Published : 27 Mar 2014 08:50 AM
Last Updated : 27 Mar 2014 08:50 AM

‘நல்ல படத்துக்காக காத்திருப்பதில் தப்பில்லை’

மிக நீண்ட நாட்கள் தயாரிப்புக்கு பிறகு ஒரு வழியாக திரைக்கு வர தயாராகி இருக்கிறது ‘நெடுஞ் சாலை’. இரண்டரை ஆண்டுகள் நீண்ட தயாரிப்புக்கு பிறகு இப்படம் திரைக்கு வருவதில் உற்சாகமாக இருக்கிறார்கள் படத்தின் நாயகன் ஆரியும், நாயகி சிவதாவும். படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி பரபரப்பாய் இருக்கும் அவர்களிடம் ‘நெடுஞ்சாலை’ அனுபவத்தைப் பற்றிக் கேட்டோம்.

முதலில் பேச ஆரம்பித்த நாயகன் ஆரி, “வளர்ந்து வரும் நடிகர்களுக்கு மக்கள்கிட்ட சேர்ற மாதிரி படம் அமைவது ரொம்ப கஷ்டம். விக்ரமுக்கு ஒரு ‘சேது’, சூர்யாவுக்கு ஒரு ‘நந்தா’ன்னு இப்படி நிறைய உதாரணங்களைச் சொல்லலாம். அந்த வகையில் இந்தப் படம் எனக்கு முக்கியமான படமா அமையும்னு நம்புறேன். இந்த படத்துல என்னோட கேரக்டர் ரொம்பவே புதுசு. எனக்கு தெரிஞ்சு 100 வருட சினிமாவில் சொல்லப்படாத கதைக்களம் இது.

இந்த படத்தில் என் கேரக்டருக்கான மெனக்கிடல் ஜாஸ்தியா இருந்துச்சு. ரெண்டரை வருஷம் படத்துக்காக உடம்பு எடையை கூட்டினேன், டூப் இல்லாம நிறைய காட்சிகள் நடிச்சிருக்கேன். எனக்கு சிகரெட் பிடிக்கிற பழக்கம் கிடையாது. இந்த கேரக்டர் பீடி குடிக்கணும்னு சொன்னாங்க. அதுக்காக பீடி குடிக்க ஆரம்பிச்சேன்.

தினமும் ஆபிஸ் வருவேன். உதவி இயக்குநர் ஒருவரை கூட்டிட்டு அப்படியே டீக்கடைக்கு போவேன். டீ சாப்பிட்டு, பீடி குடிச்சிட்டு அப்படியே ஊர் சுத்துவேன். பீடி அணைக்கிறப்போ கூட கையால் அணைச்சு தான் கீழே போடுவான்னு சொல்லிட்டாங்க. அதுக்காகவும் சூட்டைப் பொறுத்துக்கிட்டு நிறைய பயிற்சி செய்தேன். இப்போ எல்லாரும் டிரெய்லர் பாத்துட்டு, பாடல்கள் பாத்துட்டு நல்லாயிருக்குனு பாராட்டுறாங்கன்னா கண்டிப்பாக அதுக்கு கிருஷ்ணா சார் தான் காரணம். ஏன்னா, அவருதான் எனக்கு எல்லாமே சொல்லிக் கொடுத்தார்” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நாயகி சிவதா, “இந்த படத்துக்காக எனக்கு நிறைய மேக்கப் டெஸ்ட் இருந்துச்சு. ஷுட்டிங் ஆரம்பிச்சு நாலு நாள் கழிச்சு தான் என்னோட மேக்கப் எல்லாமே ஒ.கே ஆச்சு. இந்தப் படத்துல நான் தாபா வச்சிருக்கிற பொண்ணா நடிக்கிறேன்.

ரெண்டு பாட்டு, மூணு சீனுன்னு வராம இந்த படத்துல எனக்கு முக்கியமான கேரக்டர் அமைஞ் சிருக்கு. படம் பாக்கிறவங்க மனசுல நிச்சயம் எனக்கு நல்ல இடம் கிடைக்கும்” என்று நம்பிக்கையோடு கூறினார்.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கின்போது இவர்களுக்கு ஒரு விபத்தும் ஏற்பட்டுள்ளது. அதுபற்றிக் கூறிய சிவதா, “ரோட்ல விழுந்து கிடக்கிற இவரை நான் எம்80 வண்டி ஓட்டிட்டு வந்து துாக்கிற மாதிரி ஒரு காட்சி. வண்டி ஓட்டிட்டு வந்து ப்ரேக் சரியா பிடிக்காம இவரு கைல ஏத்தி இறக்கிட்டேன். அதுல கீழே விழுந்து கால்ல நல்ல அடி. இவருக்கு கைலயும் நல்ல அடி. இயக்குநர் சொன்ன சீன் அப்படியே உல்டாவா நடந்தது. இவரு வந்து என்னை தூக்கினார்” என்று கூற ஆரி தனது அடிபட்ட கையை மீண்டும் ஒருமுறை பார்த்துக்கொண்டார்.

இந்தப் படத்துக்காக இரண்டரை வருஷம் வெயிட் பண்ணி இருக்கீங்களே என்று கேட்டதற்கு, “ இப்படி ஒரு நல்ல படத்துக்காக காத்திருப்பதில் தப்பில்லை. இந்தப் படம் எங்கள் வாழ்க்கையை மாற்றும் என்று நம்புகிறோம்” என்று கோரஸாய் சொன்னார்கள் இருவரும்.

அவர்களின் நம்பிக்கை ஜெயிக்கட்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x