Published : 05 Aug 2016 04:52 PM
Last Updated : 05 Aug 2016 04:52 PM
25-வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் ஜீவாவுக்கு 'திருநாள்' திருப்புமுனையாக இருக்குமா? அல்லது இதுவும் இன்னொரு படம் என்ற ரீதியில் கடந்து போகுமா? என்ற யோசனையுடன் 'திருநாள்' பார்க்க கிளம்பினோம்.
'அம்பாசமுத்திரம் அம்பானி 'படத்துக்குப் பிறகு இயக்குநர் ராம்நாத் இயக்கியுள்ள படம் 'திருநாள்'. நயன்தாராவும் நடித்திருப்பதால் படத்துக்கு கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
திருநாள் எப்படி?
கதை: சாக்கு மண்டியில் வேலை செய்யும் ஜீவா, சரத் லோஹிதஷ்வாவிடம் அடியாளாக இருக்கிறார். ஜீவா, நயன்தாராவைக் காதலிப்பது எதிர்பாரா தருணத்தில் ஊருக்கே தெரிந்துவிடுகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? அடியாள் ஜீவா என்ன ஆகிறார்? காதல் கைகூடியதா? என்பது மீதிக் கதை.
அடியாள் வாழ்க்கையை ஸ்கெட்ச் போட்டு படமாக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் ராம்நாத். அந்த முயற்சி முழுமையடையவில்லை என்பதுதான் வருத்தம்.
அடியாள் கதாபாத்திரத்துக்கு சரியாகப் பொருந்துகிறார் ஜீவா. ஜீவாவுக்கு இது 23-வது படம். மற்றபடி குறிப்பிட்டுச் சொல்ல எதுவும் இல்லை.
நயன்தாராவை 'ஜெனிலியா போலச் செய்தல்' முயற்சி எடுபடவில்லை. சவீதாவின் பின்னணி குரலும் அதற்கு ஒத்துழைப்பு கொடுத்தாலும், நயன்தாராவுக்கு அந்த 'பாணி' ஒட்டவேயில்லை.
சரத் லோஹிதஷ்வா, வ.ஐ.ச.ஜெயபாலன், நந்தகுமார் , முத்துராமன் என நிறைய பேர் வந்து போகிறார்கள்.இதில் சரத்தை தவிர யாருக்கும் எந்த வேலையும் வைக்கவில்லை.
ஜோ மல்லூரி, கருணாஸ், ரமா, மாரிமுத்து ஆகியோர் பொருத்தமான தேர்வு. மீனாட்சியை இன்னும் கொஞ்சம் கண்ணியமாகக் காட்டி இருக்கலாம். கோபிநாத்தின் டெரர் எஃபெக்டுக்கு தியேட்டர் சிரிப்பில் குலுங்குகிறது.
ஸ்ரீ இசையில் 'பழைய சோறு பச்ச மிளகா' பாடல் ரசிக்க வைக்கிறது. பழைய பாடல்களின் துணுக்குகளை ஆங்காங்கே பயன்படுத்தியிருப்பது பொருந்தாமல் துருத்துகிறது. 'திட்டாதே நீ திட்டாதே' பாடலின் வரிகளுக்காக கடும் கண்டனங்கள்.
மகேஷ் முத்துசாமியின் கேமரா சாக்கு மண்டி, லாரி குடோன், தஞ்சாவூர், கும்பகோணம் ஏரியாக்களை நம் கண்களுக்கும் கடத்துகிறது.
அதெப்படி எஸ்.ஐ, நீதிபதி என்று எல்லாரையும் ஆட்டிப் படைக்கும் சரத் ஒரு ஏ.எஸ்.பிக்கு மட்டும் பயந்து பம்முகிறார். அடியாளாக இருக்கும் போது பாசம் காட்டும் ஜீவா, சரத்தின் சுயரூபம் தெரிந்தும் காலில் விழுவது ஏன்? அடிவாங்கி அரிவாள் வெட்டில் காயப்பட்ட பிறகும், கார் வைத்தே பழிவாங்க முடியும் என்று நினைப்பது புத்திசாலித்தனமாக தெரியவில்லை. வில்லனின் எந்த நகர்வையும் தெரிந்துகொள்ளாமல் எப்படி தேமே என்று ஜீவா கிடக்கிறார்.
படத்தின் துவக்கத்தில் கதாபாத்திரங்கள் மனப்பாடம் செய்து ஒப்பிப்பதைப் போல, வசனங்களை சொல்லிக் கடந்துபோவதை கவனிக்கவில்லையா இயக்குநரே? கச்சிதம் இல்லாமல் படம் ஏனோ தானோவென்று காட்சிகளால் நகர்கிறது. இப்படி சொல்ல குறைகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
படத்தில் ஜீவாவுக்கு 'பிளேடு' என்று பெயர். அதை படம் பார்க்கும் ரசிகர்கள் குறியீடாகவும் எடுத்துக்கொள்ளலாம். மொத்தத்தில் 'திருநாள்' ரசிகர்களுக்கு இல்லை என்பது மட்டும் உண்மை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT