Published : 22 Feb 2017 09:12 AM
Last Updated : 22 Feb 2017 09:12 AM
கலை என்பதே சங்கமம்தான் என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.
‘கலா சங்கமம்’ என்ற பெயரில் 30-வது அகில இந்திய மத்திய வருவாய்துறை கலாச்சார சந்திப்பு சென்னையில் நேற்று தொடங்கியது. சென்னை தியாகராய நகர் வாணி மகாலில் வரும் 23-ம் தேதி வரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நடனம், நாடகம், இசை, பாட்டு என 13 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன. இதில் நாடுமுழுவதிலும் இருந்து வருவாய்துறையைச் சேர்ந்த பல்வேறு பிரிவுகளில் பணியாற்றும் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த விழாவை நேற்று தொடங்கி வைத்து இசையமைப்பாளர் இளைய ராஜா பேசியதாவது: கலை என்பதே சங்கமம்தான். பல ஸ்வரங்கள் அதில் சங்கமம் ஆகிறது. அவ்வாறு சங்கமம் ஆகும்போதுதான் கலை வெளியே வருகிறது. இந்த ‘கலா சங்கமம்’ வெற்றி கரமாக அமையும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. நிகழச்சியில் பங் கேற்கும் அனைவருக்கும் எனது வாழ்த் துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
பரதநாட்டிய கலைஞர் பத்மா சுப்ரமண்யம் பேசுகையில், “மக்களின் மனங்களைக் கலைஞர்களால் கவர முடியும். கலைஞர்கள் என்பவர்கள் அரசியல், நிலப்பரப்பு எல்லைகளை கடந்தவர்கள். மனித உணர்வுகள் என்பவை உலகம் முழுக்க ஒன்றுதான். அந்த உணர்வுகளை மக்கள் கண்முன் கொண்டு வருபவர்கள்தான் கலைஞர்கள். மனித மனங்களுக்கு இசையால் அமைதியை அளிக்க முடியும். இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதுதான் மிக முக்கியம். பரிசு வெல்வது முக்கியமல்ல” என்றார்.
இந்த விழாவில் வருமான வரித் துறை தலைமை ஆணையர் (தமிழ் நாடு, புதுச்சேரி) ஏ.கே.ஸ்ரீவத்சவா, சுங்கத்துறை தலைமை ஆணையர் பிரணாப் குமார் தாஸ், வருமான வரித்துறை ஆணையர்கள் வி.பழனி வேல்ராஜன், ஜே.ஆல்பர்ட் உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT