Published : 26 Jul 2017 09:15 AM
Last Updated : 26 Jul 2017 09:15 AM
ித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கும் ஒருசில நடிகர்களில் முக்கியமானவர் அசோக் செல்வன். ‘தெகிடி’, ‘பீட்சா 2’ உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தற்போது ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தில் நடித்துள்ளார். படம் வெளியாகவுள்ள நிலையில், அவருடன் ஒரு நேர்காணல்..
ஒரு பத்திரிகையாளர் படம் இயக்கப்போவதாகக் கூறி கதை சொன்னபோது என்ன நினைத்தீர்கள்?
வாழ்க்கையில் நடுபெஞ்ச் மாணவர்களின் கதையை யாருமே சொன்னதில்லை. அதை தா.செ.ஞானவேல் சார் கதையாக உருவாக்கியதில் இருந்தே நல்ல பத்திரிகையாளர் என்பது தெரிந்தது. ராதாமோகன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்களோடு இயக்குநராகப் பணிபுரிந்தவர். அவர் சொன்ன கதையில் புதுமை இருந்தது.
கதையைச் சொன்ன விதம், உபயோகித்த வார்த்தைகள் அனைத்துமே என்னை மிகவும் கவர்ந்தது. நம் வாழ்க்கை முறைக்கு மிகவும் நெருக்கமான படமாக இது இருக்கும். அவர் பத்திரிகையாளர் அல்லவா.. பல படங்களைப் பார்த்து கதையை உருவாக்காமல், வாழ்க்கை முறையில் இருந்து கதையை உருவாக்கியுள்ளார்.
வழக்கமான கதைகளில் தொடர்ச்சியாக நடிக்காமல், மிகவும் தேர்வு செய்து கொஞ்சமாக நடிக்க என்ன காரணம்?
நிறைய படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆசையும் இருக்கிறது. ஒரு கதை கேட்டு, இது சரியாக இருக்குமா என்று யோசித்து தேர்வு செய்வதற்கு நேரமாகிவிடுகிறது. படம் எடுபடாமல் போனால் தவறாகிவிடும் என்ற கவனத்தோடு காய் நகர்த்தி வருகிறேன். மக்கள் படத்தைப் பார்க்கும்போது புதிதாக ஏதாவது இருக்க வேண்டுமே என்று நினைப்பேன். அதேநேரம், புதுமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, எனக்கு பிடிக்காத கதைகளில் நடிக்கமாட்டேன். தனியாகத் தெரியவேண்டும் என்று எல்லா நடிகர்களுமே இதைத்தான் முயற்சிக்கிறார்கள் என்று கருதுகிறேன்.
குறும்படங்கள் இயக்கி இருக்கிறீர்கள். வெள்ளித்திரையில் இயக்கம் எப்போது?
ஒவ்வொரு படத்திலும் நடிக்கும்போது, இயக்குநரின் பணியைப் பார்த்தால் பயமாக இருக்கிறது. படம் இயக்குவது சாமானிய வேலை அல்ல. ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் தலைவனாக இருந்து வழிநடத்த வேண்டும். ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், சாதுர்யமாக யோசித்து தீர்க்க வேண்டும். அந்த திறமையை எல்லாம் வளர்த்துக்கொண்ட பிறகு, கட்டாயம் ஒருநாள் படம் இயக்குவேன்.
நீங்கள் நடித்த ‘சில சமயங்களில்’ திரைப்படம் பல்வேறு விழாக்களில் விருது வாங்கியுள்ளது. 8 கதாபாத்திரங்களில் நீங்களும் ஒருவராக நடிக்க எப்படி ஒப்புக்கொண்டீர்கள்?
‘சிறைச்சாலை’, ‘காஞ்சீவரம்’ உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ப்ரியதர்ஷன் சாரின் இயக்கத்தில் நடிக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இதுவரை முழுக்க புதுமுக இயக்குநர்களிடம்தான் பணிபுரிந்துள்ளேன். ஒரு பெரிய இயக்குநரின் படத்தில் நடித்து, நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தவிர, அந்தக் கதை பெரிய அளவுக்கு பேசப்படும் என்று உள்ளுணர்வு கூறியது. அதனால், என் பங்களிப்பும் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். 8 கதாபாத்திரங்கள் இருந்தாலும், என் கதாபாத்திரம், பிரகாஷ்ராஜ் கதாபாத்திரம் முக்கியமாக இருக்கும்.
‘பி’, ‘சி’ சென்டர் படங்களான மாஸ் படங்களில் எப்போது உங்களைப் பார்க்கலாம்?
‘கூட்டத்தில் ஒருத்தன்’ படம்கூட அந்த வகைப் படம் என்று கூறலாம். ‘பி’, ‘சி’ சென்டர் படங்கள் என்பதற்கே ஒரு ஃபார்முலா வைத்துள்ளனர். அதைப் பின்பற்றியே சில நடிகர்கள் நடிக்கின்றனர். மல்டி ப்ளக்ஸ் படங்கள் மட்டுமே செய்யவேண்டும் என்பது என் விருப்பமும் அல்ல. அனைத்து தரப்பு மக்களையும் கவரும் படங்களில் நடிக்கவேண்டும் என்பதுதான் ஆசை. வாய்ப்பு வரும்போது நடிப்பேன்.
வாரத்துக்கு ஒரு புதுமுக நாயகரின் படம் வெளியாகிறது. இந்தப் போட்டியை எப்படி பார்க்கிறீர்கள்?
10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட, தற்போது படங்களும் அதிகம், போட்டியும் அதிகம். ஒவ்வொரு வாரமும் வெளியாகும் படங்களில் பலர் புதுமுக நாயகர்களாக இருக்கிறார்கள். இந்தப் போட்டியில், எந்தவித சினிமா பின்னணியும் இல்லாமல் போராடுவதே மிகப்பெரிய சவால்தான். ஆனாலும், நல்ல படங்களைத் தேர்வு செய்து நடித்தாலே கட்டாயம் கவனிக்கப்படுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT