Published : 03 Feb 2017 09:15 AM
Last Updated : 03 Feb 2017 09:15 AM
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நடிகர் விஷால் இடைநீக்கம் செய்யப்பட்டது தொடர்பாக இன்று காலைக்குள் சுமூக முடிவெடுக்க சங்க நிர்வாகிகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு திரைப்பட தயாரிப் பாளர் சங்கத்தின் செயல்பாடுகளை விமர்சித்து வார இதழ் மற்றும் தொலைக்காட்சிக்கு நடிகர் விஷால் பேட்டியளித்தார். இதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து கடந்த 2016 நவம்பர் 14-ம் தேதி அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த தனி நீதிபதி கே.கல்யாணசுந்தரம், விஷாலின் இடை நீக்கத்தை ரத்து செய்ய மறுத்து மனுவை தள்ளுபடி செய்தார். இந்த உத்தரவை எதிர்த்து விஷால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘தயாரிப்பாளர் சங்கத்துக்கு வரும் மார்ச் 5-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் பிப்.4-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. எனவே இடைநீக்கத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும்’’ என கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை நேற்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம். சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது விஷால் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘தனிப்பட்ட முறையில் விஷால் யாரையும் விமர்சிக்கவில்லை. அவரது பேச்சு யாருக்காவது வேதனையை ஏற்படுத்தியிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்தும் மனுத் தாக்கல் செய்துள்ளார்’’ என்றார்.
தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘‘சங்க உறுப்பினராக உள்ள ஒருவர் சங்கத்தைப் பற்றியே அவதூறாக பேசுவதை ஏற்க முடியாது. விஷால் பேசியதை அனுமதித்தால் இதேபோல பலர் பேசத் தொடங்கிவிடுவர். சங்க நிர்வாகிகள் போண்டா, பஜ்ஜி சாப்பிட்டுக்கொண்டு சங்கத்தில் கட்டப்பஞ்சாயத்து நடத்துவதாக தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இது சங்கத்தின் கண்ணியத்தை குறைப்பதாக உள்ளது’’ என்றார்.
கருத்து சுதந்திரம்
அப்போது விஷால் தரப்பு வழக்கறிஞர் குறுக்கிட்டு, ‘‘விஷால் பஞ்சாயத்து எனக்கூறியது சமரச பேச்சுவார்த்தையைத் தானேயன்றி, கட்டப்பஞ்சாயத்து என்ற அர்த்தத்தில் இல்லை. தவிர தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி, வருத்தம் தெரி விக்கும் முன்பாக அளிக்கப்பட்ட ஒன்று’’ என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘‘அரசியலமைப்பு சட்டத்தின்படி கருத்து சுதந்திரமும், பேச்சுரிமையும் அனைவருக்கும் உள்ளது. அதில் யாரும் தலை யிட்டு யாரையும் தடுக்க உரிமை யில்லை. மனுதாரர் பேசியது பொதுவான விஷயம்தான். அவர் பஞ்சாயத்து என்று தான் கூறியுள்ளார். பஞ்சாயத்துக் கும், கட்டப்பஞ்சாயத்துக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. இது ஒரு சாதாரண விஷயம். இதற்காக இடைநீக்கம் என்பது சரியான முடிவாக இருக்காது.
இது தொடர்பாக நீங்களே சுமுகமான முடிவை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் நாங்கள் உத்தரவிடுகிறோம். அந்த முடிவை 3-ம் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு தெரிவிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT