Last Updated : 11 Aug, 2017 06:12 PM

 

Published : 11 Aug 2017 06:12 PM
Last Updated : 11 Aug 2017 06:12 PM

முதல் பார்வை: தரமணி - அன்பின் அடர்த்தி!

வழிப்போக்கன் ஒருவனின் காதலும், சந்தேகமும், பிரிவும், தவறுகளுமே 'தரமணி'.

மழையின் நனைந்தபடி ஒரு இடத்தில் ஒதுங்கி நிற்கிறார் ஆண்ட்ரியா. அங்கே ஏற்கெனவே நின்றபடி இருக்கும் வசந்த் ரவியைப் பார்க்கிறார். ஆண்ட்ரியா மிரள்வதைப் பார்க்கும் வசந்த் ரவி அவரிடம் பேசுகிறார். தன் முந்தைய காதலைப் பற்றிச் சொல்கிறார். அதற்குப் பிறகு இருவரின் சந்திப்புகள் அன்பை வளர்க்கின்றன. ஆனால், அதற்கடுத்த நிகழ்வுகள் இருவரையும் புரட்டிப் போடுகின்றன. வசந்த் ரவி திசை மாறிச் செல்கிறார். ஆண்ட்ரியா துயரங்களுடனும், மனச் சுமையுடனும் நாட்களை நகர்த்துகிறார். இதனிடையே வசந்த் ரவியின் முன்னாள் காதலியைச் சந்திக்கிறார். இந்த சந்திப்புகள் சொல்லும் திருப்பம் என்ன, திசை மாறிச் சென்றவர் பழைய பாதைக்குத் திரும்பினாரா, ஆண்ட்ரியா என்ன ஆனார் என்பது மீதிக் கதை.

காதலும் காதல் நிமித்தமுமான கதைக் களத்தை அதன் உயிர்ப்பு குறையாமல் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராம்.

படம் முழுக்க ஆர்ப்பாட்டமில்லாத அழகான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் ஆண்ட்ரியா. தவறான கண்ணோட்டத்துடன் தன்னை அணுகும் மனிதர்களை அவர் எதிர்கொள்ளும் விதம் அசத்தல் . அம்மா, காதலி, ஐ.டி.யில் வேலை பார்க்கும் பெண் போன்ற எல்லா பரிமாணங்களிலும் பக்குவமான நடிப்பின் மூலம் நம்மை வசீகரிக்கிறார்.

அறிமுக நடிகர் வசந்த் ரவி கதாபாத்திரத்துக்கு பொருத்தமான நடிப்பை வழங்கி இருக்கிறார். காதலி மீதான சந்தேகம், அதனூடாக எழும் கோபம், ஆவேசத்தில் பொங்குவது, ஏதுமற்ற நிலையில் பாவத்தையும், பரிதாபத்தையும் சுமக்கும் மனநிலையை வெளிப்படுத்துவது என குறையில்லாமல் நடித்திருக்கிறார்.

ஒற்றைக் காட்சியில் அழகம் பெருமாள் தன் உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் உயர்ந்து நிற்கிறார். சிறுவன் ஏட்ரியன், ஜே.எஸ்.கே. சதீஷ்குமார், அஞ்சலி ஆகியோர் கதாபாத்திரத்துக்குத் தகுந்த நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.

நா.முத்துக்குமார் வரிகளில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் யாரோ உச்சிக்கிளை மேலே, உன் பதில் வேண்டி, ஒரு கோப்பை பாடல்கள் ரசனை. தேனி ஈஸ்வர் சென்னை மாநகரத்தின் ஒட்டுமொத்த அழகையும் தன் கேமராவுக்குள் அள்ளி வந்து தரமாகவும், துல்லியமாகவும் ரசிகர்களுக்குக் கடத்தி இருக்கிறார்.

''நாய்ல என்ன நல்ல நாய்? கெட்ட நாய். கரெக்டா பிஸ்கெட் போட்டா போதும்,'' ’’நீ இனிமே சிகரெட் பிடிக்காதே, ஏன் உனக்கு பிடிக்கத் தெரியலை'', ’’ஒரு பையனுக்கு அம்மா நீ. இனிமே குடிக்காதே....நீயும் உன் அம்மாவுக்கு பையன் தானே'' என்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றன.

வழிப்போக்கனாக வருபவனை ஒரு பெண் எப்படி பார்க்க வருவாள், நட்பை பலப்படுத்துவாள் என்ற கேள்விகள் இயல்பாக எழும். மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட முடியுமா? என்ற கேள்விக்கான இயக்குநர் ராம் வாய்ஸ் ஓவரில் சொல்லியிருக்கும் விதம் புத்திசாலித்தனமானது. படத்துக்கு இடையே அவர் பேசும் வசனங்களும், கொடுக்கப்படும் விளக்கங்களும் உண்மையை உரக்கச் சொல்வதாக உள்ளது.

மீனவர்கள் பிரச்சினை, வட மாநிலத் தொழிலாளர்களின் பரிதாப நிலை, விவசாயிகள் பிரச்சினை, ஐ.டி.உலகம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை என அத்தனை பிரச்சினைகளையும் மிக வலுவாக பிரச்சார நெடி இல்லாமல் பதிவு செய்த விதம் அபாரம்.

ஆண்களின் மனோபாவம், பல ஆண்களிடம் மாட்டிக்கொண்ட பெண்களின் கதை, பெண்ணின் தனித்த உறுதியான ஒழுக்கம் சார் வாழ்வு போன்றவற்றை காட்சிகளில் ஆழமாக உணர்த்தும் தருணங்கள் படத்தின் மீதான மதிப்பைக் கூட்டுகின்றன. அழகம் பெருமாள் - வசந்த் ரவி இடையிலான அந்த ரயில்வே ஸ்டேஷன் காட்சி நெகிழ வைக்கிறது.

வசந்த் ரவி ஏன் சிலரின் வழிமுறைகளையே பின்பற்றி முகம் தெரியாத பெண்களிடம் போனில் பேச வேண்டும்?அது ஏன் நீள வேண்டும் போன்ற சில கேள்விகள் மட்டும் எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. இவற்றைத் தவிர்த்துப் பார்த்தால் 'தரமணி' ஆண்கள் உலகத்தையும், பெண்கள் உலகத்தையும் அன்பின் அடர்த்தியால் புரிய வைக்கும் முக்கியமான படம்.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x