Published : 04 Feb 2017 11:53 AM
Last Updated : 04 Feb 2017 11:53 AM
'எமன்' இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது, 'தமிழ் ராக்கர்ஸ்' இணையத்தை கடுமையாக சாடினார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா.
ஜீவா சங்கர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மியா ஜார்ஜ், தியாகராஜன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எமன்'. லைக்கா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், அறிவழகன், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தார்கள்.
இதில் ஞானவேல்ராஜா பேசும் போது 'தமிழ் ராக்கர்ஸ்' இணையத்தை கடுமையாக சாடினார். இது குறித்து அவர் பேசியது, "விஜய் ஆண்டனியை அறிமுக காலத்திலிருந்து பார்த்து வருகிறேன். இப்படத்தின் பாடல்களைப் பார்க்கும் போது அவருடைய வளர்ச்சி தெரிகிறது. ஜீவா சங்கர் இப்படத்தின் மூலமாக அடுத்த கட்டத்துக்குச் செல்வார்.
'போகன்' தற்போது வெளியாகியுள்ளது. அதற்குள் ஃபேஸ்புக்கில் அப்படத்தை வெளியிட்டுள்ளார்கள். அதன் மூலமாக பல லட்சம் பேர் பார்த்துள்ளார்கள். அப்படத்தின் தயாரிப்பாளருக்கு இதனால் எவ்வளவு பெரிய வலி ஏற்பட்டிருக்கும்.
பவன் கல்யாணுடைய ஒரு படம் எடிட் ஷுட்டிலிருந்து வெளியாகிவிட்டது. இணையத்தில் பதிவேற்றாமல் டிவிடி மட்டும் வந்துவிட்டது. அப்போது பவன் கல்யாண் ரசிகர்களை திரையரங்குகளுக்கு வந்து படங்களைப் பாருங்கள், டிவிடியில் பார்க்க வேண்டாம் என்றார். 7 நாட்கள் பொறுமையாக காத்திருந்து திரையரங்கில் அப்படத்தைப் பார்த்தார்கள்.
ஆனால், இங்கு ஃபேஸ்புக்கில் முழுப்படத்தையும் பகிரும் தைரியம் ஒருவருக்கு இருக்கிறது. 'சி 3' திரைப்படம் பிப்ரவரி 9-ம் தேதி வெளியாகிறது. அன்றைய தினம் காலை 11 மணிக்கு LIVE STREAMING செய்கிறோம் என தமிழ் ராக்கர்ஸ் பதிவிட்டு இருக்கிறார்கள். மொத்த 'சி-3' குழுவின் 2 வருட உழைப்பு.
பைனான்ஸ் சரி செய்து படம் வெளிவருமா, இல்லையா என்ற பிரச்சினை ஒருபுறம் இருந்தாலும், இன்னொருபுறம் சில விஷமிகள் நான் 11 மணிக்கு லைவ் (LIVE) போடுவேன் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். இதை ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.
2 நாட்கள் முன்பு வரை தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்க வேண்டாம் என்று இருந்தோம். தமிழ் ராக்கர்ஸ் படத்தை போடுவார்கள் என்பது தெரியும். அவர்களை 6 மாதத்தில் பிடித்து உள்ளே போடுவோம். இப்போதும் எனக்கு அவரைப் பிடிக்கவில்லை, இவரைப் பிடிக்கவில்லை என்று உட்கார்ந்திருந்தோம் என்றால், தொலைக்காட்சி தொடர் வரிசையில் நமது திரைத்துறை சேரும். இது நடக்காமல் இருக்க வேண்டும் என்றால் நல்ல முடிவுகளை உடனே எடுக்க வேண்டும். இந்த மேடையில் இதைப் பேசுவது தவறு. ஆனால், என்னுடைய கோபத்தை எங்கே பேசுவது என தெரியவில்லை.
மக்களுக்கும் எந்த கோபத்தை எங்கு காட்டுவது என தெரியவில்லை. ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்த ஆட்களைத் தவிர மற்ற அனைவரிடமும் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அமைச்சர்களிடம் நாம் எந்த ஒரு கேள்வியையும் கேட்பதில்லை. ஆனால், ஒரு நடிகர் ஏதாவது ஒரு விழாவுக்கு வந்தால் குற்றம், வராவிட்டால் குற்றம் என பேச ஆரம்பித்துவிடுகிறோம். எதற்கு இவ்வளவு பெரிய குற்றச்சாட்டு? எந்த நடிகர் நல்லது பண்ணாமல் இருந்துள்ளார்.
திரைத்துறையில் மட்டும் தான் எந்த ஒரு பொது விஷயம் நடந்தாலும், ரசிகர்களோடு இணைந்து தன் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து செலவு செய்துள்ளார்கள். ஒரு படத்துக்குள் நிறையப் பேர் உழைக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த உழைப்பு உங்களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காக மட்டும் தான். அதனை புரிந்து கொண்டு அதற்கான மரியாதையை திரைத்துறைக்கு கொடுக்க வேண்டும்" என்று பேசினார் ஞானவேல்ராஜா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT