Published : 11 Aug 2017 07:08 PM
Last Updated : 11 Aug 2017 07:08 PM
பொறியாளராக இருக்கும் இளைஞன் எதிரியால் வேலை இழக்க, பகை வென்று முடிப்பதே 'வேலையில்லா பட்டதாரி 2'.
சிறந்த பொறியாளருக்கான விருதைப் பெறுகிறார் தனுஷ். அவர் தன் நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறார் கஜோல். ஆனால், அதை நிராகரிக்கிறார் தனுஷ். இதனால் இருவருக்கும் பகை மூள்கிறது. தனுஷ் பணிபுரியும் நிறுவனத்துக்கு கிடைக்கும் எல்லா செயல் திட்டங்களையும் தன் நிறுவனத்துக்கே கிடைக்கும்படி செய்கிறார் கஜோல். தனுஷ் பணிபுரியும் நிறுவனம் பல இழப்புகளை சந்திக்கிறது. இந்த சூழலில் தனுஷ் என்ன முடிவெடுக்கிறார், வேலையை எங்கு எப்படி தொடர்கிறார், கனவை நனவாக்கினாரா என்ற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது வேலையில்லா பட்டதாரி 2.
'வேலையில்லா பட்டதாரி' படத்துக்குக் கிடைத்த வரவேற்பை, ரசிகர் கூட்டத்தை இன்னும் விரிவுபடுத்த வேண்டும் என்பதற்காக இயக்குநர் சவுந்தர்யா ரஜினி முயற்சித்திருக்கிறார்.
தனுஷ் வழக்கம் போல பஞ்ச் வசனம் பேசுகிறார், எதிரிகளைப் புரட்டி எடுக்கிறார், நடு ரோட்டில் நடனம் ஆடுகிறார், சவால் விடுகிறார். மறக்காமல் ரஜினியை இமிடேட் செய்யும் பணியையும் சிறப்பாக செய்து முடிக்கிறார்.
கஜோலுக்கு பில்டப் அதிகமாகவே இருக்கிறது. அதற்கு ஈடு கொடுக்கும் அளவுக்கு கஜோலின் கதாபாத்திரம் கட்டமைக்கப்படவில்லை. ஆனாலும், அந்த இடைவெளியை சமாளிக்கும் அளவுக்கு கஜோல் நடித்திருக்கிறார். அது மிரட்டலாகவும், கம்பீரமாகவும் இல்லை என்பதே குறை.
அமலாபால் ஸ்கோர் செய்யும் அளவுக்கு களம் அமைக்கப்பட்டுள்ளது. அதை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்கிறார்.
சமுத்திரக்கனி நடிப்பு இயல்பாகவும், மிகச் சிறப்பாகவும் உள்ளது. விவேக், சரண்யா பொன்வண்னன் ஆகிய இருவரும் தன் இருப்பை சரியாகப் பதிவு செய்கிறார்கள். சரவண சுப்பையா, பாலாஜி மோகன், ஜி.எம்.குமார், செல்முருகன், ரீத்து வர்மா ஆகியோர் பொருத்தமான பாத்திர வார்ப்புகள்.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்கள் மனதில் ஒட்டவில்லை. அனிருத்தின் தடை அதை உடை பாடலுக்குக் கிடைக்கும் வரவேற்பு ஷான் ரோல்டனின் பின்னணி இசைக்குக் கிடைக்கவில்லை. ஷமீர் தாஹிரின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது.
படத்தின் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் எடுப்பது வழக்கம்தான். ஆனால், முதல் பாகத்தில் சாதகமாகவும், பலமாகவும் இருந்த அத்தனை அம்சங்களையும் தவறாமல் இரண்டாம் பாகத்திலும் இடம்பெற வைத்திருப்பது சோர்வை ஏற்படுத்துகிறது. புதிதாக எதுவும் இல்லாமல் பழைய டெம்ப்ளேட்டிலேயே கதை பயணிக்கிறதே என்ற உணர்வை வரவழைக்கிறது.
தனுஷ் - கஜோல் எதிரிகளாக மாறும் தருணங்களும், அவர்கள் பகை பெரிதாக வெடிக்கும் சூழலும் வலுவாக இல்லை. சூழல் வலுவாக இல்லாததால் காட்சிகளும் எடுபடவில்லை. நகைச்சுவை என்ற பெயரில் வீட்டில் அமலாபால், சமுத்திரக்கனியுடன் பேசுவதெல்லாம் படு செயற்கையாகவும், மிகைத்தன்மையுடனும் உள்ளது.
மொத்தத்தில் 'வேலையில்லா பட்டதாரி 2' டெம்ப்ளேட் தனுஷ் சினிமாவாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT