Published : 08 Mar 2017 11:26 AM
Last Updated : 08 Mar 2017 11:26 AM
"எவ்வளவு படங்கள் நடித்தோம் என கணக்கெடுக்க ஆரம்பித்தேன். ஒரு கட்டத்தில் விட்டுவிட்டேன். ஒரு 750 படங்களுக்கு மேல் இருக்கலாம்..." என்று ஆரம்பமே ஆச்சர்யத்தை உண்டாக்கினார் கோவை சரளா. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய சினிமாவில் தற்போதும் முன்னணி காமெடி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவரிடம் தொடர்ந்த நீண்ட உரையாடலிருந்து...
தென்னிந்திய மொழிகள் நடித்த நீங்கள் ஏன் இந்தியில் நடிக்கவில்லை?
இந்தியில் நிறைய வாய்ப்புகள், பெரிய கதாபாத்திரங்கள் கூட வந்தது. சுமார் 70 நாட்கள் படப்பிடிப்புக்கு கேட்டார்கள். நான் அங்கு போய் தங்கியிருந்து நடிக்க வேண்டும். அது முடியாத காரியம். இங்கே நல்லபடியாக போகும் போது ஏன் என்று விட்டு விட்டேன்.
எந்த மொழி நாயகன், நாயகி, குணச்சித்திர நடிகர்கள் என யாராக இருந்தாலும் ஒடுற குதிரைக்கு தான் மார்க்கெட். 1000 படங்கள் நடித்துவிட்டு, 5 வருடங்கள் படங்களில் எதுவும் நடிக்கவில்லை என்றால் உங்களை கண்டுகொள்ளவே மாட்டார்கள். அது தான் சினிமா.
நீங்கள் திருமணம் செய்து கொள்ளாததிற்கு காரணம் என்ன?
எவ்வளவு சந்தோஷமாக நிம்மதியாக இருக்கிறேன். பையனுக்கு திருமணம் செய்து வைத்தவுடன், யாரையும் கண்டு கொள்ளாமல் மனைவி பின்னாடி போய்விடுவார்கள். இதெல்லாம் நடக்கிறது. இதை எல்லாம் நான் ஏன் அனுபவிக்க வேண்டும். நான் வித்தியாசமாக இருந்துவிட்டுப் போகிறேன்.
ஒரு குகைக்குள் போகும் வரை அந்த குகைக்குள் என்ன இருக்கும் என்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உள்ளே போனவுடன் வெளியே இருப்பவர்களைப் பார்தது, உங்களை மாதிரி நானும் அங்கேயே நின்றிருந்திருக்கலாம் என சொல்வார்கள். திருமணமான பெண்ணில் 90% பேரின் மனதுக்குள் இருப்பது இந்த எண்ணம் தான். என்னை மாதிரி இருந்தாலும் கஷ்டம் தான். அதனை நான் மறுக்கவில்லை. தனியாக வாழ்வது என்பது ஒரு மிகப்பெரிய குடும்பத்துக்கு சமம். ஒரு குழந்தை பிறந்தால், அந்த குழந்தையை சுற்றியே வாழ்க்கை இருக்கும். ஆனால், என்னைப் போன்றவர்களுக்கு அனைவருமே குழந்தைகள் தான். எங்களுக்கு தான் பிரச்சினைகள் அதிகம்.
உண்மையில் நீங்கள் யாரையும் காதலிக்கவில்லையா...
காதல் எல்லாம் செய்திருந்தால் இந்நேரம் திருமணம் செய்திருப்பேன். காலில் விழுந்தாவது தாலி கட்டுயா என்று கேட்டிருப்பேன். சிறு வயதில் எல்லாம் சாதிக்க வேண்டும் என்ற வெறி மட்டும் இருந்தது. குதிரைக்கு கடிவாளம் போட்டது மாதிரி என்னுடைய பார்வை எல்லாம் ஒரே பக்கமாக இருந்தது. எனக்கு உண்மையில் யார் மீதும் காதல் வரவில்லை. என்னை யாரும் காதலிக்கவும் இல்லை.
இவரோடு நடிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஏதேனும் உள்ளதா?
யாருமே கிடையாது. எப்போதுமே நம்பர் 1 நடிகையாக இருக்க வேண்டும் என்று நினைப்பேன். என்ன தான் அற்புதமாக நடித்தாலும், அப்படம் மக்களிடையே வரவேற்பு பெற்றால் தான் நமக்கு பெயர். அப்படி வெற்றிக் கிடைத்தாலும் முழுக்க இயக்குநரையும், நாயகனையும் தான் சேர்கிறது. அதற்குப் பிறகு தான் நமக்கு பேர் கிடைக்கும். என்னுடன் யார் நடித்தாலும், அவங்களையும் நான் ஒரு கமல்ஹாசனாக நினைத்து தான் நடிப்பேன்.
தமிழ் சினிமாவில் தற்போது உள்ள மாற்றத்தை எப்படி உங்களுடைய கருத்து?
முதலில் சினிமா கட்டுக்கோப்பாக இருந்தது. என்றைக்கு படப்பிடிப்புக்கு வெளியூருக்கு செல்ல ஆரம்பித்தோமோ அன்று சினிமா என்றால் இவ்வளவு தானா என்று மக்களுக்கு காட்டிக் கொடுத்துவிட்டோம். இப்போது யார் வேண்டுமானாலும் படம் இயக்கலாம், நடிக்கலாம். முன்பு எல்லாம் ஒல்லியாக இருந்தால் பட வாய்ப்பே கிடைக்காது.
இன்று ஒருவருடைய வீட்டுக்குச் சென்றால் நம்முடைய வாழ்க்கை வரலாற்றையே எடுத்து இவ்வளவு படங்கள் நடித்துவிட்டீர்கள், எவ்வளவு சம்பாத்தியம் வைத்திருக்கிறீர்கள் என கேட்கிறார்கள். அதுமட்டுமன்றி முன்பு கேமிரா இருந்தால் தான் போட்டோ எடுப்பார்கள். இன்று மொபையில் கேமிரா இருக்கிறதா, அதை வைத்துக் கொண்டு செல்ஃபி எடுக்கிறார்கள். 10 போட்டோ எடுப்பார்கள், அனைத்துக்கும் சிரித்துக் கொண்டே நாம் நிற்க வேண்டும். கோயிலுக்குப் போனால், துக்க வீட்டுக்கு போனால் எதுக்கு வந்திருக்கிறோம் என்றுக் கூட தெரியாமல் மேடம் ஒரு செல்ஃபி ப்ளீஸ் என்று கேட்கிறார்கள். என்னத்த சொல்வது என்று தெரியவில்லை. எங்கு போனாலும் சுதந்திரமில்லை.
உங்களுடைய வளர்ச்சிக்கு காரணமானவர்கள் யார்?
நான் தானா நடிகையாக வந்தேன் என்பதே எனக்கு இன்று வரை ஆச்சர்யமான விஷயம். கடவுளின் ஆசியால் கமல் சார், வி.சேகர் சார், ராம.நாராயணன் சார், பஞ்சு அருணாசலம் சார், தூயவன் சார், பாக்யராஜ் சார் இவர்களை எல்லாம் என் வாழ்க்கையில் மறக்கவே முடியாது. இவர்கள் எல்லாம் நான் வளர்வதற்கு ஏணியாக இருந்தவர்கள். அந்த ஏணியில் ஏறி இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன்.
உங்களுடன் நடித்த காமெடி நடிகர்கள் ஒவ்வொருவரையும் பற்றி?
கவுண்டமணி: படத்தில் எப்படி நக்கலாக பார்க்கிறோமோ, அப்படித் தான் நேரிலும் இருப்பார். படப்பிடிப்பில் ஒருவரை விடாமல் கலாய்ப்பது அவருடைய ஸ்டைல். என்ன நக்கல் செய்துவிட்டு இருந்தாலும், படத்தில் அவரோட காட்சிகளை சிறப்பாக செய்துவிடுவார். இன்று வரும் நடிகர்கள் கூட அவரை தான் பின்பற்றுகிறார்கள். நான் அவருடன் நடிக்கும் போது, எனக்கு அவரைப் பற்றி தெரியவில்லை. இன்று அவர் எந்தளவுக்கு இருந்திருக்கிறார் என தெரிகிறது.
செந்தில்: யாரிடமும் பேச மாட்டார். ஆனால் அமைதியாக போய் நம்மைப் பற்றி யாரிடமாவது சொல்லிக் கொடுத்துவிடுவார். நல்ல மனிதர். நானும் செந்திலும் கிட்டதட்ட 60 படங்கள் இணைந்து நடித்திருக்கிறோம்.
எஸ்.எஸ்.சந்திரன்: எனக்கு பாடி லாங்க்வேஜ் சொல்லிக் கொடுத்தே அவர் தான். இன்றைக்கு மறைந்திருந்தாலும் எனக்கு காமெடி காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார்.
சின்னி ஜெயந்த் மற்றும் சார்லி: நாங்கள் எல்லாம் பள்ளிக்கூட மாணவர்கள் மாதிரி இருந்தோம். தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்வதே ஒரு கட்டத்தில் போராட்டமாகி விட்டது.
வடிவேலு: தமிழ் திரையுலகிற்கு கிடைத்த ஒரு அற்புதமான நடிகர். அவருடைய டைம்மிங் காமெடியை அடித்துக் கொள்ளவே முடியாது. நான் படப்பிடிப்பில் பேசவே பயப்படுவேன். ஆனால், அவரோ பயமில்லாமல் அனைவரிடமும் பேசுவார். என்னால் முடியும் என்று மிகப்பெரிய நம்பிக்கை கொண்ட மனிதர். அந்தளவுக்கு அவரிடம் திறமை இருந்தது. என்ன பாத்திரம் கொடுத்தாலும், அதோடு ஒன்றிவிடுவார். தன்னை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைக்காத ஒரு நடிகர். வடிவேலுவின் இடம் இன்று வரைக்கும் காலியாக தான் இருக்கிறது. அந்த இடத்தை பிடிக்க யாருமே வரவில்லை.
விவேக்: கலைவாணர் பாணியை பின்பற்றினார். சென்டிமென்ட் எல்லாம் வைத்து காமெடி செய்தார். அதற்கு பிறகு தன்னுடைய பாணியை மாற்றிக் கொண்டார்.
வெண்ணிறடை மூர்த்தி: இன்றைக்கு வரைக்கும் ஒரு பிரம்மாண்டமாக நான் வியந்து பார்ப்பது சாரைத் தான். படப்பிடிப்பில் நாங்கள் இருவரும் இருந்தால் அட்டகாசம் தான். இன்றைக்கு வரைக்கும் அவருடைய மெம்மரி பவரைப் பார்த்து ஆச்சர்யப்படுவேன். அந்த காலத்தில் இருந்து இன்று வரைக்கும் நடித்துக் கொண்டிருக்கிற ஒரே நடிகர் வெண்ணிறடை மூர்த்தி சார் தான். அவருக்கு எல்லாம் பாராட்டு விழா செய்ய வேண்டும். அந்த மாதிரியான நடிகர் அவர். அவருக்கு வயதாகிவிட்டது என்று சொல்லவே மாட்டேன். ஞாபக சக்தி, வசன உச்சரிப்பு, பேசுகிற பேச்சு, நடை, கண் பார்வை இதெல்லாம் சரியாக இருக்கும் வரை யார் வயதாகிவிட்டது என்றாலும் ஒத்துக் கொள்ள முடியாது. அவர் ஒரு லெஜண்ட்.
நீங்கள் யாருடைய வழியை பின்பற்றி வந்தேன் என சொல்வீர்கள்?
யாரும் எனக்கு முன்மாதிரியும் கிடையாது. ஏனென்றால் அவர்களை மாதிரியே எனக்கு அனைத்து நடிப்பும் வந்துவிடும். இன்று பழைய நடிகர்களைப் போல மிமிக்ரி பண்ணுபவர்கள் அவர்களைப் போலவே இருப்பார்கள். அவர்களைப் பார்க்கும் போது நான் மிகவும் வருந்துவேன். அவர்களால் தனியாக எதுவுமே பண்ணமுடியாது. நான் அவர்களை சந்திக்கும் போதெல்லாம் அழைத்து "உங்களுடைய தனித்திறமையை வெளியே கொண்டு வாருங்கள்" என்று சொல்வேன். இன்னொருத்தர் மாதிரி செய்து உங்களால் சம்பாதித்து, பெரிய ஆளாக வரவே முடியாது.
காமெடி - குணச்சித்திரம் இரண்டில் எது உங்களுக்கு நடிக்க பிடித்திருக்கிறது?
இரண்டு கண்களில் எந்த கண் உங்களுக்கு பிடிக்கும் என்று கேட்பது போல் இருக்கிறது. சிறுவயதில் இருந்தே நான் நடிப்பை காதலித்துத் தான் சினிமாவுக்கு வந்தேன். அதில் எந்த பாத்திரம் வந்தாலும் சவாலாக ஏற்றுக் கொண்டு தான் நடிக்கிறேன். தினமும் படப்பிடிப்புக்கு போது, ஒரு புதுமுக நடிகையாக நினைத்துக் கொண்டு தான் வருகிறேன். என்னுடைய தொழிலுக்கு நான் ரொம்ப உண்மையாக இருக்கிறேன்.
உங்கள் கனவு பாத்திரம் எது?
'தில்லானா மோகனம்பாள்' ரீமேக் செய்யப்பட்டால் 'ஜில் ஜில்' ரமாமணி பாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அதே போல் நிறைய இருக்கின்றன. மைல் கல் போன்று ஒரு பாத்திரம் பண்ணவேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT