Published : 12 Dec 2013 01:34 PM
Last Updated : 12 Dec 2013 01:34 PM
ரஜினியின் படங்களில் அவரது ஸ்டைலுக்கு நிகராக ரசிகர்களை கவரும் மற்றொரு விஷயம் பஞ்ச் டயலாக்குகள். அப்படி அவரது ரசிகர்களைக் கவர்ந்த பஞ்ச் டயலாக்குகளில் ‘அருணாச்சலம்’ படத்தில் வரும், “ஆண்டவன் சொல்றான். அருணாச்சலம் முடிக்கிறான்” என்ற பஞ்ச் டயலாக்கும் ஒன்று. இந்த பஞ்ச் டயலாக் உருவான விதத்தை ரஜினியின் நண்பரும் வசனகர்த்தாவுமான கிரேஸி மோகன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்:
ரஜினியின் ‘ராகவேந்திரா’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு வந்தபோது நான் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு இருந்த வேலைப்பளுவால் அந்தப் படத்திற்கு வசனம் எழுத முடியவில்லை. அதற்காக மிகவும் வருத்தப்பட்டேன். 12 வருடங்களுக்கு பிறகு குறிஞ்சி மலர் பூப்பதைப்போல அவர் நடிப்பில் வெளியான ‘அருணாச்சலம்’ படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு அமைந்தது.
படத்தில் ஒரு பஞ்ச் டயலாக் வேண்டும் என்று ரஜினி என்னிடம் கேட்டார். கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வாராவாரம் திருவல்லிக்கேணி ராகவேந்திரா கோயிலுக்கு சென்று வருபவன் நான். அப்படி ஒரு வியாழக்கிழமை அதிகாலை கோயிலுக்குப் போனபோது, ‘ராகவேந்திரா சொல்கிறார், அருணாச்சலம் முடிக்கிறார்’ என்ற வசனம் தோன்றியது. கவிதாலயா தயாரிப்பில் வெளிவந்த ராகவேந்திராவில் விட்டதை அருணாச்சலம் படத்தில் பிடித்தோம் என்ற எண்ணத்தில் உள்ளுக்குள் தோன்றியிருக்கலாம் என்று நினைக்கிறேன். அதை அப்படியே ஆனாவுக்கு அனா போட்டு ‘ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் முடிக்கிறான்’ என்ற பஞ்ச் டயலாக்கை எழுதி சூப்பர் ஸ்டாரிடம் நீட்டினேன். பார்த்துவிட்டு சந்தோஷமாகப் பாராட்டினார். அவர் மிகச்சிறந்த மனிதர். பல்லாண்டு வாழ வாழ்த்துகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT