Published : 23 Feb 2017 04:26 PM
Last Updated : 23 Feb 2017 04:26 PM
கடந்த 10 ஆண்டு காலமாக, திரைப்பட விநியோகத் துறை மரணப் படுக்கையில் கிடப்பதாகவும், அதற்கு நட்சத்திர நடிகர்களே காரணம் என்றும் பிரபல திரைப்பட விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம் அடுக்கடுக்காக புலம்பியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாட்ஸ் அப் ஆடியோ பதிவின் எழுத்து வடிவம்:
"விநியோகஸ்தர் சார்பாகவும், திரையரங்க உரிமையாளர்கள் சார்பாகவும் பெப்ஸி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆர்.கே செல்வமணிக்கு வாழ்த்துகள்.
பெரிய நடிகர்களுக்கு நாங்கள் ரெட் கார்டு போட்டு விட்டோம் என ஜே.எஸ்.கே சதீஷ் ஒரு தகவல் பகிர்ந்திருந்தார். அது குறித்து சிறிய விளக்கம் தரத்தான் இந்த ஒலிப்பதிவு.
பணம் போட்டு, முதலீடு செய்யக்கூடிய தயாரிப்பாளர்கள் பலர் மிகப்பெரிய நஷ்டத்தில் இருக்கின்றோம். அதிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று பல தயாரிப்பாளர்கள் கதறுகின்றனர். இன்னொரு பக்கம் எங்களின் கதறல் வேறு யாருக்கும் கேட்பதில்லை. விநியோகஸ்தர்களாகிய நாங்கள் எந்த நிலையில் இருக்கின்றோம் என்பதை புரிய வைக்கதான் இந்த வாட்ஸாப் குரல் பதிவு.
விநியோகஸ்தர்கள் எல்லாரும் பணக்காரர்கள் இல்லை. அவர்களும் பல இடங்களில் பணம் கடன் வாங்கிதான் இந்தத் தொழிலில் இருக்கிறார்கள்.
கடந்த 6-7 மாத காலமாக, 'கபாலி' வெளியீட்டிலிருந்து கணக்கிடுங்கள். 'கபாலி', தீபாவளிக்கு வந்த 'கொடி', 'காஷ்மோரா', பிறகு வந்த 'தொடரி', 'பைரவா', 'போகன்', 'சிங்கம் 3' என முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இந்த படங்கள் பற்றி தயாரிப்பாளர்கள் பரபரப்பாக மாபெரும் வெற்றி, இமயம் தாண்டும் வெற்றி என்றெல்லாம் விளம்பரப்படுத்தியுள்ளார்கள். 'கபாலி' படத்துக்கு, தாணு, மகிழ்ச்சி மகிழ்ச்சி என 200 நாள் வரை விளம்பரம் செய்துள்ளார். உங்கள் மனசாட்சிப்படி விளம்பரம் செய்யுங்கள்.
உண்மையிலேயே அந்தப் படம் 200 நாள் ஓடிய படமா? பொதுமக்களை வேண்டுமானால் இதன் மூலம் ஏமாற்றலாம். ஆனால் திரைத்துறையில் இருப்பவர்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். நான் சொன்ன இந்தப் படங்களில் ஒரு விநியோகஸ்தர் கூட சம்பாதிக்கவில்லை. அப்படி இருக்கும்போது எதை வைத்து வெற்றி என்று சொல்லுகிறீர்கள்?
வெளியான இரண்டாவது நாள் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் வெற்றி விழா கொண்டாடுகிறீர்கள். உங்களுக்கெல்லாம் மனசாட்சி இருக்கிறதா? 'கத்தி சண்டை', 'ரெமோ'வும் இந்தப் பட்டியலில் இருக்கிறது. 'ரெமோ'வை பொறுத்தவரை இரண்டு ஏரியாக்களில் லாபம் பார்த்தது. கோயம்புத்தூரில் 5 சதவித லாபம், செங்கல்பட்டில் 10 சதவித லாபம். மீதி ஏரியாக்களில் நஷ்டமே.
இந்த படங்களுக்கெல்லாம் எதை வைத்து வெற்றி விழா கொண்டாடுகிறீர்கள்? எல்லாரும் எம்.ஜி.ஆர் குறித்து பேசுகின்றனர். நான் தான் மக்கள் திலகம், அடுத்த எம்.ஜி.ஆர் நான் தான் என்றெல்லாம் பேசுகிறார்கள். ஒருவராவது, எம்.ஜி.ஆரோ, சிவாஜியோ, ஏன் ரஜினியோகூட கடைபிடித்த நடைமுறையை கடைபிடிக்கிறார்களா?
ஒரு படம் வெளியானால் அந்தப் படம் சரியாக ஓடுமா, அனைவருக்கும் லாபகரமாக இருக்குமா என எம்.ஜி.ஆர் கேட்டறிவாராம். படம் சரியாக ஓடவில்லை என்றால் தயாரிப்பாளரிடம் இன்னொரு படத்தை, நல்ல கதையாக தேர்வு செய்யுங்கள், எடுக்கலாம் என்பாராம். கதை தேர்வே தேவர் பிலிம்ஸ் போன்ற தயாரிப்பு நிறுவனம் தான் முடிவு செய்து சொல்லுமாம்.
அப்படி ஒவ்வொரு விநியோகஸ்தரும் லாபம் பார்த்தார்களா என கேட்டு செயல்பட்டதால் தான் இந்த துறை 50 ஆண்டு காலமாக உயிரோடு இருக்கிறது. கடைசி 10 ஆண்டு காலம், இந்தத் துறை மரணப் படுக்கைக்கு போக வேண்டிய காரணம் என்ன? இந்த நடிகர்கள் தான்.
மேலே சொன்ன படங்களின் நடிகர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? படத்தின் விநியோகஸ்தர்களை சந்தித்திருக்க வேண்டும். மொத்தம் 10 விநியோகஸ்தர்கள் தான். அவர்களை சந்தித்து தங்கள் படங்களின் வசூல் குறித்து கேட்டறிந்திருக்க வேண்டும். உங்களுக்கு லாபம் இருக்கிறதா என்று கேட்டு வெற்றி விழா கொண்டாடிருக்க வேண்டும். வெள்ளிக்கிழமை வெளியான படத்துக்கு சனிக்கிழமை வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். அந்தப் படத்தின் வெற்றிக்காக, படத்தில் உழைத்தவர்களுக்கு தங்கச் சங்கிலி போடுகிறோம் என்கிறீர்கள்.
நடிகர், இயக்குநருக்கு பெரிய கார் வாங்கித் தருகிறேன் என்கிறார். அந்தப் படத்தின் விநியோகஸ்தர் தனது காரை விற்றுக்கொண்டிருகிறார் என்பது தெரியுமா? அந்தப் பட தயாரிப்பாளரின் நண்பர் பேசுகிறார் படம் 300 கோடி க்ளப்பில் இணைந்துவிட்டது என்று. பிறகு அரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் பொய் கணக்கு காட்டுகின்றனர் என்று குற்றம் சாட்டுவார்கள்.
தமிழ்நாட்டில் இருக்கும் அத்தனை அரங்கு உரிமையாளர்கள் விநியோகஸ்தர்கள் பொய் சொல்பவர்களா? நீங்கள் மட்டும்தான் உண்மை பேசுபவரா? விநியோகஸ்தரிடம் கேட்க வேண்டும். நீங்கள் வெளியிடும் திரையரங்கைக் கேளுங்கள் எவ்வளவு வசூல் என்று. அவர்கள் சொல்லட்டும் எவ்வளவு வசூல்.
நீங்கள் அந்த ஹீரோ உச்சி குளிர வேண்டும் என மேடையில் ஏதோ சொல்லி, அடுத்த படம் அவரை வைத்து எடுக்க வேண்டும் என்பதற்காக இல்லாத ஒன்றை ஏன் சொல்லுகிறீர்கள்? நாங்களும் பொறுமையாகத்தான் இருந்தோம்.
நேற்று ஃபெடரேஷன் கூட்டம் நடந்தது. அதில் நாங்கள் ரெட் கார்டு போட்டிருப்பதாக சில செய்திகள் வந்ததால்தான் நான் இப்போது இதை பகிர்கிறேன். மனதார நாங்கள் யாருக்கும் ரெட் கார்டு போடவில்லை, தேவையுமில்லை. வாங்கிய படங்களின் விலை மற்றும் நஷ்ட விவரம் குறித்து விநியோகஸ்தர்கள் கொடுத்த கடிதத்தை நேற்றைய கூட்டத்தில் படித்தோம். படித்து வேதனைப்பட்டோம்.
மிகப்பெரிய நஷ்டம் தான், ஏன் அந்த விலைக்கு வாங்குகிறீர்கள் என வந்திருந்தவர்களிடம் கேட்டோம்.
இனி அந்த குறிப்பிட்ட நடிகரின் படத்தை வாங்கப்போவதில்லை. அதிக நஷ்டம் வந்துவிட்டது என நாங்கள் சொல்லவில்லை, அந்தந்த விநியோகஸ்தர்கள் சொன்னார்கள். அதனால் அடுத்த படங்களை வாங்க வேண்டாம் என்ற பேச்சும் வந்தது.
நிர்வாகத்தைச் சேர்ந்த நாங்கள் அப்படி செய்ய முடியாது. ரெட் கார்டு போட முடியாது என்றோம். எதற்காக நடிகர்களுக்கு ரெட் கார்டு போட வேண்டும்? நீங்கள் புத்திசாலித்தனமாக இருந்திருக்க வேண்டும், யோசித்து படங்களை வாங்க வேண்டும் என்றோம்.
அதான் வாங்க மாட்டோம் என்று சொல்லிவிட்டீர்களே. அந்த 7 நடிகர்களும் அவர்களது படங்களை சொந்தமாக வெளியிடட்டும். வாங்குபவர்கள் வாங்கட்டும். மற்றபடி அந்த 7 நடிகர்களும் நேரடியாக வெளியிடட்டும். அதற்கான வசதியை நாம் செய்து தருவோம். உண்மையான வசூல் என்ன என்பதையும், தங்களது மதிப்பு என்ன என்பதையும் அவர்களே நேரடியாகத் தெரிந்து கொள்ளட்டும். அதுதான் இந்த ஃபெடரேஷனின் ஆசை.
அப்போதாவது, நாம் வாங்கும் சம்பளம் நியாயம் தானா, படம் விற்கும் விலை நியாயம் தானா என்பது அவர்களுக்குத் தெரியும். கமல்ஹாசன் அவர்கள் சொந்தமாக தனது 2 படங்களை வெளியிட்டார். அப்போது நிலவரம் அவருக்குத் தெரிந்தது. ரஜினியும் 'பாபா', 'படையப்பா' வெளியிட்டார். 'ராகவேந்திரா' படம் வெளியானதும் அனைவரையும் கூப்பிட்டு அடுத்த படத்துக்கு சம்பளமே இல்லாமல் நடித்து தருவதாகச் சொன்னார். அந்தப் படம் தான் 'வேலைக்காரன்'. விநியோகஸ்தர்களின் நஷ்டத்தை ஈடுகட்டினார். அதையெல்லாம் நாங்கள் மறக்கவில்லை.
அப்படிப்பட்ட ரஜினியிடம் 'கபாலி' வசூலை தாணு சொல்லியிருக்க வேண்டும். நேற்று கூட்டத்தில் 'கபாலி' விநியோகஸ்தர்கள் எல்லாம் புலம்புகின்றனர். யாருக்கும் ரெட் கார்டு போடவில்லை. யாரையும் இடையூறு செய்ய நாங்கள் இல்லை. தொழில் ஒழுங்காக நடக்கவே நாங்கள் இருக்கிறோம். எந்த நடிகருக்கும், என்றும் இடையூறு தர மாட்டோம். எங்கள் உறுப்பினர் அவராகவே படத்தை வாங்க மாட்டேன் என்கிறார். நஷ்டத்தை ஈடுகட்டச் சொல்லி கேட்கிறார்.
அடுத்த படம் அவர்களாகவே வெளியிடும் வரை காத்திருங்கள் என்று மட்டும் தான் நாங்கள் சொல்லியிருக்கிறோம். யார் படத்தையும் வாங்க வேண்டாம். தடை செய்யலாம் என்றெல்லாம் சொல்லவில்லை.
இத்துடன், சமீப காலங்களில், சில நடிகர்கள் அரசியல் ரீதியான கருத்துகளை சொல்ல ஆரம்பித்துவிட்டனர். தனது படம் வாங்கிய விநியோகஸ்தர் எப்படி இருக்கிறார், உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று பார்க்க கூட நேரம் இல்லை. ஆனால், நான் முதல்வரை பார்க்கப் போகிறேன், பிரதமரைப் பார்க்கப் போகிறேன், நானும் ஒரு பிரஜை என்றெல்லாம் பேச ஆரம்பித்துவிட்டனர்.
நீங்கள் இதெல்லாம் பேச முழு உரிமை இருக்கிறது. அதில் தவறில்லை. ஆனால் அதற்கு முன்னால் உங்கள் பட விநியோகஸ்தரைப் பாருங்கள். அவர்கள் சொல்வதை கேட்டீர்கள் என்றால் நீங்களும் நன்றாக இருப்பீர்கள், அவர்களும் நன்றாக இருப்பீர்கள். ஜல்லிக்கட்டு, வர்தா புயலுக்கெல்லாம் குரல் கொடுக்கும் நீங்கள், உங்கள் படம் வெளியாகும்போது அதிக டிக்கெட் கட்டணம் வசூலித்தாலும் குரல் கொடுங்கள். என் படம் வரும்போது 100 ரூபாய்க்கு மேல் யாரும் டிக்கெட் விற்கக் கூடாது என அறிக்கை கொடுங்கள். ரசிகர்கள் சந்தோஷமாக படம் பார்க்கட்டும். அவர்கள் நன்றாக இருந்தால் தான் நாமெல்லாம் பிழைப்பு நடத்த முடியும். ஆனால் அதெல்லாம் யாரும் செய்வதில்லை.
தயாரிப்பாளர்கள் ரத்தக் கண்ணீர் வடிக்கின்றனர். அவர்கள் சொல்வதை முன்னணி நடிகர்கள் கேளுங்கள். அவர்கள் சிரமம் என்ன, விநியோகஸ்தர்கள் சிரமம் என்ன, திரையரங்கு உரிமையாளர்களின் சிரமம் என்ன என்று, முதலீடு செய்யும் இந்த மூன்று பிரிவின் நிலையை கேட்டறிந்து கொள்ளுங்கள். சாப்பாட்டுக்கு வழி இருக்கிறதா எனக் கேளுங்கள்.
கடவுள் புண்ணியத்தில் நான் வியாபாரத்தில் தான் சம்பாதித்தேன். சாப்பாட்டுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. நான் சாப்பிடும் ஒவ்வொரு பருக்கையும் சினிமாவில் சம்பாதித்ததுதான். இதை எந்த சபையில் வேண்டுமானாலும் சொல்லுவேன். ஆனால் நான் சற்று புத்திசாலித்தனமாக தொழில் செய்தேன். எவ்வளவு பெரிய நடிகர் படம் என்றாலும் நான் கேட்கும் விலைக்கு இல்லையென்றால் வாங்க மாட்டேன். அதனால் 35 ஆண்டு காலமாக என்னால் இங்கு தொழில் செய்ய முடிந்தது.
ஆனால் புதிதாக இந்த தொழிலுக்கு வருபவர்கள், கடன் வங்கி வருகின்றனர். திருச்சி விநியோகஸ்தர் நாராயணசாமி சொன்னார். நான் ஒரு படத்தை வாங்கியிருக்கிறேன், படம் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் மாபெரும் வெற்றி, இதுவரை சினிமாவில் இல்லாத வசூல் என்றெல்லாம் விளம்பரம் செய்துவிட்டனர். நான் கடன் வாங்கியவர் படம் அவ்வளவு பெரிய வெற்றியா, பணம் எங்கே என கேட்கிறார். ஆனால் முதலீட்டில் 25 சதவிதம் போய்விடும் என அவருக்கு தெரியுமா சொல்லுங்கள்? அந்தக் கடனை நான் எப்படி அடைப்பது என யோசித்துக் கொண்டிருப்பதாகச் சொன்னார். இவர்களின் விளம்பரத்தால் நான் ஏமாற்றிவிட்டேன் என கடன் கொடுத்தவர் நினைப்பதாக சொன்னார்.
கடன் கொடுப்பவருக்கு தெரியுமா? அவர் அப்படித்தானே நினைக்க முடியும். அதனால் போலியாக இப்படி ஒரு வெற்றியைக் கொண்டாடி எங்களுக்கெல்லாம் மன உளைச்சலை தந்துவிட்டீர்கள். அதனால், முன்னணி நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நேரடியாக படம் வெளியிட்டு தெரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு அத்தனை உதவியும் செய்கிறோம். உறுதுணையாய் நிற்கிறோம். கேட்கும் பணத்தைத் தருகிறோம்.
எங்களுக்கு 10 சதவிதம் போதும். இன்னும் பெரிய நடிகர் என்றால் 5 சதவித லாபத்தைத் தாருங்கள் போதும். நாங்கள் அதிகமாக கேட்க மாட்டோம். 300 கோடியெல்லாம் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். 25 - 30 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் அந்த மொத்த வசூலை அவரே வைத்துக் கொள்ளட்டும். அவர் நன்றாக இருக்கட்டும். அவர்கள் நன்றாக இருந்தால் தான் நாங்கள் நன்றாக இருக்க முடியும்.
நாங்க எந்த தீர்மானமும் போடவில்லை. தவறான செய்தியை வெளியிட வேண்டாம். எங்கள் உறுப்பினர்களின் கண்ணீரைப் பார்க்க முடியவில்லை. அவ்வளவு கடிதங்கள் இந்த 6 மாதங்களில் வந்துள்ளன. அதை வைத்து விவாதித்து தான் அறிவுரை கூறியிருக்கிறோம்.
நடிகர்கள் வெளியிடட்டும், எந்த திரையரங்கு வேண்டுமோ தருகிறோம். எந்த இடைஞ்சலும், கட்டுப்பாடும் வராது. ஏதாவது ஒரு திரையரங்கில் கணக்கு ஏமாற்றுகிறார்கள் என்றால் அதற்கான தண்டனையை தாருங்கள். ஆனால் சங்கத்தின் சார்பாக என்னால் உறுதியாக சொல்ல முடியும், 100-ல் 95 பேர் உண்மையான கணக்கையே தருகிறார்கள். அதேபோல நஷ்டத்தில் இருக்கும் விநியோகஸ்தர்கள் ஏன் பொய் கணக்கு காட்ட வேண்டும்?
அதனால், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களை கை காட்டி நீங்கள் தப்பிக்க வேண்டாம். நீங்களே சம்பாதியுங்கள், எங்களுக்கு சிறிய சதவிதம் தாருங்கள். எல்லோரும் சந்தோஷமாக இருப்போம். இதுதான் ஃபெடரேஷனின் முடிவு. வணக்கம்" என்று திருப்பூர் சுப்ரமணியம் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT