Published : 15 Jul 2017 03:19 PM
Last Updated : 15 Jul 2017 03:19 PM
முன்னாள் காதலிகளுக்கு கல்யாண அழைப்பிதழ் கொடுப்பதற்காக பயணிக்கும் இளைஞனின் கதையே 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்'.
நடிகர் ஜெமினிகணேசன் மீதான அபிமானம் காரணமாக தன் மகனுக்கு ஜெமினி என்று பெயர் வைக்கிறார் சிவா. ஜெமினியின் காதல் நடிப்பை மகனிடம் சொல்லி வளர்க்கிறார். இதனால் மகன் அதர்வாவுக்கு காதலிப்பதும், காதல் வசப்படுத்துவதும் கைவந்த கலையாகிறது. இதனால் ஒரே தருணத்திலும், அடுத்தடுத்தும் நான்கு பேரைக் காதலிக்கிறார். அந்தக் காதல் ஏன் பிரிவில் முடிகிறது, இறுதியில் அதர்வா யாரைத் திருமணம் செய்து கொள்கிறார், சூரியை எப்படி அதர்வா சந்திக்கிறார், முன்னாள் காதலிகளின் தற்போதைய நிலை என்ன என்ற கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் படமே 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்'.
ஒன்றுக்கு மேற்பட்ட காதலை உணர்வுபூர்வமாக, விளையாட்டாக பல படங்கள் சொல்லி இருக்கின்றன.இயக்குநர் ஓடம் இளவரசு ஒன்றுக்கு மேற்பட்ட காதலை நகைச்சுவை கலந்து சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அது ரசிகர்களிடத்தில் எடுபடவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும்.
லவ்வர் பாய், பிளே பாய் இமேஜில் அழுத்தமாக ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று அதர்வா மெனக்கெடுகிறார். சின்னச் சின்ன சேட்டைகள், குறும்புத் தனங்கள், குரல் மாதிரிகள் என மேஜிக் செய்கிறார். ஆனால், அது அதர்வாவுக்கு பொருத்தமாக இல்லை. மற்றபடி கதாபாத்திரத்துக்கு ஏற்ப அப்பாவியாக முகத்தை வைத்துக் கொள்வது, வெகுளியாக நடிப்பது, நடனங்களில் கவனிக்க வைப்பது என தன் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
ரெஜினா, ஆதிதி போஹங்கர், ப்ரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் சரிசமமாக திரையை ஆக்கிரமித்திருக்கிறார்கள். எல்லோருக்கும் ஒரு பாடல் என இயக்குநர் சமரசத்தை உலவ விட்டிருக்கிறார். வழக்கம் போல நாயகிகள் நாயகன் மீதான பிரியத்தை வெவ்வேறு வடிவங்களில் பிரதிபலித்துக் கொண்டே இருக்கிறார்கள்.
'நான் கடவுள்' ராஜேந்திரன் கட்டப்பா தோற்றத்தில் வந்து போகிறார். ஐ யம் வெயிட்டிங், தெறி பேபி என முந்தைய படங்களின் சாயலை இதிலும் தெறிக்க விடுவதால் சோர்வே மிஞ்சுகிறது.
சுருளிராஜன் கதாபாத்திரத்தில் சூரி கொஞ்சம் அதிகமாகவே அலப்பறை செய்கிறார். ரைமிங்கில் பேசுகிறேன் என்று ஒவ்வொரு வார்த்தையையும் மாற்றிச் சொல்வது, அலுத்துப் போகும் அளவுக்கு நீள வசனங்கள் பேசி களைப்படையச் செய்வது, ஒற்றை நபராய் உதார் விடுவது என எந்த கச்சிதமும் இல்லாமல் நீட்டி முழங்குகிறார். அதர்வாவுக்கு அறிவுரை சொல்லும் ஒரு இடத்தில் மட்டும் சூரியின் நடிப்பு மெச்சத்தக்கதாய் உள்ளது.
அதர்வாவின் அப்பாவாக வரும் டி.சிவா இயல்பாக நடித்திருக்கிறார். மயில்சாமி சில காட்சிகளே வந்தாலும் அறிமுகக் காட்சியிலேயே ரசிகர்களை சிரிக்க வைத்து தியேட்டரை அதிரச் செய்கிறார்.
ஸ்ரீசரவணனின் கேமராவும், இமானின் இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. ஆஹா ஆஹா பாடலும், அம்முக்குட்டி பாடலும் ரசனை அத்தியாயங்கள்.
கதை கூறிய விதத்திலும், சின்ன சின்ன ட்விஸ்ட்டை அதர்வா சூரியிடம் விவரிக்கும் விதத்திலும் நேர்த்தி பளிச்சிடுகிறது. ஆனால், டி.சிவா தன் மகனைக் கண்டிக்காமல் ஏன் வேடிக்கை பார்க்கிறார், மகனைத் திருத்த அவர் எந்த வழிமுறையையும் மேற்கொள்ளாதது ஏன், ஒவ்வொரு காதலையும் அதர்வா கைவிடுவதற்கான காரணங்கள் என்ன, அழுத்தமே இல்லாத காதல் படலத்தை அதர்வா தொடர்வது ஏன் போன்ற பல கேள்விகள் படத்தில் எழுகின்றன. பலவீனமான திரைக்கதை, நம்பகத்தன்மை இல்லாத ஒரே மாதிரியான காதல், நகைச்சுவை என்ற பெயரில் உள்ள பக்குவமில்லாத காட்சிகள் போன்றவற்றால் 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' எடுபடாத லீலையாக மட்டுமே உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT