படி வாழ்ந்துவரும் மணிகண்டனின் (வைபவ்) வேலை திடீரென்று பறிபோகிறது. தங்கையின் திருமணம் நெருங்கி வரும் நேரத்தில் இப்படி ஒரு அதிர்ச்சி. இந்தத் தருணத்தில் அவன் அபார்ட்மெண்டின் கதவு தட்டப்படுகிறது. திறந்தால் வெளியே ஒரு அட்டைப் பெட்டி. அதில் ஐந்து கோடிக்கு ஆயிரம் ரூபாய் நோட்டுகள்.
இது யாருடைய பணம், டோர் டெலிவரி செய்தது யார் என்பதைப் பற்றி யெல்லாம் கவலைப்படாமல் அதை அப்படியே அமுக்க நினைக்கிறான் மணிகண்டன். ஆனால் அந்தப் பணம் இளவரசு (கோட்டா னிவாச ராவ்) என்னும் போதைப் பொருள் வியாபாரி இன்னொரு சட்ட விரோதக் கும்பலின் தலைவன் காமாட்சிக்கு (சாயாஜி ஷிண்டே) அனுப்பிய பணம் தவறாக மணிகண்டனிடம் வந்துவிடுகிறது. பணம் வராமல் காமாட்சி முகம் சிவக்க, பணத்தை வாங்கிக்கொண்டு தன்னை ஏமாற்றப்பார்ப்பதாக இளவரசு எகிற, இருவரும் முட்டிக்கொள்கிறார்கள்.
பணத்தைத் தேடி இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் மணியின் வீட்டுக்கு வரும்போது நடக்கும் சண்டையில் சில பிணங்கள் விழுகின்றன. பிணங்களை அப்புறப்படுத்திவிட்டுப் பணத்துடன் கம்பி நீட்ட வேண்டிய கவலை மணிக்கு. இரண்டு கும்பல்களின் அச்சுறுத்தலையும் காவல்துறையையும் மீறி அதை அவனால் செய்ய முடிந்ததா என்பதே கதை.
கதை விறுவிறுப்பான த்ரில்லருக்கான தகுதியோடு இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் திரைக்கதை, காட்சி யமைப்புகள் ஆகியவற்றில் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர். விளைவு, பெரும்பாலான காட்சிகள் அபத்தமாக இருக்கின்றன. காட்சிகள் முன்கூட்டியே யூகிக்கும்படியாக இருப்பது த்ரில்லர் தன்மையைக் கெடுக்கிறது.
தற்செயல் நிகழ்வுகளை அடிப்படை யாகக் கொண்ட கதை முடிச்சை நம்பகத் தன்மையோடு விரிவுபடுத்த வேண்டும் என்றால் நம்பகமான கதாபாத்திரங் களும் தர்க்க ரீதியான காட்சிகளும் இருக்க வேண்டும். படத்தில் ஏகப்பட்ட தற்செயல்கள். எதுவும் நம்பகத்தன்மையோடு சொல்லப்பட வில்லை. அடுத்தடுத்துக் கொலைகள் விழுகின்றன. ஆனால் பார்வையாளர் களுக்குப் பரபரப்பு ஏற்படவில்லை. எல்லாமே மேம்போக்காக வும் அலட்சியமாகவும் கையாளப்படுகின் றன. கிட்டத்தட்ட ஒண்டி ஆளாகப் பிணங் களை அப்புறப்படுத்துவது, அவற்றை மீண்டும் கொண்டுவருவது என்று ஏகப்பட்ட அபத்தமான பூச்சுற்றல்கள். எக்கச்சக்கமான கொலைகளுக்குப் பிறகு திருந்தாத நாயகன், நாயகியின் சிற்றுரையைக் கேட்டு மனம் வருந்திப் பணத்தையெல்லாம் தானம் செய்துவிடுகிறானாம்.
வைபவ் ரம்யா நம்பீசன் காதலிலும் எந்த சுவாரஸ்யமும் இல்லை.
‘சூது கவ்வும்’, ‘மூடர் கூடம்’ ஆகிய படங்களில் யதார்த்த வாழ்வின் அபத்தத்தை வெளிப்படுத்தும் வகையில் திரைக்கதைகள் அமைக்கப்பட்டிருந்தன. கவனமான அணுகுமுறையும் கூர்மை யான பார்வையும் இருந்திருந்தால் இந்தப் படமும் அந்தப் படங்களில் வரிசையில் சேர்ந்திருக்கும். அவை இரண்டும் இல்லாததால் வெறும் ‘புஸ்’ஸாகச் சரிந்திருக்கிறது.
வைபவ் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக் கிறார். ரம்யா நம்பீசன் கொஞ்ச நேரம் மட்டுமே வந்துபோகிறார். தாதாக் களாக வரும் கோட்டா னிவாசராவும் சாயாஜி ஷிண்டேவும் கலகலப்பூட்டு கிறார்கள். ஆனால் இருவரும் அடிக்கும் கூத்துகள் ஒரு கட்டத்துக்கு மேல் எரிச்சலூட்டுகின்றன.
படத்தில் ஒளிப்பதிவோ எடிட்டிங்கோ இசையோ த்ரில்லர் வகைப் படத்துக்கு ஏற்றபடி அமையவில்லை.
நாயகன் வைத்திருக்கும் ‘டமால் டுமீல்' என்ற ரிங் டோன் ஒன்றுதான் படத்தில் புதிது. அது ஒரு காட்சியில் அவருக்கு உதவுகிறது என்பதைத் தவிர படத்தில் வேறு எந்தத் த்ரில்லும் இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT