Published : 09 May 2017 01:55 PM
Last Updated : 09 May 2017 01:55 PM
'இறுதிச்சுற்று' படத்தைத் தொடர்ந்து உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி அடுத்த படத்தை இயக்க திட்டமிட்டுள்ளார் சுதா கோங்கரா.
மாதவன், ரித்திகா சிங், நாசர் உள்ளிட்ட பலர் நடிக்க, சுதா கோங்கரா இயக்கத்தில் உருவான படம் 'இறுதிச்சுற்று'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பு பெற்றது.
'இறுதிச்சுற்று' படத்தை தெலுங்கில் வெங்கடேஷ் நாயகனாக நடிக்க 'குரு' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. அதனையும் சுதா கோங்கராவே இயக்கினார். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
தற்போது மீண்டும் ஒரு தமிழ் படம் இயக்கும் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் சுதா கோங்கரா. அப்படத்தின் கதைகளம் குறித்து அவரிடம் கேட்ட போது "அடுத்து தமிழ்ப்படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டு வேலைகளைத் தொடங்கியுள்ளேன். வித்தியாசமான முயற்சி என்றால் வேறு எந்த மொழியிலும் இல்லாத வரவேற்பு தமிழில் கிடைக்கும். நானும் தமிழ் படங்களின் தீவிர ரசிகை என்பதால், அந்த வரவேற்பு எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது.
அதனாலேயே என் அடுத்த பட வேலையை இங்கு தொடங்கியுள்ளேன். எப்போதுமே கருத்து சொல்ல வேண்டும் என்று ஒரு விஷயத்தைத் தொடமாட்டேன். கதையும், சூழலும் என்ன வேண்டுகிறதோ அதை நோக்கி என் பயணம் இருக்கும். விளையாட்டை மையமாக வைத்து ஒரு படம் செய்யலாம் என்று தீர்மானித்துக்கொண்டு ‘இறுதிச்சுற்று’ வேலையை ஆரம்பிக்கவில்லை. அதுகூட இயல்பாக அமைந்ததுதான்.
இந்தமுறையும் அப்படித்தான். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட களம். த்ரில்லர் விஷயங்களும், வெளியில் பார்த்த சம்பவங்களின் பாதிப்பும் அதிகம் இருக்கும். நிஜ வாழ்க்கையை பிரதிபலிக்கும் படைப்பாகவும் இருக்கும். தற்போது எழுத்துப் பணியில் இருக்கிறேன். அது முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கும்" என்று தெரிவித்தார் இயக்குநர் சுதா கோங்கரா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT