Published : 06 Oct 2013 09:49 PM
Last Updated : 06 Oct 2013 09:49 PM
| காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்சவரை ஏமாற்றத்தை குடுக்கக் கூடாது என்று டூப் போடாமல் நடிப்பதற்கான காரணத்தைச் சொல்கிறார் நடிகர் அஜித். |
அஜித், விஷ்ணுவர்தன் இணைந்தாலே எதிர்பார்ப்பு எகிறும். 'பில்லா'வில் இணைந்தபோதே, மீண்டும் இணைந்து படம் பண்ண ஆசைப்பட்டார்கள். இப்போது 'ஆரம்பம்' மூலம் அது தொடர்ந்திருக்கிறது. தீபாவளி ரிலீஸுக்கு 'ஆரம்பம்' தயாராகிக் கொண்டிருக்க, 2014ல் ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருக்கும் 'வீரம்' ஷூட்டிங்கில் அஜித் பிஸி. படங்கள், உடல்நிலை, போட்டோகிராபி, பைக் ரேஸ் என அஜித்துடன் The Hindu நாளிதழுக்காக நிகில் ராகவன் பேசியதிலிருந்து...
" 'ஆரம்பம்', 'வீரம்' படத்துல என்ன ரோல்ல நடிக்கிறீங்க?"
"இரண்டு படங்கள்லயுமே என்னோட ரோல் வித்தியாசமானது. 'பில்லா', 'மங்காத்தா' படம் மாதிரி 'ஆரம்பம்' படத்துல ரொம்ப ஸ்டைலிஷான ரோல். முந்தைய ஏ.எம்.ரத்னம் படங்கள் மாதிரி, இந்த படத்துலயும் ஒரு நல்ல மெசேஜ் இருக்கும். உலகளாவிய பிரச்சினையை பத்தியும் இந்தப் படம் பேசும்.
'வீரம்' படத்துல அப்படியே 'ஆரம்பம்' படத்திற்கு எதிர்மறையான ரோல். ஆக்ரோஷமான கதாபாத்திரம். முக்கால்வாசி படத்துல என் காஸ்ட்யூம் வேஷ்டிதான். 'அட்டகாசம்' படத்துலதான் கடைசியா இந்த மாதிரி ரோல் பண்ணேன். 'ஆரம்பம்', 'வீரம்' இரண்டு படங்கள்லயுமே ஆக்ஷன் ரோல்தான்."
"ஒரு கதாபாத்திரத்துல நடிக்க ஒப்புக்க, என்னென்ன இருக்கணும்னு எதிர்பார்ப்பீங்க?"
"நான் ஒரு தொழில்முறை நடிகன். சம்பளம் வாங்கிகிட்டு, இயக்குநர் உருவாக்கியிருக்க கதாபாத்திரத்துல நடிக்கறவன். அதிர்ஷ்டவசமா, இதுவரை நான் நடிச்ச படங்கள்ல எனக்கேத்த ரோல் கிடைச்சுது. ரொமான்டிக் ஹீரோவா ஆரம்பிச்சு, அப்பறம் ஆக்ஷன் ரோல்ல நடிச்சு, இப்ப கொஞ்சம் கனமான கதாபாத்திரங்கள்ல நடிக்க ஆரம்பிச்சிருக்கேன். கதைக்கான ஸ்கிரிப்ட்ட நான் நம்பறேன். ஆனா, பல நேரத்துல நாம நினைக்கறது நடக்கறதில்லை. சில நேரம் இயக்குநரோட திறமைய நம்பிதான் இறங்கணும். தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ரெண்டு பேரோடயும் நான் ஒத்துப் போகற மாதிரி இருக்கணும்னு எதிர்பார்ப்பேன். படம் பண்றதே நம்மளோட பெஸ்ட் என்னவோ அதை குடுக்கத்தான். என்னைப் பொருத்தவரை திருப்தியா படம் பண்ண மனநிறைவு இருக்கணும். எனக்கு அது தான் தேவை."
