Published : 22 Jul 2017 07:21 PM
Last Updated : 22 Jul 2017 07:21 PM
இசை மீதான தன் கனவை நனவாக்கவும், காதலியைக் கைபிடிப்பதற்காகவும் முயற்சிக்கும் ஆதித்யா, ஹிப் ஹாப் தமிழா ஆதியாக அடையாளம் பெறுவதே 'மீசைய முறுக்கு'.
ஆதிக்கு சிறு வயதிலிருந்தே இசை மீது தீராக் காதல். இசைத்துறையில் பெரிதாக சாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார். பேராசிரியர்களாக இருக்கும் அவரது பெற்றோர் விவேக்கும், விஜயலட்சுமியும் ஆதியை இன்ஜினீயரிங் படிக்கச் சொல்கிறார்கள். அவரும் இசையை விடாமல் பற்றியபடி, இன்ஜினீயரிங் படிக்கிறார். பள்ளிப் பருவத்தில் தன்னுடன் படித்த ஆத்மிகா ஒரே கல்லூரியில் படிக்கிறார் என்பதை கண்டுகொண்ட பிறகு காதலில் தீவிரமாகிறார். வழக்கம்போல எதிர்ப்பு கிளம்புகிறது. ஆதியின் இசைக் கனவு என்ன ஆனது, அதற்கான தேடுதல் பயணங்கள் என்ன, ஆத்மிகாவைக் கரம் பிடித்தாரா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது மீசைய முறுக்கு.
இசையமைப்பாளர் ஆதி 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் கதாநாயகனாவும், இயக்குநராகவும் புரமோஷன் பெற்றிருக்கிறார். அதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஆதி எடுத்த முயற்சிகள் வரவேற்கத்தக்கவை.
பொறுப்பான அப்பாவாக விவேக் தன் குணச்சித்ர நடிப்பால் கவனிக்க வைக்கிறார். தமிழ்நாட்டில் இருக்கும் பள்ளிக்கூடத்தில் தமிழில் பேசக் கூடாதா? என தமிழின் பெருமையை உணர்த்தும் விதத்தில் விவேக் கைத்தட்டல்களை அள்ளிச் செல்கிறார். 'இசையை ஹாபியா வெச்சுக்கோ. அதையே கெரியரா, புரொஃபஷனா வெச்சுக்காதே. கஷ்டப்படுவ' என்று சொல்லும் விவேக், பிறகு மகனின் கஷ்டம் உணர்ந்து அறிவுரை சொல்லும் இடத்தில் நல்ல அப்பாவாய் நிமிர்ந்து நிற்கிறார்.
ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு இது முதல் படம். கதைக்களத்துக்கேற்ற தோரணையுடன் வலம் வருகிறார். பம்முவது, சீனியர்களுடனான மோதலில் முதலில் ஒதுங்குவது பிறகு துணிச்சலுடன் பாய்வது என கதாபாத்திரத்துக்கேற்ற நடிப்பைத் தர முயற்சித்திருக்கிறார். தோல்வி, நிராகரிப்பின் வலியை பாடலாகப் பாடும்போது கண்களில் நிறைகிறார். ஆனால், நாயகனுக்கான பல அம்சங்கள் அவரிடம் மிஸ்ஸிங். நடிப்பில் ஆதி இன்னும் மெருகேற வேண்டும்.
கதாநாயகி ஆத்மிகா கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார். 'அவனவன் இன்ஜினீயரிங் முடிச்சிட்டு பிளேஸ்மெண்ட் போறான், நீ வெட்டிக் கனவு காணுற' என அலுத்துக்கொள்ளும் வழக்கமான அம்மாவாக விஜயலட்சுமி இயல்பாக நடித்திருக்கிறார்.
ஸ்மைல் சேட்டை விக்னேஷ் காந்த் நகைச்சுவையைத் தெறிக்க விடுகிறார். இவரின் ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் அப்ளாஸ் அள்ளுகிறது.
ஆதியின் தம்பியாக வரும் அனந்த், கெத்து சீனியர் சுதாகராக வரும் வினோத், ஆத்மிகாவின் மாமாவாக வரும் கஜராஜ், கல்லூரி முதல்வராக வரும் ஷா ரா ஆகியோர் பொருத்தமான தேர்வு.
யு.கே.செந்தில் குமார், கிருத்திவாசனின் ஒளிப்பதிவும், ஆதியின் பின்னணி இசையும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்க்கின்றன. மாட்டிக்கிச்சு, சக்கரகட்டி, வாடி புள்ள வாடி பாடல்கள் ரசனை. ஆனால், பாடல்களில் எந்த வித்தியாசமும் இல்லாமல் வெரைட்டி காட்டாமல் ஒரே மாதிரியான பாடல்கள் பயன்படுத்தி இருப்பதை ஆதி தவிர்த்திருக்கலாம்.
ஃபென்னி முதல் பாதியில் சில இடங்களில் கத்தரி போட்டு, இரண்டாம் பாதியின் சில காட்சிகளை முதல் பாதியிலேயே சேர்த்திருக்கலாம்.
''தோற்றாலும் ஜெயிச்சாலும் மீசையை முறுக்கு'', ''தோற்றா ஜெயிக்கணும்னு மட்டும்தான் தோணும், ஆனா அவமானப்பட்டா சாதிக்கணும்ங்கிற வெறியே வரும்'', ''நீ சொந்தக்காரங்களால நிக்குற, நான் சொந்தக் கால்ல நிற்குறேன்'' போன்ற வசனங்கள் எனர்ஜி ப்ளஸ்.
தன் வாழ்க்கை வரலாறை உண்மையாக சொல்ல ஆசைப்பட்ட ஆதி சில சம்பவங்களுடன் படமாகப் பதிவு செய்திருக்கிறார். ஆனால், படத்தில் கதைக்களம் திரைக்கதையாக உரு பெறாமல் காதல் குறித்த பயணத்திலேயே நெடுநேரம் சிக்கி நிற்கிறது. காதலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை இசை மீதான தன் கனவு எப்படிப்பட்டது என்பதை ஆதி உருக்கமாகவும் நெகிழ்வாகவும் சொல்லத் தவறி விட்டார். கல்லூரி மேடையில் ஒரு அவமானம் நேரும் போது அதை எந்தக் காட்சியிலும் சரி செய்யாமல் விளையாட்டுத்தனமாகவே அணுகி இருப்பது நெருடல். ஆதி, அனந்த், வினோத் ஆகிய மூவருக்கும் பெரிய பில்டப்புகளை வஞ்சகம் இல்லாமல் வழங்கி இருக்கிறார். ஆனால் அது ஆதியைத் தவிர மற்ற இருவருக்கும் பொருத்தமாக இல்லை.
காதல் காட்சிகளும் வழக்கமும் பழக்கமும் ஆனதாகவே இருக்கிறது. ஆனாலும் இளைஞர்களின் மனதை கொள்ளையடிக்கும் அளவுக்கு உற்சாகம் விதைப்பது, அவமானம், நிராகரிப்பு தாண்டி வாழ்க்கையை பிடித்த மாதிரி வாழ்வது என சில கருத்துகளைச் சொல்லி கவர்ந்திருப்பதால் 'மீசைய முறுக்கு' கல்லூரி நாட்களை நினைவூட்டுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT