Published : 24 Mar 2017 06:25 PM
Last Updated : 24 Mar 2017 06:25 PM
மக்கு: எப்பவும் நீதான் படம் பார்த்துட்டு வர்ற ஜக்கு. இந்த முறை நான் பார்த்துட்டேனே.
ஜக்கு: பார்றா! என்னவோ நடந்திருக்கு. யார் படம்?
மக்கு: 'பாம்புசட்டை' டா.
ஜக்கு: எப்பூடி இருக்கு?
மக்கு: ஒரு வரி பன்ச் சொல்லுன்னு கேட்டு இம்சை பண்ண மாட்டியே?
ஜக்கு: இது வேறயா. சரி, கதையை சொல்லு.
மக்கு: விதவை அண்ணிக்கு மறுமணம் செய்துவைக்க சூழலோடு போராடும் ஒரு மைத்துனனின் கதைதான் 'பாம்புசட்டை'.
ஜக்கு: 'அண்ணிக்கு மரியாதை'ன்னு டைட்டில் வைச்சிருக்கலாமோ?
மக்கு: உன் புத்திசாலித்தனத்தை எல்லாம் படத்தோட டைட்டில்ல காட்டாதே ஜக்கு.
ஜக்கு: யப்பா... நீ படம் பார்த்துட்டு வந்துட்ட. சும்மாவே பில்டப் கொடுப்ப. இப்போ சொல்லவா வேணும்
மக்கு: நான் சொல்லணுமா, வேணாமா?
ஜக்கு: சொல்லுப்பா. கோச்சிக்காதே. 120 ரூபாய் மிச்சமாகுமா இல்லையான்னு நானும் தெரிஞ்சுக்கணும்ல.
மக்கு: பாபி சிம்ஹா கிடைச்ச வேலையில ஒரு மாசத்துக்கு மேல நீடிக்க மாட்டாரு. யார் மனசையும் புண்படுத்தாம, கஷ்டப்படுத்தாம இருக்கணும்னு நினைக்கறவர் சிம்ஹா. தையல் மிஷின் கம்பெனில வேலை செய்யுற கீர்த்தி சுரேஷை விரட்டி விரட்டி காதலிக்கறார்.
விதவை அண்ணிக்கு இன்னொரு கல்யாணம் செய்து வைக்க நினைக்கிறார். இதுல வர்ற பிரச்சினைகள், சங்கடங்கள், இழப்புகள்தான் மீதிக் கதை.
ஜக்கு: ம்ம். நல்ல லைனாதான் இருக்கு. எப்படி எடுத்திருக்காங்க?
மக்கு: காதல் காட்சிகள் வழக்கம் போல பழசாதான் இருக்கு. அதுல எந்த சுவாரஸ்யமும் இல்லை. சில தருணங்கள் மட்டும் படத்துல அழகா, அழுத்தமா இருக்கு.
ஜக்கு: எப்படிப்பட்ட தருணங்கள் மக்கு?
மக்கு: சிம்பிளா சொல்றேன். கதை முழுசா வெளிப்படுத்தக் கூடாது. சார்லி ஒரு பருக்கை சோறு சிந்துனதுக்காக கொடுக்குற விளக்கம், ஒரு பாட்டி மறுமணம் பற்றி பேசுற இடம், சார்லி ரிஸ்க் எடுத்து செய்ற வேலையும், அதற்குப் பிறகான அவரது நடவடிக்கையும்.
ஜக்கு: நிறுத்து.... நிறுத்து... நிறுத்து... ஹீரோ பத்தி சொல்லவே இல்லை.
மக்கு: பாபி சிம்ஹா நல்லவரா, இன்னொருத்தருக்காக கலங்குற மனிதரா சரியா பொருந்தி இருக்கார். ஆனா, நிறைய இடங்கள்ல ரஜினியை இமிடேட் பண்றார். அது தானா வந்ததா, இல்லை அவரா அமைச்சுக்கிட்டாரான்னு தெரியலை. ஆனா, அதைத் தவிர்த்து தனித்தன்மையை வளர்த்துக்கணும்.
ஜக்கு: கீர்த்தி சுரேஷ் எப்படி?
மக்கு: சின்ன சின்ன அசைவு, அழுகை, சிரிப்புன்னு தனக்கே உரிய முத்திரையை கீர்த்தி சுரேஷ் இந்தப் படத்துலயும் பதிச்சிருக்காங்க. பானுவுக்கு முக்கியமான வேடம். நிறைவா பண்ணியிருக்காங்க.
ஜக்கு: அப்புறம்?
மக்கு: குரு சோமசுந்தரம், கே. ராஜன், சரவண சுப்பையா, 'நான் கடவுள்' ராஜேந்திரன், கவிஞர் விக்ரமாதித்யன், ஆதிரா பாண்டியலட்சுமி, ஆர்.வி.உதயகுமார்னு நிறைய பேர் இருக்காங்க. அதுல குரு சோமசுந்தரம் நடிப்பு நுட்பமா இருந்தது.
ஜக்கு: சூப்பர் சிங்கர் அஜிஷ் இதுல இசையமைப்பாளரா அறிமுகம் ஆகியிருக்காருப்பா.
மக்கு: அவர்தானா ஜக்கு? சில இடங்கள்ல மட்டும் இசை கவனிக்க வைச்சது. கேமராமேன் வெங்கடேஷ் நல்லா பண்ணியிருக்கார். எடிட்டர் ராஜா சேதுபதி இன்னும் நிறைய கத்தரி போட்டிருக்கலாம்.
ஜக்கு: இவ்ளோ சொல்ற. டைரக்டர் பத்தி சொல்லவே இல்லை.
மக்கு: ஆடம் தாசனோட முதல் படம். கள்ள நோட்டு பிரச்சினையை மட்டும் முன்னிறுத்துறார். முதல் பாதியில காதல் காட்சிகள் ஒரே கிளிஷே ரகம் ஜக்கு. ஏன் இன்னும் விரட்டி, துரத்தி காதலிக்குறதையே சினிமாவா பண்றாங்க? அப்புறம் தேவையில்லாத பாடல்கள். இரண்டாம் பாதியில கதை எதை நோக்கி நகருதுன்னு தெரியலை. அவ்ளோ குழப்பம். சீரற்ற நிலையில இருக்கு.
ஜக்கு: உன் கண்ணுக்கு நல்லதே தெரியாதா?
மக்கு: என்ன இப்படி சொல்லிட்டே? அண்ணி - மைத்துனன் இடையே உள்ள அன்பை, நட்பை அழகா, மரியாதையா, கண்ணியமா சொல்லி இருக்காங்க.
''தப்பு செஞ்சாதான் தப்புன்னு இல்லை. தப்பு செய்யணும்னு நினைச்சாலே தப்புதான்'', ''வயிறு பசிச்சா ஒரு உயிரை அடிச்சுத் தின்றதுல தப்பில்லைன்னா, பணப் பசி எடுத்தா இன்னொரு மனுஷனை அடிச்சுப் பிடுங்குறதும் தப்பில்லை'', ''தப்பு பண்ணுவங்க தண்டனையில இருந்து தள்ளிப் போகலாம். ஆனா, தப்பிக்க முடியாது'' போன்ற வசனங்கள் செம்ம.
கடைசி வரைக்கும் தப்புக்கு அடிபணியாம, குறிக்கோள்ல உறுதியா நிற்குற கதாபாத்திரம் உதாரணமா இருக்கு.
ஜக்கு: இப்போவாச்சும் நல்லதையும் சொன்னியே.
மக்கு: 'பாம்புசட்டை'யில சட்டை கிழிஞ்சிருக்குப்பா. சட்டை இல்லைன்னாதான் பிரச்சினை.
ஜக்கு: அதுவும் சரிதான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT