Last Updated : 24 Aug, 2017 05:46 PM

 

Published : 24 Aug 2017 05:46 PM
Last Updated : 24 Aug 2017 05:46 PM

முதல் பார்வை: விவேகம் - அஜித் மேஜிக்!

நாட்டை கபளீகரம் செய்ய மண்ணில் புதைக்கப்படும் புளூட்டோனியம் அணுகுண்டுகளை சத்தமில்லாமல் செயலிழக்க வைத்து மக்களைக் காக்கப் போராடும் சாகச வீரனின் கதையே 'விவேகம்'.

இன்டர்நேஷனல் ஏஜென்ட் போல செயல்படும் அஜித் சர்வதேச ராணுவ அதிகாரி. அவரது குழுவில் நான்கு பேர் உள்ளனர். ஐவரும் சேர்ந்து நாட்டுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பல விஷக்கிருமிகளை அழிக்கின்றனர். அந்த இடைவிடாத செயல்பாடுகளில் அணுகுண்டுகளை செயலிழக்கச் செய்யப் போராடும் போது அஜித்துக்கு வாழ்வா சாவா என்ற நிலை ஏற்படுகிறது. அந்த நிலை என்ன, அதற்குக் காரணமானவர்கள் யார், காதல் மனைவியைக் காப்பாற்ற முடிந்ததா, அந்த அணுகுண்டால் ஏற்படும் ஆபத்து என்ன என்பதை வேகமாக விறுவிறுப்பாக விவேகத்துடன் சொல்லியிருக்கிறார்கள்.

அஜித் - சிவா கூட்டணியில் இது 3-வது படம். அதனாலோ என்னவோ கிராமம், நகரம், சர்வதேசம் என்று படத்துக்குப் படம் வித்தியாசம் காட்டுவதில் சிவா முனைப்பு காட்டியிருக்கிறார். அவரின் முனைப்பும், முயற்சியும் பாராட்டுக்குரியது. ஆனால், அது முழுமையடையவில்லை என்பதும் கவனத்துக்குரியது.

அஜித் படம் முழுக்க அதிகாரிக்குரிய மிடுக்கோடும், தோரணையுடனும் வசீகரத்துடன் வலம் வருகிறார். கடுமையான அவரது உழைப்பு சண்டைக் காட்சிகளிலும், சிக்ஸ்பேக்கிலும் தெரிகிறது. ''இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும், எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட, நீ தோத்துட்ட என உன் முன்னால் நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிற வரைக்கும் எவனாலும், எங்கேயும், எப்பவும் உன்னை ஜெயிக்க முடியாது'', ''யுத்தம்ங்கிறது எண்ணிக்கையில இல்லை எண்ணத்துல இருக்கு'' என்று பஞ்ச் வசனம் பேசுவது பொருத்தமாக உள்ளது. ஆனால், நடிப்பில் அந்த உற்சாகத்தையும், உணர்வையும் அஜித் இன்னும் கடத்தியிருக்கலாம்.

காஜல் அகர்வாலுக்கு வலுவான பெண்ணுக்குரிய கதாபாத்திரம். அதை அவர் நிறைவாக செய்திருக்கிறார். கருணாகரன் கதாபாத்திரம் நகைச்சுவைக்காக கட்டமைக்கப்பட்டுள்ளது. அதற்கான பங்களிப்பை கருணாகரன் குறையில்லாமல் கொடுத்திருக்கிறார். அக்‌ஷராவுக்கு அழுத்தமான கதாபாத்திரம். அதை அவர் சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்.

''போராடாம அவன் போகவும் மாட்டான், சாகவும் மாட்டான்'', ''பீனிக்ஸ் பறவை மாதிரி எரிக்க எரிக்க எழுந்து வர்றான்'', ''அவன் பின்னாடி சுடுறவன் இல்லை, முன்னாடி சுடுறவன்'' என்று அஜித்துக்காக உத்வேக வசனங்கள் பேசி, பில்டப் கொடுப்பதையே தன் முழு நேரப் பணியாக விவேக் ஓபராய் செய்திருக்கிறார். அவரின் கதாபாத்திரத்துக்கும், இந்த பில்டப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதோடு அது கைதட்டலுக்கான காரணியாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தப் பணியை சின்ன சின்ன மர்ம சிரிப்புகளுடனும், மனம் திறந்த பாராட்டுகளுடன் சொல்லிச் செல்வதைத் தவிர விவேக் ஓபராய் நடிப்பில் பெரிதாய் ஈர்க்கவில்லை.

