Published : 25 Apr 2014 08:01 AM
Last Updated : 25 Apr 2014 08:01 AM
ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சினேகா, குஷ்பு உள்ளிட்ட பல்வேறு சினிமா நட்சத்திரங்கள் சென்னையில் உள்ள வாக்குச்சாவடி களில் வாக்குகளை பதிவு செய்தனர்.
சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி யில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச் சாவடியில் வியாழக்கிழமை காலை 7.05 மணிக்கு ரஜினிகாந்த வாக்களித்தார். வாக்களித்த பின் வெளியே வந்த ரஜினியிடம் நிருபர்கள் பேட்டி எடுக்க முயன்றனர். ஆனால், அவர் பேட்டி கொடுக்காமல் வேகமாக காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டார். கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது ரஜினி யாருக்கு வாக்களித்தார் என்பது செய்தி சேகரிக்க வந்த கேமராவில் பதிவாகியது. இதனால், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதனால் இந்த முறை வீடியோ கேமரா மற்றும் பத்திரிகை போட்டோகிராபர்கள் யாரும் வாக்களிக்கும் இடத்திற்கு அருகே அனுமதிக்கப்படவில்லை.
ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளியில் நடிகர் கமலஹாசன், நடிகை கவுதமியுடன் காலை 8 மணிக்கு வந்து வாக்களித்தார். தான் வாக்களிப்பதை படம் பிடிக்க வந்த கேமராமேன்களிடம், வாக்களிப்பதை படம்பிடிக்காமல் சற்று தள்ளி நின்று படம் பிடிக்குமாறு கேட்டுக்கொண்டார். வாக்களித்த பின் நிருபர்களிடம் பேசிய அவர், “இந்தியா சிறந்த ஜனநாயக நாடு என்பதை நிரூபிப்பதற்கு மக்கள் அதிக அளவில் வந்து வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்” என்றார்.
நடிகர் அஜீத், மனைவி ஷாலினி யுடன் திருவான்மியூர் குப்பத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்து வரிசையில் நின்று 7.15 மணிக்கு வாக்களித்தார். அஜீத்தை பார்க்க ரசிகர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பத்திரிகை போட்டோ கிராபர் ஒருவரின் கேமரா லென்ஸ் கீழே விழுந்தது. அஜித் அதை எடுத்து போட்டோகிராபரிடம் கொடுத்தார். இந்த தள்ளுமுள்ளு சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அடையாறு டெலிபோன் எக்சேஞ்ஜ் அருகில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியில் காலை 9.45 மணிக்கு நடிகர் விஜய் வாக்களித் தார். நடிகை குஷ்பு, கணவர் சுந்தர்.சி- யுடன் சாந்தோமில் உள்ள பள்ளியில் காலை 8 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார். நடிகர் செந்தில் சாலி கிராமத்தில் உள்ள காவேரி பள்ளியில் வாக்களித்தார். இதே வாக்குச்சாவடியில் இயக்குநர் ஹரி, அவரது மனைவி ப்ரீத்தா, நடிகர் பிரேம், டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர், இசையமைப்பாளர் சிற்பி ஆகியோர் வாக்களித்தனர்.
நடிகர்கள் சூர்யா, கார்த்தி ஆகியோர் தி.நகரில் உள்ள இந்தி பிரச்சார சபாவில் பகல் 12 மணிக்கு வாக்களித்தனர். இவர்களுடன் இவர்களின் தந்தை நடிகர் சிவகுமாரும் வாக்களித்தார். இதே வாக்குச் சாவடியில் நடிகை சினேகா காலை 11 மணிக்கு வாக்களித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT