Published : 30 Aug 2017 07:52 AM
Last Updated : 30 Aug 2017 07:52 AM
தி
ரைப்பட இசை, ஆல்பங்கள், விருதுகள், உலக இசைப் பயணம் என்று தொடர்ச்சியாக பல உச்சங்களை எட்டிக் கொண்டிருக்கும் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான், மைக்கேல் ஜாக்சனின் ‘திஸ் இஸ் இட்’ கான்சர்ட் சினிமா பாணியில் ‘ஒன் ஹார்ட்’ என்ற இசைத் திரைப்படத்தை உருவாக்கியுள்ளார். ஒரு வாரத்தில் அத்திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், அவருடன் ஒரு நேர்காணல்..
நீங்கள் இயக்குநர் ஆகக் காரணம் என்ன?
திரைப்படம் இயக்க வேண்டும் என்கிற ஆர்வமெல்லாம் ஆரம்பத்தில் இல்லை. சினிமா துறைக்குள் நிலவும் அதிகாரம்தான், அந்த நினைப்பை உண்டாக்கியது. இங்கு கதாநாயகனுக்குதான் அதிக முக்கியத்துவம். அடுத்து கதாநாயகி, இயக்குநர், தயாரிப்பாளர் என்ற வரிசையில் இசையமைப்பாளருக்கு 5 அல்லது 6-வது இடம்தான் கொடுக்கப்படுகிறது. இதனால் இசையிலேயே அதிகம் சாதிக்க முடியவில்லை. புதிதாக ஏதாவது செய்யலாமே என்ற எண்ணத்தில் கதை, திரைக்கதைக்குள் ஆர்வம் காட்டினால், இவர் எதற்காக இதில் தலையிடுகிறார் என்பார்கள். அதனால், நான் சொல்ல நினைக்கும் பாணியில் திரைக்கதை அமைத்து எடுக்க முடிவெடுத்தேன்.
உங்களுக்குள் இருக்கும் இயக்குநரை எந்தத் தருணத்தில் கண்டுபிடித்தீர்கள்?
இன்னும் கண்டுபிடிக்கவில்லை (சிரிக்கிறார்). கற்றுக்கொண்டிருக்கிறேன். 2001-ல் மேடை இசை நாடகமாக எடுக்கப்பட்ட ‘பாம்பே டிரீம்ஸ்’-க்குப் பணியாற்றும்போது, அதன் தயாரிப்பாளர் ஆண்ட்ரூ லலாய்ட் வெப்பருடன் நட்பு உண்டானது. ‘‘உங்களிடம் ஏதாவது கதை இருக்கா?’’ என்றார். அப்போது இல்லை என்று சொல்லிவிட்டேன். பிறகு ஆஸ்கர் விருதுகள் வாங்கிவிட்டு, விழா அரங்கில் இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்களைச் சந்தித்து உரையாடியபோது, லண்டனில் பிரபல மேடை நாடகங்களைப் பார்த்தபோது இயக்குநர் ஆகும் எண்ணம் துளிர்த்தது. நம் சினிமா, வெறுமனே கதாநாயகனை மட்டுமே மையமாக வைத்து பல காலமாகக் கதை சொல்லிக்கொண்டிருக்கிறது. நாம் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் விதவிதமான வாழ்க்கை முறை, புதிய கதை இருக்கிறது. அதையெல்லாம் ஏன் படமாக எடுக்கக்கூடாது எனத் தோன்றியது. என் முதல் கதை உருவானது 16 மணிநேர விமானப் பயணத்தின்போது. மேகங்கள் நடுவே மிதந்தபடி என்ன செய்வதெனத் தெரியாமல் யோசித்த போது மனதில் உதித்த கதைதான் ‘99 சாங்ஸ்’. தொடர்ந்து ‘இன்ஃபினிட் லவ்’, ‘லீ மஸ்க்’ என இசைக் கதைகள் எழுத ஆரம்பித்தேன்.
‘ஒன் ஹார்ட்’ படத்தை எடுத்தது எப்படி?
ஹாலிவுட்டில் இசைக் கலைஞர்களின் கச்சேரிகளைப் படமாக எடுத்திருக்கிறார்கள். மைக்கேல் ஜாக்சனின் ‘திஸ் இஸ் இட்’, கான்சர்ட் திரைப்பட வகையில் உலகப்புகழ் பெற்றது. இந்தியாவில் முதல்முறையாக இந்த வகை சினிமாவை பிபிசியில் பணிபுரியும் நஸ்ரின் முன்னி கபீர், ஆமித் உள்ளிட்டோருடன் இணைந்து ஒய்.எம்.குழுவின் படமாக உருவாக்கி செப்டம்பர் 7-ல் திரையரங்குகளில் வெளியிடுகிறோம். இதில் என் இசை அனுபவங்கள், வாழ்க்கை குறித்த என் தத்துவார்த்தப் புரிதல், ஹரிசரண், ஜோனிதா காந்தி, ரஞ்சித் பாரட், கேபா, ஆண்ட், சிராஜ், மோஹினி, கார்த்திக் தேவராஜ், ஆன் மேரி உள்ளிட்ட இசைக் குழுவினருடனான அனுபவப் பகிர்வு எனப் பலவற்றை ஒரு கதையோட்டத்துடன் ஆத்மார்த்த சினிமாவாக ‘ஒன் ஹார்ட்’ என்ற பெயரில் உருவாக்கியுள்ளோம். இது என் அறக்கட்டளையின் பெயர். இப்படத்தின் வசூல் அந்த அறக்கட்டளைக்குச் சென்றடையும்.
அந்த அறக்கட்டளையின் நோக்கம் என்ன?
இங்கு வறுமையில் வாடும் இசைக் கலைஞர்களுக்கு, வளமான கலைஞர்கள் உதவ முன்வரவேண்டும். அதற்கான பணியை ‘ஒன் ஹார்ட்’ அறக்கட்டளை முன்னெடுக்கும். மேலும், இசைத் துறையினருக்குப் பெரிய அளவில் ஆதரவு, அங்கிகாரம் இல்லை. வரன் தேடும்போது மாப்பிள்ளை அரசாங்க வேலை, ஐ.டி. வேலை என்றால் சந்தோஷப்படுகிறார்கள். பையன் கிடார் வாசிக்கிறான் என்றால், பெண் கொடுக்க மாட்டார்கள்.
இந்த பயம் உங்களுக்கும் இருந்ததோ?
(சிரிக்கிறார்) வெளியே இதுவரை சொன்னதில்லை. பள்ளிப் படிப்பை முடித்து, கல்லூரியில் சேராமல் இசைக் கலைஞராக மாறியபோது, எதிர்காலத்தை நினைத்து சுமார் 10 ஆண்டுகள் வரை ரொம்ப பயந்தேன். எப்படியாவது கல்லூரியில் சேர்ந்துவிடவும் முயற்சித்தேன். ஆனால் நேரமும் வாய்ப்பும் கிடைக்கவில்லை.
‘ஒன் ஹார்ட்’ பற்றி...
தமிழ், ஆங்கிலம், இந்தியில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் நடத்தப்பட்ட 16 கச்சேரிகளிலும் ‘சின்ன சின்ன ஆசை’, ‘முன்பே வா’ உள்ளிட்ட பல தமிழ் பாடல்கள் பாடப்பட்டன. அவற்றையும் இதில் பார்க்கலாம். படத்தைப் பார்ப்பவர்கள் இசைக் கலைஞர்களின் உலகத்துக்குள்ளேயே வந்துவிடுவார்கள். படம் பார்த்தவர்கள், ‘ஒன்றரை மணி நேரம் போனதே தெரியவில்லை’ எனப் பாராட்டினார்கள். இசை வழியாக சொல்லப்படும் படம் என்பதால், உணர்ச்சிப் பெருக்கில் பலர் அழுதுவிட்டார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT