Published : 02 Sep 2016 05:10 PM
Last Updated : 02 Sep 2016 05:10 PM
'காக்கா முட்டை' படைத்த மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இரண்டாவது படம் 'குற்றமே தண்டனை'.
கண் பார்வைக் கோளாறால் அவதிப்படும் விதார்த், அதை சிகிச்சை மூலம் சரிசெய்ய நினைக்கிறார். அதற்கிடையே அவர் வசிக்கும் இடத்தில் ஒரு கொலை நிகழ்த்தப்படுகிறது. அந்தக் குற்றம் யாரால் எப்படி நடந்தது, அதில் சம்பந்தப்பட்டவர்கள் யார், அதற்கான தண்டனை யாருக்கு? அவற்றில் பல கோணங்களிலும் சம்பந்தப்பட்ட நபர் ஆகும் விதார்த்தின் நிலை என்ன? என்பதை அழுத்தமாக விவரிக்கிறது கதையும் திரைக்கதையும்.
பார்வைக் கோளாறால் வருந்துவது, அதை மற்றவர்களுக்கு தெரியாமல் மெயின்டெய்ன் செய்வது, சிகிச்சைக்காக அலைவது, பணத்தை ஏற்பாடு செய்வதில் காட்டும் தீவிரம், கிளிகளுக்கு தீனி போடுவது, சுயநலத்திலும் நேர்மையைக் கடைபிடிப்பது, குற்ற உணர்வில் கலங்குவது என அச்சு அசலாக வெகு இயல்பான நடிப்பை வழங்கிய விதார்த் நடிப்பு அதற்குப் பிறகு வேற லெவல் ஆகிறது. விதார்த்துக்கு இது முக்கியமான படம். இனி கதையம்சம் உள்ள திருப்புமுனை திரைப்படங்களில் விதார்த்தை பார்க்கலாம் என்பதற்கான நம்பிக்கை அளித்துள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ், பூஜா தேவார்யா ஆகிய இருவரும் பொருத்தமான பாத்திர வார்ப்புகள். கதாபாத்திரத்துக்கான பங்களிப்பை குறைவில்லாமல் வழங்கியிருக்கிறார்கள்.
மாரிமுத்து, 'பசி' சத்யா, ரகுமான் போன்ற சில கதாபாத்திரங்களில் குரு சோமசுந்தரம் கவனிக்க வைக்கிறார். நாசரின் கதாபாத்திரம் பார்வையாளர்களுக்கான மனவோட்டத்தின் கண்ணாடியாக தனித்து நிற்கிறது.
துல்லியமாக ஒரு கிரைம் த்ரில்லர் படத்தைக் கொடுத்ததற்காக இயக்குநர் மணிகண்டனுக்கு வாழ்த்துகள். எளிமையான கதையை அழுத்தமாகவும், வலிமையாகவும் கொடுத்ததில் ஆனந்த் அண்ணாமலையும், மணிகண்டனும் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.
பாடல்கள் இல்லாத படத்தில் காட்சிகளுடன் கைகோத்துச் செல்கிறது இளையராஜாவின் பின்னணி இசை. மணிகண்டனின் ஒளிப்பதிவில் நுட்பமும் வசீகரமும் ஒருசேரக் கவர்கிறது.
'நம்ம ரேட்டை நாம்தான் முடிவு பண்ணணும்', சரி தப்புன்னு எதுவும் இல்லை. நீ எடுத்த முடிவை நான் சொல்லணும்னு நினைக்கிற', 'எது தேவையோ அதுவே தர்மம்' என சின்ன சின்ன வசனங்கள் கூட சூழலோடு சேர்த்து புரிந்துகொள்ளும்படியாக செதுக்கி இருப்பது இயக்குநரின் புத்திசாலித்தனத்தைப் பிரதிபலிக்கிறது.
ஒரு குற்றம் செய்துட்டு அதை மறைக்க அடுத்தடுத்து குற்றம் செய்தா தண்டனையிலிருந்து தப்பித்துவிடலாம். ஆனால், மனசாட்சி தரும் தண்டனையை அனுபவிச்சுதான் ஆகணும் என்பதை நெற்றிப்பொட்டில் அறைந்த மாதிரி சொல்லியிருக்கும் விதம் அபாரம்.
படத்தில் வரும் கதாபாத்திரங்கள் செய்த குற்றம் என்ன? அதற்கான தண்டனை என்ன? என்பதை பார்வையாளர்களுக்கு கடத்திய இயக்குநர், அது குறித்த சிந்தனையையும் விரிவுபடுத்தி இருப்பது படைப்பின் வலிமைக்கான உதாரணமாக சொல்லலாம். அதே சமயத்தில் யதார்த்தம் மீறாமல் பார்வையாளர்களுக்கு புதிய அனுபவம் தரும் படமாகவும் உள்ளது.
படம் பார்த்து முடிந்ததும் ஒரு பார்வையாளர் தமிழில் ஒரு ஈரானிய சினிமா என்று சொல்லிக்கொண்டிருந்தார். வித்தியாசம் ஒன்றுதான். ஈரானிய சினிமாவுக்கு ஆங்கிலத்தில் சப் டைட்டில் போடுவார்கள். தமிழில் வந்திருக்கும் குற்றமே தண்டனைக்கு அந்த சப் டைட்டில் அவசியம் இல்லை. மற்றபடி, உலக சினிமாவுக்கான வலிமையும்,கச்சிதமும், மொழியும் 'குற்றமே தண்டனை' படத்தில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT