Published : 25 Aug 2017 08:53 AM
Last Updated : 25 Aug 2017 08:53 AM

அரசிடம் முறைப்படி அனுமதி பெறாமல் கூடுதல் காட்சிகள் திரையிட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை: அதிகாரிகள் திட்டவட்டம்

மாவட்ட நிர்வாகத்திடம் முறைப்படி அனுமதி பெறாமல், விதிகளை மீறி 7 காட்சிகள் திரையிட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

திரையரங்குக்கான உரிமம் வழங்கப்படும்போது, வழக்கமாக ஒரு நாளில் அதிகபட்சம் 4 காட்சிகள் திரையிட அரசு அனுமதி வழங்கியுள்ளது. தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில், கூடுதலாக ஒரு சிறப்புக்காட்சி திரையிட வேண்டுமானால், ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து, அனுமதி பெற்று திரையிட வேண்டும். ஆனால், பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும்போது கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் திரையரங்குகள், உரிய அனுமதி பெறாமல் கூடுதல் காட்சிகளையும் திரையிடுகின்றன. இந்த காட்சிகளுக்காக விற்கப்படும் டிக்கெட்கள் வணிகவரித் துறையின் பார்வைக்கே கொண்டு செல்லப்படாமல், மறைக்கப்பட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அஜித் நடித்த ‘விவேகம்’ திரைப்படம் நேற்று வெளியானது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களின் ஒருசில மல்டிப்ளக்ஸ் திரையரங்குகள் தவிர்த்து, மற்ற அனைத்து திரையரங்குகளிலும் இப்படத்தின் டிக்கெட் அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் ஷோ நேற்று அதிகாலை 4 மணிக்குத் தொடங்கியது. இந்தக் காட்சிக்கு டிக்கெட் கட்டணம் ரூ.380 முதல் ரூ.2,000 வரை விற்றுள்ளனர். சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் ரூ.500 டிக்கெட் கட்டணத்தோடு பாப்கார்ன், குளிர்பானம் இலவசம் என்றும் டிக்கெட் விற்பனை நடந்துள்ளது. பல டிக்கெட்டில் அதன் விலை, ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட விவரங்கள் அச்சிடப்படவில்லை.

ஈரோடு திரையரங்குகளில் ரூ.150-ல் தொடங்கி ரூ.650 வரை டிக்கெட்கள் விற்கப்பட்டன. இதுகுறித்து ஈரோடு மக்கள் மன்ற அமைப்பாளர் எம்.செல்லப்பனிடம் பேசியபோது, அவர் கூறியதாவது:

ஈரோட்டில் உள்ள மல்டிபிளக்ஸ் திரையரங்கு ஒன்றில் 5 திரையரங்குகள் உள்ளன. இவற்றில் தலா 7 காட்சிகள் என நேற்று மொத்தம் 35 காட்சிகள் ‘விவேகம்’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதேபோல, 4 திரையரங்குகளில் இணையம் மூலம் முன்பதிவு செய்யும்போது டிக்கெட் கட்டணம் ரூ 153.60 (இதில் ஜிஎஸ்டி அடங்கியுள்ளதா என்ற விபரம் இல்லை), இணையதளக் கட்டணம் ரூ 36.40 என ஒரு டிக்கெட்டுக்கு ரூ.190 வசூல் செய்யப்பட்டுள்ளது. இந்த திரையரங்குகளுக்கு கைப்பை, தின்பண்டங்கள், குடிநீர் பாட்டில் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற விதிமீறல் கட்டுப்பாடுகளை அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை. ஈரோட்டில் நேற்று ‘விவேகம்’ திரைப்படம் வெளியான அனைத்து திரையரங்குகளிலும் அனுமதி பெறாமல் கூடுதல் காட்சிகள் திரையிடப்பட்டுள்ளது என்றார்.

இதுபற்றி ஈரோடு வருவாய் கோட்ட அலுவலர் நர்மதாதேவியிடம் கேட்டதற்கு, ‘‘அதிக விலைக்கு டிக்கெட் விற்கப்படுகிறதா என்பது குறித்து குழு அமைத்து கண்காணிக்கப்படும். குறிப்பிட்ட மல்டிபிளக்ஸ் திரையரங்கில் 4 காட்சிகள் நடத்த மட்டுமே அனுமதி பெறப்பட்டுள்ளது. கூடுதல் காட்சிகள் திரையிட்டார்களா என்பதை குழு மூலம் ஆய்வு செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். தமிழகத்தின் மற்ற மாவட்டங்களிலும், அனுமதியின்றி கூடுதல் காட்சிகள் திரையிட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த் துறை உயரதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.

கோவை மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரும், ஜிஎஸ்டி, கேளிக்கை வரி தொடர்பான திரைப்படத் துறை குழுவின் உறுப்பினருமான திருப்பூர் சுப்ரமணியம் கூறிய தாவது:

எங்கள் திரையரங்கில் ரூ.100 டிக்கெட் கட்டணத்துடன் ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகள் சேர்த்து ரூ. 118-க்குதான் டிக்கெட் விற்றோம். டிக்கெட் கட்டணம் பற்றி பெரிய நடிகர்களுக்கு கவலை இல்லை. ஏனென்றால், இவ்வளவு அதிகமாக விற்றால்தான் அவர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்க முடியும். தயாரிப்பாளர் சங்கமும் இதுபற்றி பேசுவது இல்லை. ‘சிஸ்டம் சரியில்லை, ஆட்சி சரியில்லை’ என்று ட்விட்டரில் பெரிய நடிகர்கள் கூறுகிறார்கள். முதலில் நம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x