''நான் யாருங்கிறதை நான் முடிவு பண்றதில்லை. என் எதிர்ல இருக்குறவங்க தான் முடிவு பண்றாங்க அவங்களுக்கு நான் நண்பனா இல்லை எதிரியான்னு'', ''விட்டுக்கொடுத்து வாழ்றது வாழ்க்கை இல்லை. ஒருத்தரை ஒருத்தர் விட்டுக்கொடுக்காம வாழ்றதுதான் வாழ்க்கை'', ''ஜெயிக்குறது முன்னாடி கொண்டாடுறதும், ஜெயிச்ச பிறகு ஆடுறதும் என் பழக்கம் இல்லை'' என படம் முழுக்க வசனங்களால் தெறிக்க விடுகிறார் இயக்குநர் சிவா. தொழில்நுட்ப ரீதியாக மிகவும் தரமான படத்தை அளித்திருக்கிறார். அதற்கு மிலனின் கலை இயக்கமும், வெற்றியின் ஒளிப்பதிவும் மிகுந்த ஒத்துழைப்பை அளித்துள்ளன.

கலோயன், கணேஷின் சண்டைக் காட்சிகளும், அனிருத்தின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. தலை விடுதலை பாடல் உத்வேக எழுச்சியின் அடையாளமாக பரிணமிக்கிறது. மற்ற பாடல்களில் அனிருத்தின் எனர்ஜி பெரிதாய் இல்லை. பின்னணி இசையில் அனிருத் தன்னை நிரூபித்திருக்கிறார். ரூபனின் கத்தரி கச்சிதம்.

சப் டைட்டிலில் இருக்கும் தமிழில் அத்தனை பிழைகளை இயக்குநர் எப்படி கவனிக்காமல் விட்டார்? நாயகன் மீதான அபிமானத்தை கதாபாத்திர வடிவமைப்பிலும் இயக்குநர் காட்டியிருக்கிறார். அதனாலேயே அவரின் செயல்பாடுகள் தனி மனித சாகசம் நிறைந்ததாக, துப்பறியும் நிபுணராக, தொழில்நுட்ப வல்லுநராக என பல பரிணாமங்களில் இருக்கிறது. ஆனால், அது எந்த எல்லைக்கும் கட்டுப்படுத்தப்படாத பணியாக, பதவியாக, பாத்திரமாக இருப்பதால் நம்பகத்தன்மை இல்லாத மிகைத் தன்மை மட்டுமே மிஞ்சுகிறது. அதிகாரியாகவோ, நண்பனாகவோ, கணவனாகவோ பார்க்காமல் தேவதூதனைப் போன்றே பாத்திரங்கள் தனி மனித துதியை உயர்த்திப் பிடிப்பதால் திரைக்கதையில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. நாயகனுக்கான தடைகள் பெரிதாகவும், வலுவாகவும் இல்லாததால் இரண்டாம் பாதியில் தொய்வு எட்டிப் பார்க்கிறது. லாஜிக் என்று எதுவும் இல்லாமல், உணர்வுபூர்வமான காட்சிகளைக் கூட பொருத்தமில்லாமல் பதிவு செய்திருக்கிறார்கள். காஜல் அகர்வால் அந்த கடைசிக் கட்டத்தில் பாடும் பாடல் அபத்தமாக ஒலிக்கிறது. அஜித்தின் சிக்ஸ்பேக்கையாவது முழுமையாகக் காட்டியிருக்கலாம் என்ற ரசிகரின் ஏக்கம் வெளிப்படுகிறது.

இவற்றையெல்லாம் தாண்டி 'விவேகம்' படத்தைப் பார்க்க வைப்பது அஜித்தின் மேஜிக் மட்டும்தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x