"நீங்க இயக்குநரின் நடிகரா? படத்திற்கு உங்களின் பங்களிப்பு என்ன?"
"படத்துல இயக்குநர்களோட நோக்கத்தைதான் நான் நிறைவேத்தறேன். ஒரு நடிகனா, நான் என் ஆலோசனைகளை சொல்லுவேன். இயக்குநரோட கிரியேட்டிவிட்டில தலையிடாம, நாம நடிக்கறதுல நம்ம திறமையை மேம்படுத்திக்கிட்டா, அது படத்துக்கு பெரிய பலமா இருக்கும்னு நினைக்கறேன். ஷூட்டிங் நடக்கற இடத்துல ஈகோ இல்லாம போனாலே போதும், அது வாழ்க்கைய அற்புதமானதாக்கிடும், இல்லையா!"
"ரொமான்டிக் ஹீரோ, ஆக்ஷன் ஹீரோ, வில்லத்தனம் நிறைந்த கதாபாத்திரம்... எந்த ரோல் உங்களுக்கு மன திருப்தி தந்திருக்கு?"
"என்னோட இளமைல நிறைய ரொமான்டிக் ஹீரோ ரோல் பண்ணினேன். வயசு கூட கூட, எனக்கு ஏத்த ரோல்களை மட்டுமே ஒத்துக்கறேன்... நரைத்த முடி உள்பட. அதிர்ஷ்டவசமா, மங்காத்தா, பில்லா-2 ரெண்டும் அமைஞ்சது. இப்ப 'ஆரம்பம்', 'வீரம்' படங்கள்லயும் இது தொடருது. வில்லத்தனம் கொண்ட ரோல்ல நடிக்கறதால ரொமான்ஸ், சண்டைக் காட்சிகள் இல்லாம போகாது. எனக்கு சௌகர்யமான ரோல்ல நடிச்சிட்டிருக்கேன். வேலை செய்யறேங்கறது தான் எனக்கு உற்சாகத்தை குடுக்குது, அது எந்த கதாபாத்திரமா இருந்தாலும் சரி."
"சமீபமா உடல்நிலை பிரச்சினைகள் உங்களை அசரடிக்குது. இவ்ளோ ரிஸ்க் இருந்தும், ஏன் ஸ்டன்ட் காட்சிகள்ல டூப் போடாம நீங்களே நடிக்கறீங்க?"
"விபத்து, அடிபடறது எல்லாம் இந்த தொழில்ல ஒரு பகுதி.. தவிர்க்க முடியாது. நல்லவேளையா, எனக்கு நல்ல டாக்டர்கள் வாய்ச்சிருக்காங்க. சீக்கிரமா குணப்படுத்திடறாங்க. சினிமான்னு இல்லை, எந்த வேலை பாக்கறவருக்கும் உடம்பு சரியில்லாம போகறதுண்டு. ஸ்டன்ட் காட்சிகளைப் பொருத்தவரை, சில நேரங்கள்ல அதை நாமே நடிச்சாதான், படம் பாக்கும்போது சரியாயிருக்கும். அந்த மாதிரி சீன்ல நடிக்கறதுக்குன்னே தொழில்முறை ஸ்டன்ட் கலைஞர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்களை நாங்க மதிக்கறோம். ஸ்டன்ட் சீன்ல பல நேரங்கள்ல அவங்க தான் எங்களுக்கு கைகொடுக்கறாங்க. ஆனா, இன்னைக்கு படம் பாக்க வர்றவங்க ரொம்ப தெளிவா இருக்காங்க. டூப் போட்டு எடுத்த காட்சிகள் சரியா வரலைனா, கரெக்ட்டா கண்டுபிடிச்சிடுவாங்க. காசு குடுத்து டிக்கெட் வாங்கி படம் பாக்க வர்றவங்களுக்கு, நாம முடிஞ்சவரை ஏமாற்றத்தை குடுக்கக் கூடாது."
