Last Updated : 15 Jul, 2017 11:06 AM

 

Published : 15 Jul 2017 11:06 AM
Last Updated : 15 Jul 2017 11:06 AM

நடிகைகள் கம்பீரமாக நிற்பது பெருமை!- இயக்குநர் கோபி நயினார் நேர்காணல்

சாதாரண மக்களுக்கு ஒரு பிரச்சினை என்று வரும்போது, ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்கள் அதைப்பற்றி துளியும் கவலைப்பட மாட்டார்கள். அறத்தைப் பேசும் தர்மம், ஒழுக்கம், கடமை என்ற சொற்கள் எல்லாம் நம் வாழ்க்கை நெறிமுறைகளோடு கலந்தவை. ஆனால், அதற்கான நெறியில் நின்று மக்களுக்குச் செய்யவேண்டிய பொறுப்பிலும், இடத்திலும் இருப்பவர்கள் அதைப்பற்றி கவலைப்படுவதில்லை அதை சுட்டிக்காட்டும் நோக்கத்தில் எடுக்கப்பட்ட படம்தான் ‘அறம்’ என்கிறார் படத்தின் இயக்குநர் கோபி நயினார்.

நயன்தாரா நடிப்பில் அடுத்து வெளிவரவுள்ள படம் இது. படத்தின் வெளியீடு சம்பந்தமான இறுதிக்கட்ட வேலைகளில் சுறுசுறுப்பாக இருந்த இயக்குநர் கோபி நயினாருடன் ஒரு நேர்காணல்..

இப்படத்தின் திரைக்கதை, தண்ணீர் பிரச்சினையை மையமாகக் கொண்டதாமே?

தாகத்தோடு மட்டுமே தொடர்புடையது அல்ல தண்ணீர். அது நம் வாழ்க்கை, தொழில்முறை உள்ளிட்ட பல அம்சங்களோடு தொடர்புடையது. இங்கே ஹிட்லரின் வாழ்க்கையை வெவ்வேறு கோணங்களில் 100-க்கும் மேற்பட்ட படங்களில் பதிவு செய்திருக்கிறோம். அதுபோலத்தான், ‘தண்ணீர் கொள்ளை’ என்ற ஒரு பிரச்சினையை வைத்துக்கொண்டு அது தொடர்பாக பல விஷயங்களை கையாண்டிருக்கிறோம். அந்தப் பிரச்சினை திரைக்கதையாகும்போது ஒரு குடும்பத்தைப் பின்னணியாகக் கொண்டு சுழலும்.

இதில் நயன்தாராவின் கதாபாத்திரம் என்ன?

மாவட்ட ஆட்சியராக நயன்தாரா நடித்திருக்கிறார். ஆட்சியராகப் பொறுப்பில் இருக்கும் அவர், செய்ய முற்படும் செயல்களில் பல இடர்ப்பாடுகளைச் சந்தித்து தோல்வி அடைகிறார். படம் பார்க்கும் சாமானிய மக்கள் அந்த தோல்விகளை தங்களது அனுபவமாக மாற்றிக்கொள்ளும் விதத்தில் திரைக்கதையை உருவாக்கியுள்ளேன். அதுதவிர, கலெக்டர் என்ற பொறுப்பைத் தாண்டி, ஒரு தனி நபராக தன்னைச் சுற்றியுள்ள பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதையும் படம் பேசும். நயன்தாரா ரொம்பவே அர்ப்பணித்து நடித்திருக்கிறார்.

மாவட்ட ஆட்சியர் என்ற பின்னணியில் பல படங்கள் வருகின்றன. இப்படத்தில் என்ன புதுமை?

வெற்றியைக் காட்டும் திரைக்கதை என்றால், கஷ்டப்பட்டு படித்து கடைசியில் ஆட்சியராவதுபோல காட்டுவார்கள். இப்படத்தில், ஆட்சியர் என்பது பெருமை இல்லாத பதவி என்ற கோணத்தில் திரைக்கதை அமைத்துள்ளோம். அதுவே கதையில் மிகப் பெரிய வித்தியாசத்தை பிரதிபலிக்கும்.

சீனியர் நடிகைகள் சினிமா கேரியருக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன்பு இதுபோல முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடிக்கிறார்கள் என்ற விமர்சனம் உள்ளதே?

அப்படிக் கூற முடியாது. இந்த சமூக கட்டமைப்பு ஆணாதிக்கம் மிக்கது. நாயகனுடன் காதல் பேசி, டூயட் பாடவும், ரசிகனை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளவுமே இங்கு நாயகிகள் தேவைப்படுகின்றனர் என்ற பார்வை இருக்கிறது. அதையெல்லாம் உடைத்துவிட்டு காலூன்றி வெளியே வந்து கம்பீரமாக எழுந்து நிற்க பெண்ணுக்கு ஒரு காலகட்டம் தேவைப்படுகிறது.

அந்த காலகட்டம் வந்த பிறகு, தனக்கான கதையை, தான் நினைக்கும் பாத்திரங்களை செய்ய நடிகைகள் முற்படுகின்றனர். அவர்களை வைத்து வணிகம் மட்டுமே பார்க்கும் நோக்கம் கொண்டவர்கள் அந்த நேரத்தில் அடிபட்டுப் போகிறார்கள். தற்போது கதையின் முக்கிய பாத்திரமாக நின்று தனக்கான கதையை, கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் நடிகைகளின் செயல் அற்புதமானது. அவர்களைப் பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது.

உங்கள் அடுத்த படம்?

பேச்சுவார்த்தை நடக்கிறது. அனேகமாக, அடுத்த படமும் சமூக சிந்தனை நிரம்பியதாகவே இருக்கும். இனி வரும் என் எல்லா படங்களிலுமே திரைக்கதையில் உரையாடல், கதாபாத்திரங்கள், பின்னணி இடங்கள் வேண்டுமானால் மாறக்கூடும். ஆனால், என் திரைமொழிக்கான கோட்பாடு மாறாது. அதில் சமூகம் மட்டுமே பிரதான இடமாக இருக்கும்.

‘கத்தி’ திரைப்படத்தின் கதை பிரச்சினையில் உங்களுக்கான தீர்வு கிடைத்ததா?

இனி அதைப்பற்றி பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். அந்த அடையாளம், நினைவுகள்கூட தேவையில்லை என்று கருதுகிறேன். நான் இன்னும் அடுத்தடுத்து செய்ய நிறைய வேலைகள் இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x