"வேகம் உங்களுக்கு ரொம்ப பிடிக்கும். அதே நேரத்துல பாதுகாப்பாவும் வண்டி ஓட்ட ஆசைப்படுவீங்க. இந்த காம்பினேஷன் நல்லா இருக்கே..."
"18 வயசுலேந்து நான் பைக், கார் ரேஸ்ல கலந்துக்கறேன். எனக்கு வேகம் பிடிக்கும், ஆனா எச்சரிக்கையோட ஓட்டுவேன். இந்தியாவுலயும் வெளிநாடுகள்லயும் பிரபல ரேஸ் கார் ஓட்டுனர்களோட பழகியிருக்கேன். அவங்ககிட்டேந்து பாதுகாப்பா வண்டி ஓட்டறதோட முக்கியத்துவத்தை கத்துகிட்டேன். இன்னிக்கு என்னோட சூப்பர் பைக்கை ஓட்டும்போது ஹெல்மெட், க்ளவுஸ், பூட்ஸ் எல்லாம் போட்டுக்குவேன். சீக்கிரமே ஒரு வெப்சைட் ஆரம்பிக்கற யோசனை இருக்கு. பைக் ஓட்டும்போது செய்ய வேண்டியவை / வேண்டாதவை பத்தின வழிகாட்டல்கள், நான் என் BMW, Aprilia சூப்பர் பைக்ல போனப்ப எடுத்த வீடியோ எல்லாத்தையும் அந்த வெப்சைட்ல ஏத்துவேன்."
"சமுதாயப் பிரச்சினை, சுற்றுச்சூழல் பிரச்சினை... ரெண்டுத்துல எதை முக்கியமானதா நினைக்கறீங்க?"
"ஒழுங்கா வரி கட்டினாலே, அது சமுதாயத்துக்கு நாம செய்யற பெரிய விஷயம்னு நினைக்கறேன். நம்ம வரிப்பணத்தை சமுதாயத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் பயன்படற மாதிரி செலவழிக்கறது, அந்தந்த துறையோட கடமை. என் குடும்பத்துக்கும், என்கிட்ட வேலை செய்யறவங்களுக்கும் என்னால முடிஞ்சதை சிறப்பா செய்யறேன். நாங்க ஒருத்தரை ஒருத்தர் சார்ந்திருக்கோம். எங்களைச் சார்ந்து அவங்களும், அவங்களைச் சார்ந்து நாங்களும். நான் செய்யற நல்ல விஷயங்களை விளம்பரப்படுத்திக்க விரும்பலை."
"நடிப்பைத் தவிர ஏரோ மாடலிங், போட்டோகிராபின்னு பல தளங்கள்ல விரியுது உங்க விருப்பங்கள்..."
"ஆமா.. பல காரணங்களால எனக்கு பிரைவேட் பைலட் லைசென்ஸ் கிடைக்கலை. அதனால, நான் ஏரோ மாடலிங் பக்கம் திரும்பினேன். ரிமோட்டினால் இயக்கக் கூடிய சின்னச் சின்ன விமானங்கள் எங்கிட்ட நிறைய இருக்கு. அதையெல்லாம் தனியாருக்கு சொந்தமான இடத்துல பறக்க விடுவேன். 'ஆரம்பம்', 'வீரம்' ரெண்டு படமும் முடிஞ்ச பிறகு, கால்ல ஒரு சின்ன ஆபரேஷன் பாக்கி இருக்கு, அதை பண்ணிக்கப் போறேன். அதுக்கப்பறம் ஆறு மாசத்துக்கு புது படம் ஒத்துக்கப் போறதில்லை. கால் சரியா குணமாகறதுக்காக மட்டும் இல்லை, அந்த ஆறு மாசத்துல ஏரோ மாடலிங்ல ஈடுபடப்போறேன். போட்டோகிராபியைப் பொருத்தவரை, அது எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம். வித்யாசமான விஷயங்களை படம் பிடிக்கணும்னு எப்பவும் ஆசை உண்டு. அதனால அதை செஞ்சுகிட்டிருக்கேன்.!"
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT